ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாணம்.. ஜூலை 17ல் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமிக்கு திருக்கல்யாண திருவிழா நாளைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆடி அமாவாசை நாளில்
ராமர் தங்க கருட வாகனத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளுவார். 24ஆம் தேதி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
ஜோதிர்லிங்க தலமாக பக்தர்களால் போற்றப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். அம்மனின் சேது சக்தி பீடம், ராமர் வழிபட்ட தலம் , பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம் , சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் அதி சிறப்பு வாய்ந்த அற்புத சிவஸ்தலம் ராமேஸ்வரர் ராமநாதசுவாமி கோவில்.

இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவார திருத்தலம் ஆகும். அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக அக்னி பிரவேசம் செய்யச் சொன்னார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றாராம். எனவேதான் இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்கின்றனர்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை 13-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான 13ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோவிலின் அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் ரத வீதிகளில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை மறுநாள் 14ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு மேல் அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு மேல் அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 17ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 21ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சியும் 23ஆம் தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
வரும் 24ஆம் தேதி அன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். 29ஆம் தேதி அன்று சுவாமி அம்பாள் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு ஆடி திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications