கமகமவென.. French fries மணத்தில் வாசனைத் திரவியம்.. போட்டிப் போட்டு வாங்கிய மக்கள்! அடுத்து பிரியாணி?
அமெரிக்க நிறுவனம் ஒன்று ப்ரெஞ்ச் ப்ரைஸ் மணத்தில் வித்தியாசமான வாசனைத் திரவியத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாஷிங்டன்: காதலர் தினத்தையொட்டி ப்ரெஞ்ச் பிரைஸ் என அழைக்கப்படும் வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளின் மணத்தில் வித்தியாசமான வாசனைத் திரவியத்தை அறிமுகம் செய்துள்ளது அமெரிக்க நிறுவனம் ஒன்று. சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வாசனைத் திரவியம் முழுவதும் விற்பனையாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே நமது உடலும், நம்மைச் சுற்றியும் நல்ல நறுமணமாக இருப்பதைத்தான் மக்கள் விரும்புவார்கள். இதனாலேயே வெளி இடங்களுக்குச் செல்லும்போது, வாசனைத்திரவியத்தை பூசி செல்லும் பழக்கம் பெரும்பான்மையானவர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இந்த வாசனத் திரவியங்களின் மணங்களைப் பற்றிய மக்களின் ஆசைகள் அவ்வப்போது மக்கள் மத்தியில் மாறிக் கொண்டே வருகிறது.
இதனாலேயே மக்களின் மனமறிந்து வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அவ்வப்போது புதுப்புது மணத்தில் வாசனைத் திரவியங்களை தயாரித்து, சந்தையில் விற்பனைக்கு விடுகின்றன.
அந்தவகையில் காதலர் தினத்தை முன்னிட்டு Idaho என்ற நிறுவனம் Frites என்ற பெயரில் வித்தியாசமான ஒரு வாசனை திரவியத்தை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. லிமிடெட் எடிசனாக வெளியிடப்பட்ட இந்த வாசனைத் திரவியத்தின் மணம் மற்ற சாதாரண வாசனைத் திரவியங்களில் இருந்து வேறுபட்டது. ஆம், மக்கள் அதிகம் விரும்பும் ஜங்க் புட்களில் ஒன்றான ப்ரெஞ்ச் ப்ரைஸ் மணத்தில் இந்த வாசனைத் திரவியம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ப்ரெஞ்ச் ப்ரைஸ்
இந்த வாசனை திரவியத்தை தயாரிக்கும் முன்பு, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், அமெரிக்காவில் உள்ள 90 சதவீத மக்கள் விரும்பும் ஒரு மணமாக ப்ரெஞ்ச் ப்ரைஸ் வாசனை இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். எனவே அதனையே ஒரு வாசதைத் திரவியமாக உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர்.

அதிரடி விற்பனை
அதன் தொடர்ச்சியாக இந்த வாசனை திரவியம் உருளைக்கிழங்கு மற்றும் சமையல் எண்ணையிலிருந்து எடுக்கப்பட்ட திரவத்தை கொண்டு தயாரிக்கப்பட்டது. 1.7 அவுன்ஸ் கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. என்ன ஆச்சர்யம், சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்களது வெப்சைட்டில் இந்த வாசனைத் திரவியத்தை அறிமுகம் செய்த சில மணி நேரங்களிலேயே அது முழுவதுமாக விற்றுத் தீர்ந்து விட்டது.

காத்திருக்கும் மக்கள்
மீண்டும் இந்த வாசனைத் திரவியம் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என அந்நிறுவனம் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் மீண்டும் எப்போது இந்த வாசனைத் திரவியம் விற்பனைக்கு வரும் என மக்கள் இப்போதே ஆர்வமாக அந்த நிறுவனத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் கேட்டு வருகின்றனர். ப்ரெஞ்ச் ப்ரைஸ் மணத்தில் ஒரு வாசனைத் திரவியம், கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா..

ஆச்சர்யப்படுவதற்கில்லை
ஒருவேளை இதுபோல் நம் நாட்டில் ஒரு ஆய்வு நடத்தி, பிரபலமான உணவின் மணத்தில் ஒரு வாசனைத் திரவியத்தை உருவாக்க வேண்டுமானால், எதைத் தேர்வு செய்வார்கள்..? சந்தேகமேயில்லை நிச்சயம் பிரியாணிதான். ஆனால் இந்த நாட்கள் அதிக தூரத்தில் இல்லை. கூடிய சீக்கிரம் அமெரிக்க நிறுவனத்தின் யோசனையை வைத்து நமது நாட்டிலும் இதுபோன்ற பிரியாணி,பரோட்டா என பல நறுமணங்களில் வாசனைத் திரவியங்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.












Click it and Unblock the Notifications