"25,000 அமெரிக்கர்கள் உயிருக்கு ஆபத்து.." மின்னல் வேகத்தில் வந்த நீர்மூழ்கி கப்பல்! அடுத்த நொடி பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா நோக்கி வந்து கொண்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 25,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போது தடாலடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். அவர் எப்போது என்ன செய்வார் என்றே யாருக்கும் தெரியாது. அப்படி தான் இன்று காலை திடீரென நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவம் அழித்துள்ளதாகச் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பினார் டிரம்ப். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்க ராணுவம்
அதாவது அமெரிக்காவுக்குப் போதைப்பொருளைக் கடத்தி வந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவம் அழித்துள்ளது. கரீபியன் கடற்பரப்பில் வைத்து அந்த நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.. இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
போதைப் பொருளைக் கடத்தி வந்தவர்களை 'பயங்கரவாதிகள்' என்று குறிப்பிட்ட டிரம்ப், உயிருடன் பிடிபட்ட இருவரும் அவர்களின் தாய்நாடுகளான ஈக்வடார் மற்றும் கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கே அவர்கள் விசாரணையை எதிர்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் நீர்மூழ்கிக் கப்பலை அழித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த கப்பலில் ஃபெண்டானில் மற்றும் பல போதைப்பொருட்கள் நிரம்பியிருந்தன.
25,000 பேர் உயிர்
அதில் நான்கு பயங்கரவாதிகள் இருந்தனர். இந்தத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கரைக்கு வர அனுமதிக்கப்பட்டிருந்தால் குறைந்தது 25,000 அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள். உயிர் பிழைத்த இரண்டு பயங்கரவாதிகள் அவர்களின் சொந்த நாடுகளான ஈக்வடார் மற்றும் கொலம்பியா நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, அங்கு விசாரணையை எதிர்கொள்வார்கள்.
பாதிப்பு இல்லை
இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனது ஆட்சிக்காலத்தில், தரைவழி அல்லது கடல்வழி என எந்த வகையிலும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதேபோல கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவும் இதை உறுதி செய்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவர் உயிருடன் பிடிக்கப்பட்டது தங்களுக்கு நிம்மதி தருவதாகவும் ஏனென்றால் அவரிடம் விசாரணை நடத்திப் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெள்ளை மாளிகை இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில் கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வேகமாகச் செல்வது தெரிகிறது. அப்போது அந்த நீர்மூழ்கி கப்பல் மீது குண்டு வீசி அமெரிக்க பாதுகாப்புப் படை அதை அழிப்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தொடர் நடவடிக்கை
டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற பிறகு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்க பாதுகாப்புப் படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவிலிருந்து வரும் போதைப் பொருட்களைத் தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் கரீபியன் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஆறு கப்பல்கள் அழிக்கப்பட்டன.. இவை அனைத்தும் வெனிசுலாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications