H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஷாக்? சத்தமில்லாமல் டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கும் நடைமுறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிபர் டிரம்ப் மீண்டும் இறங்கியுள்ளார்.. பிறப்புரிமை குடியுரிமை விதியின் காரணமாக குழந்தை பெற்று கொள்வதற்காக மட்டும் அமெரிக்கா செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க சட்டவிதிகளின்படி அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் தானாகவே அந்நாட்டின் குடியுரிமை பெறும். பெற்றோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தாலும் சரி, தற்காலிக விசாவில் இருந்தாலும் சரி, குழந்தைகள் தானாக குடியுரிமை பெறும். இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து எதிர்த்தே வருகிறார்.

பிறப்புரிமை குடியுரிமை
கடந்தாண்டு இதை தடுக்கும் வகையில் டிரம்ப் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதன்படி, அமெரிக்காவில் குழந்தை பிறக்கும்போது அதன் பெற்றோரில் இருவரும் அமெரிக்க குடிமக்களாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களாகவோ இல்லாவிட்டால், அந்த குழந்தைக்கு தானாக குடியுரிமை கிடைக்காது. H-1B, L-1, F-1 மற்றும் சுற்றுலா விசா போன்ற தற்காலிக விசாக்களில் அமெரிக்காவில் இருப்போரின் குழந்தைகளுக்கும் அமெரிக்க விசா கிடைக்காது.
தள்ளுபடி
இருப்பினும், அதை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாக நீதிமன்றம் கூறியது. இது தொடர்பான வழக்கு தனியாக நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க.. இப்போது டிரம்ப் மீண்டும் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார். குறிப்பிட்ட சில பிரிவுகளை குறிவைத்து டிரம்ப் புதிய உத்தரவை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி பிறப்பித்தார். அமெரிக்க குடியுரிமைக்காகவே திட்டமிட்டு அமெரிக்காவில் நுழைவோரை தடுக்கும் வகையிலேயே டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புதிய உத்தரவு சொல்வது என்ன
இதன் சாரம்சம் இரண்டே இரண்டு மேட்டர் தான்.. முதலில் குடியுரிமைக்காக மட்டுமே மண்ணில் குழந்தை பெற்று கொள்ள மட்டுமே அங்கு செல்லும் Birth Tourismஐ தடுப்பது! அவர்களுக்கு இனி விசா வழங்கப்படாது. அடுத்து இது தவிர வெளிநாட்டு அரசு அதிகாரிகள் அல்லது ஏஜெண்டுகளின் குழந்தைகள், எதிரி நாடுகளை சேர்ந்தவர்கள் இதுபோல பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறாத வகையில் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இது பிறப்புரிமை குடியுரிமையை முழுமையாக ரத்து செய்வதற்கான முயற்சி அல்ல என்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கை என டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
இந்தியர்களுக்கு பாதிப்பு?
அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு இது முக்கியமானதாகும். குறிப்பாக H-1B, L-1 விசாக்களில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் F-1 விசாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் குடும்பங்கள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இப்போதைய சட்ட விதிகளின்படி H-1B, H-4, L-1, L-2, F-1 உள்ளிட்ட விசாக்களில் இருக்கும் இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். இப்போது வரை இந்த விதிகளில் மாற்றம் இல்லை.
ஆனால், இதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்பதே டிரம்பின் நிலைப்பாடாக இருக்கிறது. இதை நிர்வாக உத்தரவின் மூலம் நிறைவேற்ற டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்பதை அந்நாட்டு நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதியை கொடுத்தாலும் கூட டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்பது யாருக்குமே தெரியாது என்பதால் இந்தியர்களுக்கு திக்திக் தான்!


Click it and Unblock the Notifications
