For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் திருவிழா களத்தில் எண்ணிக்கையும் எண்ணங்களும் பா. கிருஷ்ணன்

Google Oneindia Tamil News

தேர்தல் திருவிழாவில் முதல் கட்டமாக வரும் கூட்டணிகள் அமையும் காட்சி அநேகமாக நிறைவுக்கு வந்துவிட்டது.

இந்தக் கட்சிக்கு இடமிருக்குமா, வெளியேறுமா அங்கே போய்விடுமா, இங்கை வந்துவிடுமா.. என்றெல்லாம் ஊடகங்களின் யூகங்களுக்கும் கற்பனைகளுக்கும் நல்ல தீனியைப் போட்டு வந்த எல்லாக் கட்சிகளும் ஏதாவது ஒரு சமரசத்திற்கு வந்து எண்ணிக்கையை இறுதி செய்துவிட்டன.

Pa Krishnan Article on TN Assembly Election and Seat Sharing

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் அளிப்பதுதான் தினமும் மர்ம திரைப்படத்தின் சஸ்பென்ஸ் போல நீண்டு கடைசியில் 25 என்று கையெழுத்தாகிவிட்டது. இந்தக் காட்சியில் நெஞ்சை நெகிழ வைத்த சில கண்ணீர் காட்சிகளும் இருந்தன.

தொடக்கத்திலிருந்தே குழப்ப நிலையில் இருந்த காங்கிரஸ் ஒரு வழியாக 25 சீட் வாங்கிக் கொண்டு கூட்டணியில் இருப்பது குறித்த சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

அதிகம் அலட்டாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 சீட்களில் போட்டியிட ஒப்புக் கொண்டு, சட்டென்று முடித்துவிட்டது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கொஞ்சம் இழுத்து கடைசியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற அறிவிப்போடு ஆறு இடங்களைப் பகிர்ந்து கொண்டது. ஒரு முன்னேற்றம், என்னவென்றால், கடந்த காலங்களில், "தனித்தொகுதிகளில் போட்டியிடுங்கள். பொதுத் தொகுதிக்கெல்லாம் ஆசைப் படாதீர்கள்" என்று அன்றைய திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி கூறியதை ஏற்று வந்த சிறுத்தைகள் இந்த முறை பொதுத்தொகுதியிலும் இடம் பெற்றுவிட்டார்கள்.

கொஞ்சம் அடி வயிற்றில் நெருப்போடு உலா வந்தது மறுமலர்ச்சி திமுகதான். அவர்களும் ஆறு இடங்களைக் கை நீட்டிப் பெற்றுக் கொண்டது மட்டுமன்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கும் இணங்கிவிட்டனர். ஒரு காலத்தில் குடை, பிறகு பம்பரம் என்று தனிச்சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக இப்போது உதயசூரியனில் களம் காண்பதன் மூலம் சுத்தமாக முகத்தை அழித்துக் கொண்டுவிட்டது. காரணம், மதிமுகவின் ஆறு வேட்பாளர்களுமே வெற்றி பெற்றால் கூட, திமுகவை எதிர்த்து சட்டப் பேரவையில் எதையும் செய்ய முடியாது. பொது தளத்தில் ஒரு வேளை திமுகவுடன் முரண்படும் சூழல் மறுமலர்ச்சி திமுகவுக்கு ஏற்பட்டாலும் சட்டப் பேரவையில் விதிப்படி அந்த ஆறு பேரும் திமுகதான். அது அவர்களது விதி!

Pa Krishnan Article on TN Assembly Election and Seat Sharing

விடுதலைச் சிறுத்தைகள் ஒரு வகையில் தனிச் சின்னம் பெற்றாலும் அனைத்து தொகுதிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியுமா, போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், மக்களவைத் தேர்தலைப் போல் இல்லாமல், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை.

பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி இருவரைக் களத்தில் இறக்கினாலும் ஒருவர் திமுக வின் சின்னத்தில் போட்டியிடுகிறார். அப்படி சரிபாதி வாய்ப்பு கூட மதிமுகவுக்கு இல்லை.

அண்ணா திமுக கூட்டணியில் சில மாதங்களுக்கு முன்பு தாங்கள்தான் "சூப்பர் பாஸ்" என்பதைப் போல் "நாங்கள் சொல்கிற ஆள்தான் முதலமைச்சர்", "கூட்டணி ஆட்சி", "எங்கள் துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது" என்றெல்லாம் வீர வசனம் பேசிவந்த பாஜக "இருப்பது இருபதுதான்" என்று கூறியதும் சத்தம் போடாமல் பெற்றுவிட்டது.

ஆரம்பத்திலேயே எந்த யூகத்திற்கும் இடம் தராமல் 23 இடங்களைப் பெற்று அமைதியாகிவிட்டது பாட்டாளி மக்கள் கட்சி.

விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பூனை மதில் மேலிருந்து அண்ணா திமுக பக்கம் குதிப்பது போல் தென்படுகிறது. இருந்தாலும் இன்னும் முடிவெடுக்காமல் குழப்பம் நீடிக்கிறது.

மூன்றாவது அணியாக கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைமையில் அகில இந்தி சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டணி செட்டில் ஆகிவிட்டது. வேறு யாரும் வருவதற்கான அறிகுறியில்லை.

நான்காவதாக டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற் கழகம் வேட்பாளர்களுக்கான நேர்காணலை நடத்தியுள்ளது. திமுக, அதிமுக, ம.நீ.ம. ஆகிய கூட்டணிகள் எதிலும் அக்கட்சி இடம்பெறாது என்பது உறுதியாகிவிட்டதால், அமமுக தனித்தே போட்டியிடும் என்பது தெரிகிறது. ஆனால், எத்தனை இடங்களில் என்பது தெரியவில்லை.

