"நான் ஒரு நாட்டின் அதிபர்! என்னை கடத்திவிட்டனர்.." அமெரிக்க நீதிமன்றத்தில் ஆவேசமாக பேசிய மதுரோ
வாஷிங்டன்: வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்றைய தினம் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த மதுரோ, தான் ஒரு நிரபராதி என்று தெரிவித்தார். மேலும், அதிபராக இருந்த தன்னை சிறைபிடித்துவிட்டதாகவும் கூறினார்.
வெனிசுலாவில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் மதுரோ.. அமெரிக்காவுக்குப் போதைப் பொருள் வர மதுரோ தான் காரணம் என டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இந்தச் சூழலில் தான் அமெரிக்கப் படைகள் கடந்த சனிக்கிழமை அவரை கைது செய்தது. மேலும், மதுரோ அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். அமெரிக்கா சிறைகளில் அடைக்கப்பட்டார்.

மதுரோ
சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அவர் நியூயார்க் வளாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.. டிரம்ப் அரசு அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அது தொடர்பான வழக்குகள் நடைபெற்றது.. இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நியூயார்க் நீதிபதி முன்பு ஆஜரான நிக்கோலஸ் மதுரோ, தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தன்னை வெனிசுலா நாட்டின் அதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மதுரோ, தன் மீது அமெரிக்க அரசு சுமத்திய போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் தான் நிரபராதி என்றும் கூறினார்.
நாட்டின் அதிபர்
நீதிமன்றத்தில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய மதுரோ, "என்னைச் சிறை பிடித்துவிட்டனர்.. நான் வெனிசுலா அதிபர்" என்று குறிப்பிட்டார். பின் வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மதுரோ, "நான் நிரபராதி. நான் குற்றவாளி அல்ல. நான் ஒரு கண்ணியமான மனிதன்.. என் நாட்டின் ஜனாதிபதி" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்
வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவர் மனைவியை அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை நள்ளிரவு ராணுவ நடவடிக்கை கைது செய்தது. அதன் பிறகு அவர்கள் வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும், அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளில் ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு எதிராக நடக்கும் மிக முக்கியமான வழக்கு இதுவாகும்.
நீலச் சிறை சீருடை அணிந்த மதுரோவும் அவரது மனைவியும் உள்ளூர் நேரப்படி திங்கள் நண்பகலில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ப்ரூக்ளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், திங்களன்று அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மன்ஹாட்டன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அடுத்த விசாரணை
நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் ஆங்கில மொழியில் நடைபெற்றது. இருப்பினும், மதுரோ மற்றும் அவரது மனைவிக்காக ஸ்பானிஷ் மொழியில் நீதிமன்ற விசாரணைகள் மொழிபெயர்க்கப்பட்டன. இதற்காக அவர்கள் சிறப்பு ஹெட்ஃபோன்களை பயன்படுத்தினர். முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், அடுத்து வழக்கு மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரோ மீது 25 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரோ, அவரது மனைவி மற்றும் அவருடைய கூட்டாளிகள் பல ஆயிரம் டன் போதைப் பொருளை அமெரிக்காவிற்கு அனுப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications