• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீ மகாலட்சுமி ஸ்லோகம்...

By Staff
|

தாமரை திகழும் திருக்கரமும்

தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்

ஷேமம் அளிக்கும் நல்லருளும்

சேவிப் பார்க்கு நிறைவரமும்

மூவர் போற்றும் பெருமையுடன்

முன்னே சங்க பதும நிதி

காவல் செய்ய, காட்சி தரும்

கமல மாதே ! வணங்கு கிறேன்!

தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!

தாமரை மென்மை தளிர்க்கைகள்!

தூய மங்கல வெண்மை உடை!

துலங்கு சந்தனம்! மணிமாலை!

ஞானம், சக்தி, பலம், செல்வம்

நயத்தகு வீரம், பொலி வென்னும்

ஆறும் பெற்று மூவுலகும்

ஆட்சி புரிபவளே! அருள்க!

இயற்கை.செயற்கை இயற்றுவிப்பாய்!

எல்லா உயிர்க்கும் நலஞ்செய்வாய்!

அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்

அரிய செல்வத் திருப்பிடமாய்

நினைத்த தளிக்கும் சுரபியென

நிலவும் மேலாம் வடிவம் நீ!

விளங்கும் தெய்வ இலக்குமியே!

விஷ்ணுவின் இதய இலச்சினையே!

செந்தாமரை தான் உன் வீடு!

திகழும் தூய்மை உன் ஏடு!

அமுதம் தோற்க இனிப்பவள் நீ!

அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!

அக்கினி பத்தினி ஸாவாஹா நீ!

அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!

எங்கும் எதிலும் எந்நாளும்

இலங்கிச் சிறப்பவளே சரணம்!

அரிய வடிவம் நற் குணமும்

அற்புதப் புகழும் பெற்றவளே!

அதிகா ரத்தில் கொண்டவளே!

அகிலம் முழுவதும் உன்னொளிதான்

அடர்ந்து படர்ந்து தொடர்கிறது!

அழகே! பொறுமை பூண்டவளே!

அமுதப் பாற்கடல் ஈன்றவளே!

அறிவே உருவம் ஆனவள் நீ!

அருளைப் பொழியும் வானவள் நீ!

சிறிதும் குற்றம் அற்றவள் நீ!

ஸ்ரீநா ராயணன் சிந்தை நீ!

உலகின் துயர இருள் நீங்கும்

ஓளியே! பகவான் உட்கொள்ளும்

அமுதே! உன்றன் கடைக்கண்ணால்

அடியேன் இடுக்கண் போக்கிடுக!

தருமம் அனைத்தும் ஒன்றான

தாயே! உன்னைப் போற்றுகிறேன் !

இருப்பிடம் உனக்குப பங்கயம்தான்!

இருப்பதும் கையில் கமலம்தான்!

இருவிழி அதுவும் தாமரைதான்!

இலங்கும் அழகும் அம்மலர்தான்!

கருணை வடிவே ! காசினியைக்

காக்கும் தாயே! வணங்குகிறேன்!

மலரில் தோன்றிய மலர்முகமே!

மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்

அலைமகளே! இவ் வகிலத்தில்

ஆனந்தத்தின் அடிப்படை நீ!

பூவிற் சிறந்த கமலத்தில்

பொலியும் மாலை அணிந்தபடி

பூவையர் விரும்பக் காட்சிதரும்

தேவதையே! உன்னைத் துதிக்கின்றேன்!

வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்

வாசம் நிறைந்த வரலஷ்மீ!

சந்திப் பவர்க்கு மகிழவு தர

தருணம் பார்த்தே இருப்பவளே!

சந்திர னோடு நீ பிறந்தாய்

சந்திர வதனம் நீ பெற்றாய்!

செங்கதி ரோடு ஒளி போன்றே

திருமா லோடு திகழ்பவள் நீ!

புயங்கள் நான்கு கொண்டவளே!

புதிய நிலாவின் வடிவினளே!

பயன்படு செல்வம் தருபவளே!

பக்தர்க் கருளைப் பொழிபவளே!

நயந்த அன்பர் வாழ்வினிலே

நல்லின் பத்தைத் தருபவளே!

வியக்கும் மங்கல வடிவம் நீ!

வித்தகியே! உனைப் பணிகின்றேன்!

தூயவளே! நீ உலகன்னை!

துலங்கு சக்தியின் முதற் பண்ணை!

மாயச் செய் என் வறுமையினை!

மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!

ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்

அமைதி துலங்க விளங்குகிறாய்!

தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்

சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்!

விளங்கும் வெளிச்ச உருவோடு

வில்வக் காட்டில் விளையாடி

இலங்கும் திருமால் மார்பினிலே

இடமும் பெற்ற இலக்குமியே!

நலமார் செல்வக் களஞ்சியமே!

நல்ல வாழ்வின் இலக்கியமே!

கலங்கும் பாவ வினை போக்கி

கனக மழையைப் பெய்விப்பாய்!

அன்னை வடிவே! உன்னாலே

அரிய தனமும் தானியமும்

நன்மை பலவும் வருகிறது!

நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!

பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே

புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!

தன்னை பூஜை செய்வோர்க்கு

சகல வரம்தரும் சந்நிதி நீ!

திருப்பாற் கடலில் உதித்தவளே!

திருமால் மார்பிடை பதித்தவளே!

விருப்போ டணுகும் பக்தர்க்கே

வெற்றியை வாழ்வில் தருபவளே!

செறித்த கனகச் சூழலுடன்

சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்

பொருத்த முடனே பொலிகின்ற

பூவே! உன்னைப் போற்றுகிறேன்!

தேசம் போற்றும் உத்தமியே!

ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!

பூசை மலராய்ப் பொலிகண்கள்!

பொன்னைப் பொழியும் திருக் கைகள்!

மோசம் செய்யும் வறுமையினை

முற்றும் அழிக்கும் அருட்பார்வை!

ஆசை யாவும் நிறைவேற்றும்

அன்னை உன்னைப் புவிபோற்றும்!

நவ துர்க்கைக்கும் மூலமென

நாயகியே நீ விளங்குகின்றாய்!

சிவன் அயன் திருமால் மூவருமே

சேர்ந்த சங்கம வடிவம் நீ!

அவரவர் தொழிற்கும் நீ மூலம்!

அன்னை நீயே முக்காலம்!

அவனி சுழன்றிட காரணமே!

அனைத்தும் நிறைந்த பூரணமே!

தேவ மாதர் பணி செய்ய

திகழும் சுடர் நீ! மேன்மை நீ!

மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!

மூவர் போற்றும் முதல்வி நீ!

மூவுல குக்கும் இறைவி நீ!

ஆவ தனைத்தும் உன்னாலே!

ஆசி அளிப்பாய் கண்ணாலே!

நாரா யணரின் நெஞ்சமெனும்

நற்றா மரைப்பூ நடுவினிலே

சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!

திசைகள் எட்டும் உன் புகழே!

ஆரா திப்பார் இல்லத்தை

அரண்மனை ஆக்கும் பெற்றியளே!

பூரணக் கருணை பொழிந்திடுவாய்!

பொன் மகளே! உன் அடி சரணம்!

தினமும் காலை மாலையிலே

திருவார் இலக்குமி தோத்திரத்தை

மனையப்படுத்தி மலரிட்டு

மங்கல தீப தூபமுடன்

விநயத் தோடு துதித்து வர

வெளிச்சம் வாழ்வில் நிலையாகும்!

கனகம் நிறைந்தே இவ்வுலகின்

காவல ராகிச் செழித்திடலாம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more