"ஒரு லட்சம் சிம், 300 சர்வர்!" ஐநாவில் டிரம்ப் பேசும்போது நடக்கவிருந்த பயங்கரம்! கடைசி நொடியில் பரபரப்பு
வாஷிங்டன்: ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்ற இருந்த சூழலில், அதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன்பு மிகப் பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. ஒரு லட்சம் சிம்களை கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு நெட்வொர்க்கை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் செயலிழக்கச் செய்தனர். இது வெளிநாட்டுச் சதியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
ஐநா பொதுச்சபைக் கூட்டம் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு உலக தலைவர்களும் உரையாற்றி வருகிறார்கள். குறிப்பாகக் காசா போர் தொடர்பான விஷயங்களே இதில் பிரதானமாகப் பேசப்படுகிறது. அதன்படி அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்த கூட்டத்தில் நேற்றைய தினம் பேசினார். அமெரிக்க அதிபராக 2வது முறையாகப் பதவியேற்ற பிறகு டிரம்ப் ஐநாவில் உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

சதி முறியடிப்பு
இதற்கிடையே டிரம்ப் பேசச் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது, அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் ஒரு சதி செயலை முறியடித்தனர். நியூயார்க் டிரைஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு டெலிகாம் நெட்வொர்க்கை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் கண்டுபிடித்து அழித்தது. அமெரிக்க உயர் அதிகாரிகளைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டிருந்த இந்த நெட்வொர்க், அந்தப் பகுதி முழுக்க செல்போன் நெட்வொர்க்கை முடக்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஐநா கூட்டத்தில் டிரம்ப் பேசுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு இதைச் செயலிழக்க வைத்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட சிம் சர்வர்கள், ஒரு லட்சம் கார்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் விஷயம் என்னவென்றால் ஐநா கூட்ட நடைபெறும் இடத்திலிருந்து வெறும் 56 கிலோமீட்டர் தொலைவில் இந்த செட்அப் இருந்துள்ளது. அமெரிக்காவின் டாப் அதிகாரிகளைக் குறிவைத்து வந்த மிரட்டல் மெசேஜ்களும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது
பெரிய சைபர் தாக்குதல்
இதை வைத்து மிகப் பெரிய சைபர் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள். அந்த செட்அப் மூலம் செல் கோபுரங்களைச் செயலிழக்கச் செய்வது, கிரிமினல் கேங்களிடையே ரகசிய உரையாடல்கள் ஆகியவற்றுக்கு கூட இவை பயன்படுத்தப்படலாம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வெளிநாட்டுச் சதி?
நெட்வொர்க்கை செயலிழக்கச் செய்த அதிகாரிகள், அந்தக் கருவிகளைக் கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வரும் சூழலில், முதற்கட்ட விசாரணையில் இதில் வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நெட்வொர்க் ஏற்படுத்திய அச்சுறுத்தல் மிகவும் தீவிரமானது என அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் பிரிவின் இயக்குநர் சீன் கரண் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த நெட்வொர்க்கால் நமது நாட்டின் தொலைத்தொடர்பு முடங்கி இருக்கும். இதை நாங்கள் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. இதைச் சரியான நேரத்தில் முறியடித்துள்ளோம். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
டிரம்ப் பேச்சு
சதி முறியடிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே டிரம்ப் ஐநா பொது சபை கூட்டத்தில் உரையாற்றினார். அதில் டிரம்ப் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். இந்தியா பாகிஸ்தான் மோதல் உட்பட 7 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகப் பேசிய டிரம்ப், உக்ரைன் போர் தொட இந்தியாவும் சீனாவும் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications