ஈரானை முட்டாளாக்கிய டிரம்ப்.. லெப்ட்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் விழுந்த அடி! இதுதான் அமெரிக்கா
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா மிகத் துல்லியமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளது. இதற்கிடையே ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா எப்படி இந்தளவுக்குத் துல்லியமான தாக்குதலை நடத்தியது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் பல்வேறு படைகள் பல மணி நேரம் ஒருங்கிணைந்து செயல்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே மோதல் நிலவி வந்தது. இந்தச் சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசியதாகத் தெரிகிறது. அமெரிக்காவின் இந்த துல்லிய தாக்குதலை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

அமெரிக்காவின் திட்டம்
இதற்கிடையே இந்த தாக்குதல் குறித்துக் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அமெரிக்கா இதுபோன்ற ஒரு தாக்குதலை நடத்தப் பல மாதங்களாகத் திட்டமிட்டாலும், கடைசியில் சில வாரங்களில் இதை இறுதி செய்து தாக்குதலை நடத்தியுள்ளது.
முதலில் சில B-2 ரக போர் விமானங்கள் மிசோரியில் உள்ள தளத்திலிருந்து மேற்கே குவாம் நோக்கிப் புறப்பட்டன. இந்த B-2 ரக போர் விமானங்கள் மட்டுமே பங்கர் பஸ்டர் பாம்களை வீசும் திறன் கொண்டவை. இதனால் ஈரான் பாதுகாப்புப் படை இந்த விமானங்களைக் கண்காணிக்க ஆரம்பித்தது. ஆனால், ஈரானைத் திசை திருப்பவே அமெரிக்கா இதைச் செய்திருக்கிறது.
உண்மையே வேறு!
இந்த நேரத்தில் உண்மையாகத் தாக்குதலை நடத்தும் குழு தனது 7 B-2 ரக போர் விமானங்கள் உடன் கிழக்கு நோக்கிக் கிளம்பியுள்ளது. அவர்கள் தரையில் இருந்து புறப்பட்ட நொடியில் இருந்தே அமைதியாக இருந்துள்ளன. வழக்கமாக ஜெட் விமானங்கள் பறக்கும்போது தொடர்ச்சியாகக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு இருக்கும். ஆனால், இந்த முறை அதுபோல எந்தவொரு தொடர்பும் இல்லாமல் மிக அமைதியாகவும் ரகசியமாகவும் இந்த குழு சென்றுள்ளது. நடுவானிலேயே பல முறை எரிபொருளும் நிரப்பப்பட்டது.
18 மணி நேர பயணம்
கடைசியாக சுமார் 18 மணி நேரம் கிழக்கு நோக்கிய பயணத்திற்குப் பிறகு அது ஈரான் வான்வெளியில் நுழைந்துள்ளது. சரியாக அந்த நேரம் பார்த்து, திட்டமிட்டபடி அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் வான் ஈரான் மீது ஏவுகணைகளை வீசியது. ஈரானில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை அழிக்கவே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. மறுபுறம் அமெரிக்காவின் இதர போர் விமானங்களும் வேண்டும் என்றே அங்குப் பரந்து சிறு சிறு தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் ரேடார் அமைப்புகளைக் குழப்பவும்.. ஈரான் படைகளைத் திசை திருப்பவுமே அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது..
இந்த குழப்பத்திற்கு நடுவே திட்டமிட்டபடி நூல் பிடித்த மாதிரி இலக்கை நோக்கி நகர்ந்துள்ளது. சரியான நேரத்தில் சுமார் 30,000 பவுண்டு, அதாவது 13,600 கிலோ எடை கொண்ட பங்கர் பஸ்டர் பாம்களை வீசப்பட்டன. அமெரிக்க வரலாற்றில் நடத்தப்பட்ட இரண்டாவது மிக நீண்ட B-2 ஆபரேஷன் இதுவாகும். ஈரான் நேரப்படி நள்ளிரவில் 2.10 தாக்குதல் நடந்துள்ளது. சுமார் 20- 25 நிமிடங்களில் அமெரிக்கா தாக்குதலை மொத்தமாக முடித்துவிட்டது.
அமெரிக்கா சொல்வது என்ன
இது தொடர்பாகச் செய்தியாளரிடம் பேசிய அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், "இது அமெரிக்க பாதுகாப்புப் படையின் மிகப் பெரிய வெற்றி.. எங்கள் ஆபரேஷன் நடந்து முடியும் வரை ஈரான் போர் விமானங்கள் பறக்கக் கூட இல்லை. ஈரானின் வான் ஏவுகணை அமைப்புகளால் எங்கள் ஜெட்களை கண்டறியக் கூட முடியவில்லை என்பதே இது காட்டுகிறது. கடைசி வரை ரகசியமாக வைத்திருந்த இந்த தாக்குதலை நடத்தினோம்" என்றார்.
அமெரிக்கா திட்டவட்டம்
அமெரிக்காவின் இந்த தாக்குதலால் ஈரானின் அணு உலைகளில் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெகெசெத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழித்துவிட்டோம் என்பதே உண்மை. இது ஈரானுக்கு அமெரிக்கா அனுப்பும் எச்சரிக்கை.. தேவைப்பட்டால் இன்னொரு எச்சரிக்கையை அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications