அசுரரை வென்ற இடம்..தேவரை காத்த இடம்! திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா பணிகள் தீவிரம்!ரூம் புக்கிங் ஈசி
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட தங்கும் விடுதியில் அறைகளை முன்பதிவு செய்வது எப்படி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடத்திற்கு பல்வேறு மாதங்கள் திருவிழா நடைபெறும். குறிப்பாக ஆவணித் திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, மாசி திருவிழா, வைகாசி விசாகத்திருவிழா, தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதில் முக்கியமான திருவிழா கந்தசஷ்டி திருவிழாவாகும். தமிழகத்தில் உள்ள முருகப்பெருமானின் ஆறு படை வீடுகள் மட்டுமல்லாது பிற முருகர் ஸ்தலங்களிலும் கந்தசஷ்டி விழாவும் சூரசம்காரமும் நடைபெறும். ஆனால் திருச்செந்தூர் சூரசம்கார விழாவை காணவே லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். காரணம் திருச்செந்தூர் தலத்தில் தான் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்தார் என்பதோடு, தன்னை நோக்கி தவம் செய்த குரு பகவானுக்கும் காட்சி அளித்த தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே மற்ற தளங்களை விட திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவும் சூரசம்கார விழாவும் உலகப் புகழ் பெற்றதாக பார்க்கப்படுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், 6 நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து விரதம் இருப்பார்கள். பின்னர் மீன் சமைத்துச் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். இந்நிலையில் இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7 ஆம் தேதி மாலையில் கோவில் முன்புள்ள கடற்கரை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தருவார்கள். இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் முன்புள்ள கடற்கரையில் நடைபெறும். அந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதியில் கடற்கரை மணலை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் கடற்கரை மணலை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கந்த சஷ்டி திருவிழாவிற்காக கோவிலுக்கு வருகை தந்து விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் 18 இடங்களில் ஒரு லட்சத்து பதினோறாயிரத்து நூற்று பதினெட்டு சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கொட்டகைகள் அனைத்தும் மேற்கூரையில் மழை நேரத்தில் பக்தர்கள் சிரமமின்றி தங்குவதற்காக தகரத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக கொட்டகையில் 6500 பக்தர்கள் வரை தங்கலாம். இந்த பணிகளில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அருகிலேயே தேவஸ்தான விடுதிகள் கட்டப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவை திறந்து வைக்கப்பட்ட நிலையில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி தங்கும் அறைகள் முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சமையலறை, உணவகம்,ஓய்வு வரை, வாகன நிறுத்துமிடம் என பலவித வசதிகளுடன் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேர் தங்கக் கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி ரூமுக்கு 700 750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 10 பேர் மொத்தமாக தங்கும் அறைக்கு ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் மிகக் குறைந்த செலவிலேயே பக்தர்கள் தங்கலாம். இந்த நிலையில் முருகன் கோவிலில் உள்ள தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்க விரும்பினால் அந்தந்த தங்குமிட அலுவலகங்களில் நேரடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். வெளியூர் பக்தர்கள் என்றால் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in என்ற தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications