வைகையில் வெள்ளம்.. பிட்டுக்கு மண் சுமந்து பிறம்படி பட்ட இறைவன்.. மதுரையில் சிவனின் திருவிளையாடல்
மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரரின் ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய திருவிளையாடலான பிட்டுக்கு மண் சுமந்த லீலை நேற்றைய தினம் புட்டுத்தோப்பில் நடைபெற்றது. பெருக்கெடுத்து வந்த வைகையாற்றங்கரையை பலப்படுத்த இறைவனே மண் சுமந்து வந்து பாண்டியனிடம் பிரம்படி பட்ட திருவிளையாடலை மக்கள் நேரடியாக கண்டு தரிசனம் செய்தனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மூலம் திருவிழா அற்புதமாக நடைபெற்று வருகிறது. தினம் ஒரு திருவிளையாடல் என நடக்கும் இந்த விழாவின் முக்கிய அம்சமாக இன்று இறைவன் சொக்கநாதர் வயதான மூதாட்டி வந்தி பாட்டி கூலியாக கொடுத்த பிட்டினை பெற்றுக்கொண்டு மண் சுமந்த லீலையும், வேலை செய்யாமல் வைகை ஆற்றங்கரையில் படுத்து உறங்கிய இறைவனைப்பார்த்து கோபமாக பாண்டிய மன்னன் பிரம்பால் அடித்த கதையும் புட்டுத்தோப்பில் நடைபெற்றது.

ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய அம்சமான நரிகளை பரியாக்கி பரிகளை நரியாக்கி இறைவன் ஆடிய திருவிளையாடல் சிறப்பு வாய்ந்தது. தன் மீது பக்தி கொண்ட மாணிக்கவாசகருக்காக இறைவனே மதுரைக்கு எழுந்தருளிய நாள்தான் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரநாள். இந்த நாளில்தான் வைகையும் பெருக்கெடுத்தது. பெருக்கெடுத்த வைகையை அடைக்க மூதாட்டிக்கு கூலி ஆளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற இறைவனின் லீலைகளை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நாட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு ஒவ்வொரு சிறப்பு உண்டு. சித்திரை, மகம், உத்திரம், விசாகம் என பல நட்சத்திரங்களுக்கும் பல சிறப்பங்கள் உண்டு. மூலம் நட்சத்திரத்தை முன்வைத்து மதுரையில் ஆவணி மூலம் திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் லீலைகளை முன்வைத்து இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக மூலம் நட்சத்திர நாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும், எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது. இந்த ஆண்டு மேக மூட்டத்துடனேயே ஆவணி மூலம் நட்சத்திர நாளில் சூரியன் தோன்றியது. எனவேதான் பருவமழை நன்றாக பொழிய சிவனுக்கு ஆவணி மூலம் திருவிழா கொண்டாடுகின்றனர்.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அரண்மனையில் மாணிக்க வாசகர் அமைச்சராக இருந்தார். படைக்காகக் குதிரைகள் வாங்க பொருளைக் கொடுத்து மந்திரியாகிய மாணிக்க வாசகரை அனுப்பி வைத்தார் மன்னர். குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் குதிரைகளுடன் திரும்பி வருவார் என்று மன்னர் எதிர்பார்த்தார். நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. குதிரைகளையும் காணோம் அமைச்சர் மாணிக்கவாசகரையும் காணோம்.
அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளைக் கொண்டு திருப்பெருந்துறைக் கோவிலுக்குத் திருப்பணி செய்துவிட்டான் அமைச்சர் மாணிக்கவாசகர். பாண்டிய மன்னனின் மகாகோபத்துக்கு ஆளானார் மாணிக்கவாசகர். என்ன செய்வதென்று அறியாமல், கடவுளிடம் கசிந்துருகிப் பாடினான். சிவகணங்களைக் குதிரைப் பாகர்களாகவும், நரிகளைப் பரிகளாகவும் ஆக்கி மதுரைக்கு அனுப்பிவைத் தான் சிவபெருமான்.
மன்னனும் மகிழ்ந்தான் ஆனால், அன்று இரவே மறுபடியும் அந்தப் பரிகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன. இம்முறை கட்டுக்கடங்கா கோபம் பாண்டியனுக்கு வந்தது. மாணிக்கவாசகரை சுடு மணலில் கட்டிப் போட்டார். ஆனால், இறைவன் திருவருளால் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது மணலும் குளிர்ந்தது. இதனைக் கண்டு அரசன் ஆண்டவன் அருள் பெற்றவர் தம் அமைச்சர் என்ற பெருமைப்பட்டு அவனை விடுவித்ததாக தலபுராணம் கூறுகிறது.

பெருக்கெடுத்த வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும் பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வந்தி மூதாட்டி பிட்டு விற்கும் ஏழை முதியவள். வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்தும் பணிக்காக பணியாட்கள் உத்தரவிட்டனர்.
முதுமை காரணமாக வந்தி பாட்டியால் தனது பகுதி வேலையை செய்ய முடியவில்லை. கூலியாள் வடிவத்தில் வந்த சிவபெருமான் உதிர்த்த பிட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்வதாக சொன்னார். ஊதியத்தை வாங்கி சாப்பிட்ட இறைவன், தனது வேலையைச் செய்ய, மூதாட்டியிடம் விடைபெற்று அற்றங்கரைக்குச் சென்றார். ஆனால் அங்கே வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார்.
இதை கவனித்த மேற்பார்வை அதிகாரிகள், கூலியாளை எழுப்பினார்கள். ஏய் வேலை செய்யாமல் இங்கே உறங்கவா வந்தாய் என்று கேட்டனர். அதை கேட்காமல் உறங்கிக் கொண்டிருந்தார் இறைவன். பாண்டிய மன்னனும் இந்த காட்சியை கண்டு கோபம் கொண்டான். பிரம்மால் இறைவன் முதுகில் ஓங்கி அடித்தான். அடி வாங்கியது அந்த சிவனல்லவா? சிவனுக்குக் கிடைத்த பிரம்படியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். தனது பிழையையும் உணர்ந்தான்.
அப்போது இறைவன், "பாண்டியனே, தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது. ஆதலால் நாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம். வந்தியின் கூலியாளாய் வந்து அவளிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக என்று அருள்வாக்கு அருளினார்.

அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லைஅம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக்கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் ஜோதியில் கலந்தார். இறைவனாரின் ஆணைப்படி சிவகணங்கள் வந்தி பாட்டியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அரிமர்த்தபாண்டியன் சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று இறைவனாரின் திருவடியை அடைந்தான். இதன் காரணமாகவே ஆண்டு தோறும் புட்டுதோப்பில் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் என்ன தான் தங்கள் பணியைச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள் தான். அவையனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து. நல்ல சீதோஷ்ணம் வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். மதுரையில் இப்போது சிவபெருமானில் ஆட்சி நடைபெறுகிறது. மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர் கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications