அனுமன் ஜெயந்தி விழா : 100008 வடைமாலையில் ஜொலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்.. பக்தர்கள் தரிசனம்
நாமக்கல்: தமிழ்நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி அமாவாசை: மார்கழி மாதம் அமாவாசை மூலம் வரும் நாளில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமான் கோயில்களிலும் பெருமாள் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறை தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

சிரஞ்சீவி அனுமன்: அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் அஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும்.
இன்று அனுமன் ஜெயந்தி: திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 11ஆம் தேதி வியாழக்கிழமை இன்று கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

வடைமாலை: அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனையடுத்து பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டது. இந்த வடைகளை தயாரிக்க 2,250 கிலோ உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்பட்டது. 650 கிலோ நல்ல எண்ணெய், 35 கிலோ மிளகு, சீரகம், உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 32 பேர் வடைகளை தயார் செய்துள்ளனர்.
சுசீந்திரம் ஆஞ்சநேயர்: இதே போல சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. எந்த ஒரு கஷ்டம் என்றாலும் மனதார அனுமனை அழைத்தால் ஓடோடி வருவார். ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.












Click it and Unblock the Notifications