ஆடி அமாவாசை.. சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் மட்டும் அனுமதி.. 1 வாரம் நீட்டிக்க பக்தர்கள் கோரிக்கை
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒரு வார காலம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர்: ஆடி அமாவாசை விழாவிற்கு சதுரகிரி மலைக் கோவிலில் பக்தர்களுக்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வரை, ஒரு வார காலத்துக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த ஆடி அமாவாசை திருவிழா இந்த ஆண்டு, 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Recommended Video
விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரில் சதுரகிரி சுந்தரமகாலிங்கனார் கோவில், கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் வரவை எதிர்நோக்கி தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சதுரகிரி சிவபெருமானை, ஆடி அமாவாசை, சித்ரா பௌர்ணமி, மார்கழி திருவாதிரை நட்சத்திர நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் வழிபட்டால், கர்மாவின் பிடியிலிருந்து விடுபட முடியும், மோட்சம் கிட்டும் என்பது அகஸ்தியர் அருள்வாக்கு.

ஆடி அமாவாசை சிறப்பு
ஜோதிட ரீதியாக, ஆடி அமாவசை அன்று, சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் ஆடி மாதம் முழுவதும் அமர்ந்திருக்கும் சூரியனோடு சந்திரனும் பெயர்ச்சியாகும். எனவே, ஆடி அமாவாசை சந்திரனின் பலமும் தாக்கமும் அதிகமாக இருக்கும். பித்ரு கடன் தீர்ப்பது முதல், விரதம் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவது வரை, ஆடி அமாவாசைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. சிவனின் அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் இணையும் போது, சிவன் ஆலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

ஆடி அமாவாசை எப்போது?
இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வரும் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல கோவில்களில் ஆடி அமாவசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழாவாகக் கொண்டாடப்படும்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்
சதுரகிரி ஆலயத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அமாவாசை அன்று வருகை தந்து வழிபடுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று கட்டுப்பாடு மற்றும் ஊரடங்குக் காரணமாக, பக்தர்களை ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அனுமதிக்கவில்லை. மலையின் அடிவாரம் வரை வந்து, ஏமாற்றத்தோடு பக்தர்கள் திரும்பிச் சென்றார்கள். பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆடி அமாவாசை பூஜைகளும், வழக்கமான பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்றது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அமாவாசை,பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆடி அமாவாசையில் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி என்று கூறி வந்துள்ள நிலையில், நான்கு நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வரை, ஒரு வார காலத்துக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த ஆடி அமாவாசை திருவிழா, இந்த ஆண்டு, 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

1 வாரம் அனுமதிக்க கோரிக்கை
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் அலைமோதும். பிரதோஷம் தொடங்கி, ஆடி அமாவாசை முடியும் வரை, நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் பலரால் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம், அல்லது சாமி தரிசனம் திருப்தியாக செய்ய முடியாமலும் போகலாம். எனவே, கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே, ஒரு வார காலத்திற்கு ஆடி அமாவாசை திருவிழாவை நீட்டிக்கக் கோரி, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications