"இந்தியாவுக்கு இன்னும் அதிக வரி போடுங்க.." ஐரோப்பிய நாடுகளுக்கு பிரஷர் கொடுக்கும் டிரம்ப்? பின்னணி
வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவதாலேயே உக்ரைன் போர் தொடர்வதாகச் சொல்லி டிரம்ப் இந்தியா மீது வரிகளை விதித்துள்ளார். இது இரு நாட்டு உறவுகளைக் கடுமையாகப் பாதிப்பதாக இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய நாடுகளும் இந்தியா மீது வரிகளை விதிக்க வேண்டும் என டிரம்ப் தரப்பு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பினரும் முயல்கிறார்கள். இருப்பினும், அதில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, இதில் தீவிரமாக முயன்றார். ஆனால், அவராலும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

டிரம்ப்
இதையடுத்து டிரம்ப் இந்தியா மீது வரி போட்டார். அதாவது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாகவும் இதுவே போருக்கு ரஷ்யாவுக்கு நிதியுதவி அளிப்பதாகவும் சொல்லி வரி விதித்தார். இது இந்தியா அமெரிக்கா இடையேயான உறவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளைப் போலவே ஐரோப்பிய நாடுகளும் தடைகளை விதிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. குறிப்பாக, இந்தியாவிடமிருந்து வாங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை முழுமையாக நிறுத்தும்படி ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் போருக்கு நிதி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக சொல்லி இந்தியா மீது டிரம்ப் தடை விதித்திருந்த நிலையில், அதைப் போல ஐரோப்பிய நாடுகளும் இந்தியா மீது வரிகளை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் சொல்லியிருக்கிறது. ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாலேயே உக்ரைன் போருக்கான நிதி ரஷ்யாவுக்குக் கிடைப்பதாகவும் இதன் மூலம் உக்ரைன் போரை இந்தியா தூண்டிவிடுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
வெள்ளை மாளிகை அதிகாரிகள்
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், "டிரம்ப் புதின் அலாஸ்கா உச்சி மாநாட்டிற்குப் பிறகு உலக அரசியலில் மாற்றங்கள் நடந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் டிரம்ப்பின் முயற்சிகளுக்குப் பல்வேறு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். போரை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யாவுக்குக் கொடுக்க வேண்டும் என புதின் சொல்கிறார். ஆனால், இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. இதனால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தங்கள் பொறுமையை இழந்துள்ளனர்" என்றார்.
மேலும், இந்தியா மீது அமெரிக்கா எப்படி வரிகளை விதித்து ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கிறதோ.. அதேபோல ஐரோப்பிய நாடுகளும் இந்தியா மீது வரிகளை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளுக்குத் திரைமறைவில் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
இந்தியா பதிலடி
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரஷ்ய எண்ணெய்யைச் சீனா தான் அதிகம் வாங்குகிறது.. அப்படியிருக்கும் போது சீனாவுக்கு ஏன் வரி விதிக்கவில்லை என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி பொருட்களை வாங்குகிறது.. அதேபோல அமெரிக்காவே கூட சில பொருட்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும்போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications