வரியை காட்டி மிரட்டினேன்.. வழிக்கு வந்துட்டாங்க! இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்
வாஷிங்டன்: இந்தியா பாகிஸ்தான் கடுமையாக மோதிக்கொண்டிருந்தார்கள். நான் தான் வரியை விதித்துவிடுவேன் என மிரட்டினேன். உடனே வழிக்கு வந்துவிட்டார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தம்பட்டம் அடித்துள்ளார். உண்மையிலேயே கடுமையாக மோதிக் கொண்டிருந்தார்கள்.. 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அப்போது வரியை காரணம் காட்டியே போரை நிறுத்தினேன் என கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 8 போர்களை நிறுத்தியிருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலை யுத்தமாக மாறாமால் தடுத்ததாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.

இந்தியாவின் அதிரடி தாக்குதல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியவிவின் எல்லையோர பகுதிகளை குறிவைத்து டிரோன் தாக்குதலை நடத்தியது.
இதனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தடுத்தததோடு, பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீதும் பிரமோஸ் ஏவுகணைகளை கொண்டு அட்டாகசம் செய்தது.. இந்தியாவின் அதிரடி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்தே சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது என்று இந்தியா கூறி வருகிறது.
வரி விதிப்பேன் என்று சொன்னதும்
நிலமை இப்படி இருக்க, இந்தியா - பாகிஸ்தான் இடயேயான சண்டையை நான் தான் நிறுத்தினேன் என்றும் வரிகளை காட்டி இரு நாடுகளையும் வழிக்கு கொண்டு வந்ததாக டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா இதனை மறுத்தாலும் டிரம்ப் தொடர்ந்து பேசி சுயதம்பட்டம் அடித்து வருகிறார். இதுவரை 80 க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் பேசியுள்ள நிலையில், மீண்டும் இது பற்றி பேசியுள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டிஅளித்த டிரம்ப் கூறியதாவது:-
நான் எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன். எட்டு போர்களில் 6 போர்களை வரிகள் மூலமாக நிறுத்தப்பட்டுள்ளன. வேறு விதமாக சொல்வது என்றால், போரை நிறுத்தாவிட்டால் உங்கள் மீது வரிவிதிப்பு செய்யப்படும் என்று கூறினேன். ஏனெனில் மக்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை.
அணு ஆயுத போராக வெடித்து இருக்கும்
இந்தியா- பாகிஸ்தானை பாருங்கள்.. அது அணு ஆயுத போராக வெடித்து இருக்கும். எனது கருத்து என்னவென்றால், உண்மையிலேயே கடுமையாக மோதிக் கொண்டிருந்தார்கள்.. 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்கள் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தார்கள்.
பாகிஸ்தான் பிரதமர் கூட சொன்னார், எங்களைச் சண்டையை நிறுத்தச் செய்ததன் மூலம் குறைந்தது 1 கோடி உயிர்களை டிரம்ப் காப்பாற்றினார் என்று.. ஏனெனில் அவர்கள் அணு ஆயுத போருக்கு போக இருந்தார்கள். என் கருத்து என்னவென்றால் வரிகள் இல்லையென்றால் சண்டை நிறுத்தப்பட்டு இருக்காது" என்றார்.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. இருநாடுகளுக்கும் இடைய சண்டை தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்த போது,, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இருநாடுகளும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக்வும் கூறினர். அதன் பிறகு இந்தியா - பாகிஸ்தான் தரப்பில் இருந்து சண்டை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. டிரம்ப் பலமுறை தம்பட்டம் அடித்து வந்தாலும் இந்தியா தனது நிலைப்பாட்டில் இவ்விவகாரத்தில் உறுதியாக உள்ளது.












Click it and Unblock the Notifications