புதின் ஓகே மட்டும் சொல்லாமல் போகட்டும்.. அப்புறம் இருக்கு! பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் நாளை அலஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உலகமே இந்த சந்திப்பை உற்று நோக்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், புதினை மிரட்டும் விதமாக பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு புதின் தடையாக இருந்தால் கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்கும் என எச்சரித்துள்ளார் டிரம்ப்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு தீவிர முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் - ரஷ்யா மோதல் நடைபெற்ற நிலையில், நாளை அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடைபெறுகிறது.

டிரம்ப் - புதின் சந்திப்பு
அமெரிக்காவின் அலாஸ்காவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. பனிப்போர் காலத்தில் இருந்தே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்று சொல்லும் வகையில், தொடர்ந்து மோதல் போக்குடனே இருந்து வருகின்றன. தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் அந்த நாட்டிற்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.
குறிப்பாக ரஷ்யாவை பொருளாதார ரீதியிலாக பலவீனப்படுத்தும் முயற்சியாக அந்த நாட்டிடம் வர்த்தகம் செய்யக்கூடாது என்று சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. குறிப்பாக இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதனால், இந்தியா உடனடியாக ரஷ்யாவுடனான எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் என அழுத்தங்கள் கொடுத்து வரும் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியையும் வித்தார்.
கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்
இத்தகைய சூழலுக்க்கு நடுவே டிரம்ப் - புதின் சந்திப்பு நடைபெறுகிறது. உலகமே இந்த சந்திப்பை உற்று நோக்கி வருகிறது. அமெரிக்கா - ரஷ்ய தலைவர்கள் சந்திப்பால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துக்கொண்டே போகும் உக்ரைன் - ரஷ்யா போருக்கு முடிவு கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும், ரஷ்யா - அமெரிக்கா மட்டுமே பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்க்கு உக்ரைன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எப்படி இருந்தாலும் நாளை நடைபெற உள்ள இந்த சந்திப்பு ஒட்டு மொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சந்திப்பின் போது என்ன முடிவுகள் எடுக்கப்படும். எது குறித்து பேசப்படும் என்பதை அறிய சர்வதேச வல்லுனர்களும் உற்றுநோக்கியுள்ளனர். இத்தகைய சூழலில்தான் ரஷ்ய அதிபர் புதினை எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கிறார் டிரம்ப். வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிக்கு டிரம்ப் இடையூறாக இருந்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என்றார்.
ஜோ பைடன் நிர்வாகத்தினால் தான்
கடுமையான பொருளாதார தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்படும் என்று சூசகமாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் முதல் சந்திப்பு சரியாக அமைந்தால் உடனடியாக இரண்டாவது சந்திப்பு நடைபெறும். அந்த சந்திப்பில் புதின், ஜெலன்ஸ்கி மற்றும் நானும் இருப்பேன்.
அவர்கள் என்னை சந்திக்க விரும்பினால் இதை செய்வேன். ஜோ பைடன் நிர்வாகத்தின் கொள்கைகளால்தான் உக்ரைன் மோதல் ஏற்பட்டது. நான் அதிபராக இருந்தால் இந்த போரே ஏற்பட்டு இருக்காது. இந்த பிரச்சினையை சரிசெய்ய நான் இங்கே இருக்கிறேன்" என்றார்.
வீடியோ வாயிலாக ஆலோசனை
டிரம்ப் - ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் வீடியோ வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகே டிரம்ப் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜெர்மனி ஏற்பாட்டின் பேரில் அலோசனையானது நடைபெற்றது. அலஸ்கா சந்திப்பில் பேசப்பட வேண்டிய விவகாரம் உள்ளிட்டவைகள் பற்றி இதில் ஆலோசனை நடத்தியிருக்கலாம் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications