இந்தியா மதசார்பற்ற நாடிலிருந்து இந்து நாடாக மாறும் அபாயம் உள்ளது.. அமெரிக்க எம்.பி. பேச்சு
வாஷிங்டன்: இந்தியா இந்து தேசமாக மாறும் அபாயத்தில் இருப்பதாக அமெரிக்க எம்.பி. ஆன்டி லெவின் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இப்படியொரு நிலைமைக்கு சென்றுவிடக் கூடாது என்றும் ஆன்டி லெவின் கூறியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க எம்.பி.யின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, பிற மதத்தினர் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை அக்கட்சியின் தலைவர்களும், எம்.பி., எம்எல்ஏக்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா மீது மாறும் பார்வை
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்; முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பன போன்ற வெறுப்பு பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. எனினும், அதுபோன்று பேசுவோர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் இந்தியா குறித்து மேற்கத்திய நாடுகள் அவ்வப்போது மதம் சார்ந்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில், அமெரிக்க எம்.பி. ஒருவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பவன்"
அமெரிக்க மக்களவையில் ஜனநாயகக் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் ஆன்டி லெவின் (62). இவரது பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, நாடாளுமன்றத்தில் அவர் இறுதி உரையாற்றினார். அவர் பேசியதாவது: நான் எம்.பி.யாக பதவி வகித்த காலத்தில் உலகின் பல நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை குறித்து பேசியிருக்கிறேன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அமெரிக்க நாடாளுமன்றத்தில் எழுப்பினால், அது உலகின் கவனத்தை பெறும். அதன் மூலம் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்பதே எனது நம்பிக்கை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள மக்களின் மனித உரிமைகளுக்காக நான் குரல் கொடுத்திருக்கிறேன்.

இந்து தேசமாக மாறும் அபாயம்
இந்தியாவை பொறுத்தவரை, தற்போது அந்நாடு மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதாக தெரிகிறது. அதாவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் இந்தியா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்து தேசமாக மாறும் அபாயத்தில் உள்ளது. மதசார்பற்ற ஜனநாயம் என புகழப்பட்ட ஒரூ நாடு, இந்து நாடாக மாறுவது மிகவும் ஆபத்தானது. நான் இந்து, சமணம், பெளத்தம் உட்பட இந்தியாவில் உள்ள மதங்களை நேசிக்கிறேன். அதனால்தான், இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்கள் இந்துவாக இருக்கிறார்கள், முஸ்லிமாக இருக்கிறார்கள்.. அது பிரச்சினை அல்ல. அவர்கள் உரிமை காக்கப்பட வேண்டும். இவ்வாறு ஆன்டி லெவின் பேசினார்.

முதன்முறை அல்ல
அவரது இந்த பேச்சுக்கு பாஜகவும், பல இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆன்டி லெவின் இந்தியா குறித்து கருத்து தெரிவிப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னரும் பல சமயங்களில் அவர் இந்திய அரசாங்கத்தை விமர்சித்து பேசியிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஆன்டி லெவின் நாடாளுமன்றத்தில் பேசுகையில், "காஷ்மீரில் பல கொடுமைகள் நடைபெறுகின்றன. அங்குள்ள மக்கள் வதைக்கப்படுகிறார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டை எந்த திசையில் கொண்டு செல்கிறார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்" என ஆன்டி லெவின் பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications