ஆடி பவுர்ணமி.. சதுரகிரியில் மலையேற அனுமதி.. பக்தர்களுக்கு வனத்துறை சொன்ன குட்நியூஸ்
சென்னை: ஆடி மாத சிவராத்திரி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பக்தர்கள் இன்று முதல் வரும் 2ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு.

நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள் தரிசித்துள்ளனர், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.
சதுரகிரி என்பது திருக்கைலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். இங்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி ,பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சதுரகிரியில் ஆடி மாத அமாவாசை வழிபாட்டுக்கு அனுமதி வழங்கியபோது கடந்த ஜூலை 15ஆம் தேதி காட்டுத்தீ பரவியது. இதனால், பக்தர்கள் அடிவாரம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. மலை மீது கோவிலில் தங்க வைக்கப்பட்டனர். ஆடி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்காக நேற்று முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்யலாம் என வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு சாத்தூர் வனசரகம் ஐந்தாவது பீட்டில் சதுரகிரி மலையை ஓட்டியுள்ள ஊஞ்சல்வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலை ஏறுவதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரிக்கு வந்திருந்தனர். வனத்துறையினர் அனுமதி அளிக்காத காரணத்தால் தாணிப்பாறை அடியிலேயே சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர்.
இதற்கிடையே, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களாக மழையின்றி வனப்பகுதி வறண்டு இருப்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலையில் காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் எடுத்துச்செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications