எத்தனை எத்தனை விதம்? தேர்தல் காலத்து வலைகளும் தூண்டில்களும்- பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

தேர்தல் களம் மீன்பிடி சீசன் போல விறுவிறுப்பாகிவிட்டது. மீன் பிடிக்கும் பருவ காலத்தில் வலைகளும், தூண்டில்களும் பயன்படுத்தப்படும். அதைப் போன்ற வலைகளையும் தூண்டில்களையும் அரசியல் கட்சிகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

ஒரே ஒரு வித்தியாசம் வலைகளில் ஏராளமான சிறிய மீன்கள் சிக்கும். தூண்டில் போட்டால், ஒவ்வொரு மீனாகத்தான் கிடைக்கும்.

தேர்தல் களத்தில் பெரிய மீன்களுக்காக வலை வீசப்படும். ஏராளமான மீன்களை அள்ளுவதற்குத் தூண்டில்கள் போடப்படும்.

Senior Journalist Paa Krishnans Artilce on TN Assembly Election Manifestos

அதென்ன வலைகளும் தூண்டில்களும் ...?

வலைகள் மாற்றுக் கட்சியின் பெரிய பிரமுகர்களைப் பிடித்து இழுப்பதற்காக வீசப்படும். வாக்காளர்களைத் தங்கள் வசம் ஈர்ப்பதற்காக தூண்டில்கள் போடப்படும். தூண்டில்களில் நிச்சயம் புழு மாட்டப்படும் என்பது மிகவும் முக்கியம்.

கடந்த சில தினங்களாக இந்த இரண்டு வேலைகளும் வெகு வேகமாக நடந்தேறி வருகின்றன.

திமுக சார்பில் கடந்த 2019ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பே 2016ல் போட்டியிட்டபோதும் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார். அதை எதிர்த்து சரவணன் வழக்கு தொடுத்த நிலையில் போஸ் மறைவால் ஏற்பட்ட இடைத் தேர்தலில் டாக்டர் சரவணன் திமுக சார்பில் வென்று, எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். ஆனால், இந்த முறை அவருக்கு போட்டியிடும் வாய்ப்பைத் தி.மு. கழகம் தரவில்லை. இதனால், அவர் அதிருப்தியோடு மார்ச் 14ம் தேதி காலையில் பாஜகவில் சேர்ந்தார். சில மணி நேரத்தில் மாலையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதே தொகுதியில் களத்தில் நிற்கிறார். சரவணனுக்கு சீட் தருவது என்ற வலைதான் வீசப்பட்டிருக்கும் என்கிறார்கள்.

இதைப் போல் காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற விஜயதரணிக்கு இந்த முறை வாய்ப்பு தரப்படுமா என்பது கேள்விக் குறி எனவும், அதனால் அதிருப்தியில் உள்ள அவர் வேறு கட்சிக்கு மாறக் கூடும் என்றும் பலமாகச் செய்திகள் பரவி வருகின்றன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால், ஞாயிறு (மார்ச் 14) வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 21 பேர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை வரையில் அறிவிக்கப்படவில்லை. இதனால்தான் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடும் என்ற அதிருப்தியில் அவர் இருக்கிறார் என்கிறார்கள். நான்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படாதது குறித்து கேட்டதற்கு ஒரு காங்கிரஸ் பிரமுகர், "அதற்காகத்தான் சிலர் கட்சி மாறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். எதுவும் நெருப்பில்லாமல் புகையாது" என்கிறார்.

பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற சில காலத்திலேயே திமுகவைச் சேர்ந்த நாமக்கல் வி.பி. துரைசாமியை இழுத்துவிட்டார். அதையடுத்து நடிகை குஷ்பு காங்கிரஸிலிருந்து வந்து சேர்ந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, பாஜக ஏற்கெனவே, தேர்தல் அறிவிப்புக்குச் சில மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், திமுகவைச் சேர்ந்த ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம், கே.பி. ராமலிங்கம் என்று பலருக்கு வலை வீசி பிடித்துவிட்டது. இப்போது விஜயதரணியா என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் நிறைவு பெறும் வகையில் இன்னும் சில வலைகள் வீசப்படக்கூடும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதனிடையில், தமிழகத்தின் இரு பிரதான திராவிடக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்டன.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அதைத் தருவேன், இதைத் தருவேன் என்று இலவசங்களை அதிகம் அள்ளி வீசவில்லை. ஆனால், அண்ணா திமுக பெண்களைக் கவர்வதற்காக இலவச வாஷிங் மிஷன் அளிப்பதாகவும் பேருந்தில் இலவசப் பயணம் என்றும் கவர்வதற்காக தூண்டில்களைப் போட்டிருக்கிறது.

இரண்டு கழகங்களும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பதாக உறுதி அளித்துள்ளன. அத்துடன் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சில நல்வாழ்வுத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி அளிப்பதையும் உறுதி செய்துள்ளன.

திமுக சமையல் எறிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் தருவதாகக் கூறியுள்ள நிலையில், அதிமுக 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

புதிதாக இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று திமுக கூறியிருக்கும்போது, அண்ணா திமுக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசுப் பணி என்று அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தர வகை செய்யப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவிக்க, அதிமுக சார்பில் திட்டக் குழுத் துணைத் தலைவர் சி. பொன்னையன், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கச் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இப்படி இரு கழகங்களும் போட்டிபோட்டு வாக்குறுதிகள் என்ற புழுக்களைத் தேர்தல் அறிக்கைகள் என்ற தூண்டிலில் போட்டு மீன்களைப் பிடிக்க ஆயத்தமாகிவிட்டன.

எது எப்படியோ, வீசப்பட்டு வரும் வலைகளில் சிக்கிய மீன்களால் பிடித்தவர்களுக்குப் பயன் கிடைக்குமா என்பதும் தூண்டில்களில் எவ்வளவு மீன்கள் சிக்கும் என்பதும் தேர்தல் நடந்து முடிந்தவுடன் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+