3.5 நிமிடத்தில் தயராகிடும் சொன்னீங்க.. அப்புறம் ஏன் லேட்.. பாஸ்தா நிறுவனத்திடம் 40 கோடி கேட்டு வழக்கு
வாஷிங்டன்: வெறும் 3.5 நிமிடத்தில் பாஸ்தா தயராகிவிடும் என்று கூறி விளம்பரப்படுத்தினர் என்றும் ஆனால் மைக்ரோவேவனில் வைத்து தயார் செய்யும் போது கூடுதல் நேரம் எடுக்கிறது என்றும் கூறி அந்த நிறுவனம் மீது ரூ.40 கோடி இழப்பீடு கேட்டு ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தற்போதைய காலத்தில் மக்களுக்கு எங்கும் எதிலும் பரபரப்புதான். எந்த வேலை என்றாலும் துரிதமாக முடித்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
பொறுமை என்பதே பலரிடம் இல்லை என்றும் இன்றைய தலைமுறையினர் அதிகம் பேர் இப்படித்தான் இருப்பதாகவும் பரவலாக சமூகத்தில் ஒரு பேச்சு நிலவுகிறது.

துரித உணவு வகைகள்
உணவில் தொடங்கி அனைத்து வேலைகளிலும் இன்ஸ்டண்ட் ஆக முடிந்து விட வேண்டும் என்றும் பலரும் நினைக்கின்றனர். ஓட்டல்களில் கூட துரித உணவு வகைகள் ஆதிக்கத்திற்கு மக்களின் இது போன்ற மனநிலை காரணமாக இருக்குமோ என்ற ஐயம் கூட பலருக்கும் எழாமல் இல்லை. இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருப்பவர்களை கவர்வதற்காக தற்போது பெரு நிறுவனங்கள் பலவும் இப்படி ஒரு யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

நுகர்வோர்களை கவருவதற்காக
டெலிவரி நிறுவனங்கள் கூட விரைவாக டெலிவரி செய்வதாக கூறி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. அதேபோல், இந்தியாவிலும் இரண்டே நிமிடங்களில் கூட தயார் செய்து விடக்கூடிய மேகி போன்ற உணவு பொருட்களும் பிரபலம் அடைந்துள்ளது. பசி ஏற்படும் போது எந்த சிரமும் இன்றி எளிதாக சில நிமிடங்களில் சமைத்துவிடலாம் என்பதால், சிலர் இதுபோன்ற உணவு பதார்த்தங்களை விரும்பி வாங்கி சமைக்கின்றனர். நுகர்வோர்களை கவருவதற்காக இன்ஸ்டண்ட் ஆக தயாரிக்கப்படக்கூடிய உணவு வகைகள் குறித்து அடிக்கடி விளம்பரங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

விளம்பரத்தை பார்த்து..
இந்த நிலையில், அமெரிக்காவில் இதேபோன்ற ஒரு விளம்பரத்தை தான் பார்த்ததாகவும் ஆனால், சொன்னபடி உணவு தயாராகவில்லை என்று குற்றம் சாட்டி பாஸ்தா உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் அமண்டா ரமிரெஸ் என்ற பெண். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: அமெரிக்காவின் பிரபலமான உணவு நிறுவனம் கிராப்ட் ஹெய்ன்ஸ். பாஸ்தா உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், தனது விளம்பரத்தில் 3.5 நிமிடத்தில் உணவு தயராகிவிடும் என்று விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது.

வெறும் 3.5 நிமிடத்தில் பாஸ்தா
இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தில் வசித்தும் வரும் அமண்டா ரமிரெஸ் என்ற பெண், 3.5 நிமிடத்தில் உணவு தயராகவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதுவும் 40 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பதுதான் ஹைலைட். இது தொடர்பாக அமண்டா ரமிரெஸ் தாக்கல் செய்த மனுவில், வெறும் 3.5 நிமிடத்தில் பாஸ்தா தயராகிவிடும் என்று கூறியது.

ரூ.40 கோடி இழப்பீடு
ஆனால், மைக்ரோவேவனில் வைத்து தயார் செய்யும் போது கூடுதல் நேரம் எடுக்கிறது. எனவே நுகர்வோரை அந்த நிறுவனம் தவறாக வழிநடத்துகிறது. பாஸ்தா தயாராக எடுத்துக்கொள்ளும் சரியான நேரத்தை தெரிவித்து இருந்தால் இதனை பலரும் வாங்கியிருக்க மாட்டார்கள். எனவே சம்பந்தப்பட்ட கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு ரூ.40 கோடி இழப்பீடும் பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக கருத்து கூறியிருக்கும் கிராப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம், இதுபோன்ற புகார்கள் அற்பத்தனமானது எனவும் இந்த புகார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வலுவான வாதங்கள் வைப்போம்" என்றும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications