இந்தியாவில் முஸ்லீம்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது: அமெரிக்க ஆய்வு மையம் சர்வே
வாஷிங்டன்: இந்தியாவில் உள்ள முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மக்கள், அதிக கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளனர், அதைத் தொடர்ந்து இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிக கருவுறும் விகிதம் கொண்டுள்ளனர். ஆனால் கடந்த காலங்களை விட கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.
ஆனால், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் (ஜெயின்) மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளனர்.
இந்த புள்ளி விவரத்தை அமெரிக்க சிந்தனைக் குழு ஒன்று தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஆய்வு
Pew Research Center என்ற ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம் மக்களிடையே, பிற மதத்தினரைவிட, பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தபோதிலும் கூட, கடந்த காலங்களை விட தற்போது அது குறைந்து கொண்டு வருவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்திய முஸ்லீம்களில், மொத்த கருவுறுதல் விகிதம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. ஆம்.. 1992 ல் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 4.4 குழந்தைகள் பிறப்பு என்று இருந்த நிலைமை 2015ல் 2.6 குழந்தைகளாக குறைந்துள்ளது.

சிறுபான்மை மதங்களில் குழந்தை பிறப்பு
"பெரும்பான்மை இந்து மக்கள் மற்றும் முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய, புத்த மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் ஒவ்வொரு மதக் குழுவைச் சேர்ந்த பெண்களும் கருவுறுதல் வீழ்ச்சியைக் கண்டு வருகிறார்கள்" என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

முஸ்லீம் மக்கள் தொகை
"இந்தியாவின் முக்கிய மதக் குழுக்களில் முஸ்லிம்கள் இன்னும் அதிக கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளனர், அதைத் தொடர்ந்து இந்துக்கள் 2.1 என்ற அளவில் உள்ளனர். சமணர்கள் மிகக் குறைந்த கருவுறுதல் வீதத்தைக் கொண்டுள்ளனர். அதாவது ஒரு பெண் 1.2 என்ற விகிதத்தில்தான் கருவுருகிறார். 1992ல் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் சராசரியாக 4 குழந்தைகளை கருவுற்றார். இந்து மதத்தைச் சேர்ந்த பெண் 3.3 என்ற அளவில் கருவுற்றார். இப்போது அது குறைந்துள்ளது, " என்று அந்த அறிக்கை கூறுகிறது.

குறைந்து விட்டது
முஸ்லீம் பெண்களுக்கு 1992ல் இந்து பெண்களை விட சராசரியாக 1.1 குழந்தைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த இடைவெளி 2015க்குள் 0.5 ஆக சுருங்கிவிட்டது.

நாட்டில் இந்துக்கள் எண்ணிக்கை
இந்துக்கள், இந்தியாவின் 120 கோடி மொத்த மக்கள்தொகையில் 79.8 சதவிகிதமாக உள்ளனர். 2011ல் நடத்தப்பட்ட சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த தகவல் இதுவாகும். 2001ல் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இருந்த இந்துக்கள் எண்ணிக்கையைவிட இது, 0.7 சதவிகிதம் குறைவாகும். 1951 ல் இந்துக்கள் மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 84.1% ஆக இருந்தது. அதை ஒப்பிட்டால் இப்போது இந்துக்கள் மக்கள் தொகை விகிதம் 4.3 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில், முஸ்லீம்களின் எண்ணிக்கை, 2001ல் மொத்த மக்கள் தொகையில், 13.4 சதவிகிதமாக இருந்த நிலையில், 2011ல் 14.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 1951 முதல் ஒப்பிட்டால், முஸ்லீம்களின் மக்கள் தொகை இந்தியாவில், 4.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை
கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் சமணர்கள், மீதமுள்ள மொத்த மக்கள்தொகையில் 6 சதவிகிதத்தினராக உள்ளனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து ஒப்பிட்டால் இவர்களின் எண்ணிக்கை பெரிதாக உயரவில்லை. இந்த கணக்கெடுப்பு படி, குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், பெண்களின் கல்வியறிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணங்கள்
ஆயுட்காலம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிலை உயருவது போன்றவையும், கருவுறுதல் நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளவையாகும். பள்ளி, வேலைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற பெண்கள் குறைவான குழந்தைகளை பெறுகிறார்கள். கல்வியறிவு இல்லாத, வேலைக்கு போகாத பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.

மதம் மட்டுமே காரணம் இல்லை
"மக்கள்தொகை வளர்ச்சியானது பெண்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பது மட்டுமல்லாமல், குழந்தை பிறப்புக்கு காரணமாக உள்ள பெண்களின் சமூக நிலைமையை வைத்தும் நடக்கிறது. இந்தியாவிற்குள் மக்கள் வாழும் இடமும், அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சார விதிமுறைகளும் குழந்தை பிறப்பில் பங்கு வகிக்கின்றன. சுருக்கமாக, சொன்னால் மக்களின் மதம் மட்டுமே அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என்பதை தீர்மானிப்பதில்லை. மதம் இதில் ஒரு பங்கு மட்டுமே, " என்று அறுதியிட்டு கூறுகிறது, அந்த ஆய்வு முடிவுகள்.

குறையும் விகிதம்
இந்தியாவின் சராசரி கருவுறுதல் வீதம் தற்போது 2.2 என்ற அளவில் உள்ளது. இது அமெரிக்கா (1.6) போன்ற பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளில் உள்ள விகிதங்களை விட அதிகமாகும். ஆனால் 1992ல் இந்தியாவில் 3.4 என்ற அளவுக்கு இருந்தது கருவுருதல் விகிதம். அது 1951ல் 5.9 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தது.












Click it and Unblock the Notifications