வைகாசி விசாகம் 2024: சூரபத்மாவைத் துணித்தகை யதனால்! முருகன் கோயில்கள் பக்தர்கள் கூட்டம்
சென்னை: வைகாசி விசாகத்தையொட்டி இன்று முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வைகாசி விசாகத்தன்று விரதமிருந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைக் கூடும் என்பது ஐதீகம். வைகாசி மாதம் விசாக்துடன் கூடிய பவுர்ணமி அன்று வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது.

அழகென்ற சொல்லுக்கு முருகா! அந்த அளவுக்கு தமிழ் கடவுளான முருகன் கொள்ளை அழகு கொண்டவர். எனவே அழகன் என்றால் முருகன், முருகன் என்றால் அழகன் என சொல்லலாம். ஒரு காலத்தில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக மிகப் பெரிய அவதாரம் தேவைப்பட்டது.
அந்த அவதாரத்தால்தான் அப்படிப்பட்ட கொடிய அரக்கனை அழிக்க முடியும். இந்த நிலையில் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க , சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணை திறக்க, அதில் இருந்து 6 நெருப்பு பொறிகள் வெளிப்பட்டன. அது மூன்று உலகையுமே தகித்தது. யாருமே அங்கு செல்ல முடியவில்லை.
அந்த நேரத்தில் அக்னி பகவான் அந்த 6 நெருப்பு பொறிகளையும் தன் கைகளில் தாங்கி பிடித்தார். அக்னி பகவானையே அந்த நெருப்பு பொறிகள் பதம் பார்த்தன. தாங்க முடியாத வெப்பத்தில் இருந்த 6 நெருப்பு பொறிகளையும் அக்னி பகவான் சரவண பொய்கையில் கொண்டு போய் குளிர வைத்தார்.
இதையடுத்து இந்த 6 நெருப்பு பொறிகளும் 6 குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை வளர்க்க 6 கார்த்திகை பெண்கள், சரவணப்பொய்கையில் தோன்றி 6 குழந்தைகளையும் கையில் எடுத்தனர். பிறகு அந்த 6 குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறியது. முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.
ஆறுமுகம், 12 கைகள், 2 கால்களுடன் முருகன் காட்சியளித்தார். எனவே முருகப்பெருமான் பிறந்த அந்த வைகாசி விசாகத்தை உலக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்ற பெயரும் வந்தது. இந்த வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
குழந்தை பேறும் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேருவர். சகல தோஷமும் விலகிவிடும். இந்த நாளில் விரதம் இருப்பது புண்ணியத்தை தரும். வைகாசி விசாகத்தன்று காலையில் குளித்துவிட்டு தெய்வத்தை நினைத்து தியானித்தல் வேண்டும். வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை துடைத்து அலங்கரித்து பூஜை செய்யலாம்.
கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு கோயிலுக்கு செல்லலாம். இன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். முடியாதவர்கள் பால், பழங்களை உட்கொள்ளலாம். இதனால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். இந்த வைகாசி விசாகத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.












Click it and Unblock the Notifications