வி.கே. சசிகலா அரசியலுக்குத் தலைமுழுக்குப் போட்டுவிட்டதால், இக்கட்சியின் மீதான எதிர்பார்ப்பு பெரிதும் குறைந்துவிட்டது. மேலும், அமமுக தனித்துப் போட்டியிடுமா, ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு சேருமா என்றெல்லாம் தெரியவில்லை.

இத்தனை காட்சிகளுக்கு நடுவில், ஒரே ஒரு கட்சிதான் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது. அது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி.

கடந்த காலங்களில் தேர்தல் களத்தில் முதலிலேயே கூட்டணி, வேட்பாளர்கள், பரப்புரை என எல்லாவற்றிலும் முந்திக் கொள்பவர் ஜெயலலிதாதான். அவரது தலைமையில் அண்ணா திமுக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே தனது வேட்பாளர்களை அறிித்து அசத்தியிருக்கிறார். மற்ற கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் தருணத்தில் வேனில் புறப்பட்டு பரப்புரையில் இறங்கியதும் உண்டு. காரணம், அவருக்குத் தன் மீது அபார நம்பிக்கை.

அதைப் போன்ற நிலையை நாம் தமிழர் இப்போது களத்தில் இறங்கிவிட்டது. மூன்று காரணங்களால் அது தனித்தன்மையோடு இருக்கிறது. எந்தக் கூட்டணியின் தயவையும் நம்பாமல் சொந்தக் காலில் நிற்பது. இரண்டாவது, அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களம் இறக்குவது. மூன்றாவது சரிபாதி இடங்களில் பெண்களைப் போட்டியிடச் செய்வது.

இப்படி ஒரு நிலையை நாம் தமிழர் கட்சி எடுப்பது முதல் முறையல்ல. 2016 சட்டப் பேரவைத் தேர்தலிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. அதிலும் 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மொத்தம் 40 இடங்களில் சரிபாதி 20 தொகுதிகளில் பெண்கள் போட்டியிட்டனர்.

புதிதாகத் தொடங்கப்படும் எந்தக் கட்சியும் ஒரு தேர்தலில் தோல்வியடைந்த பின் அடுத்த தேர்தலில் கூட்டணியில் இடம்பெறுவது வாடிக்கையாக உள்ளது. பாமக, மதிமுக, தேமுதிக ஆகியவை இந்த நிலையைத்தான் எடுத்து வருகின்றன. ஆனால், நாம் தமிழர் அடுத்தடுத்தும் தனது நிலையிலிருந்து வழுவாமல் இருக்கிறது.

2016 சட்டப் பேரவையில் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள், அதாவது 1.07 சதவீதம் பெற்றுள்லது. 2019 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மொத்தம் சுமார் 16 லட்சத்து 60 ஆயிரம் வாக்குள் பெற்றது. எனினும் சதவீதத்தைப் பொறுத்தவரையில் 3.89 சதவீதம்.

சீமானின் அரசியல் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். பலருக்கு வெறுப்பூட்டும் வகையில் அவர் பேசக் கூடும். ஆனால், அவரது பேச்சுகள், பரப்புரைகள் எதிலும் காண முடியாதது, போலித் தனத்தைத்தான்! நாம் தமிழர் கொள்கைகளை ஏற்பது நிராகரிப்பது என்பதும் அக்கட்சியை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவரவர் நிலைப்பாடு. ஆனால், ஒரு கோட்பாட்டில் தொடர்ச்சி (Consistency) உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சியிடம்தான் காண முடிகிறது.

தமிழ்த் தேசீயம் என்பதுதான் அக்கட்சியின் அடிப்படைக் கொள்கை. அத்துடன் பெருநிறுவனங்களைச் சார்ந்த பொருளாதரத்துக்கு எதிராகவும் விவசாயத்திற்கு முழு ஆதரவாகவும் உள்ள கோட்பாடுகளை அக்கட்சி திடமாகக் கடைப்பிடித்து வருகிறது.

சாதிவாரி ஒதுக்கீட்டுக்காக எல்லோரும் குரல் எழுப்பி வரும் நிலையில், மொழிவாரி ஒதுக்கீடு என்ற கோரிக்கையை சீமான் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் பண்பாட்டின் அடையாளங்களாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய மேடையில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "சாராயம் விற்பவர் அரசுப் பணியாளர்களாக அறிவித்தால், விவசாயிகளை அரசுப் பணியாளர்களாக அறிவிப்போம். 60 வயதாகும் விவசாயிக்கு ஓய்வூதியம் வழங்குவோம். இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் தாக்கப்பட்டால், அடுத்த கணமே ஆட்சியிலிருந்து இறங்கிவிடுவோம்" என்றெல்லாம் அறிவித்திருக்கிறார்.

ஆனால், ஒன்று இவையெல்லாம் சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. இது நாம் தமிழர் கட்சியினருக்கும் எழாமல் இருக்குமா. அப்படியிருந்தும் அறிவிப்பது ஏன் என்பதுதான் கேள்வி. ஒன்று, "தேர்தலில் வெற்றி கிடைக்குமா தெரியாது அள்ளிவிடுவோம்" என்ற நோக்கமாக இருக்குமா.. அல்லது உண்மையாகவே வாய்ப்பு கிடைத்தால் செய்ய முயல்வோம் என்ற நோக்கமா தெரியாது.

எல்லாவற்றுக்கும் காலம் மட்டுமே சரியான பதிலை அளிக்கும்... காத்திருப்போம்!

English summary
Senior Journalist Paa Krishann views that Naam Thamizhar, led by Seeman, is keeping its uniqueness in many ways. The party also keeps consistency in policy besides fielding without any alliance in every elections, sharing 50 percent of seats with women and making announcements and propaganda ahead of all others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X