மதுரையில் அஷ்டமி சப்பரத்தில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்.. இன்று அன்னதானம் செய்தால் என்ன பலன்?
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தினம் தினம் திருவிழாதான். மார்கழியில் உலக மக்களுக்கு எல்லாம் படியளக்கும் அஷ்டமி சப்பர திருவிழா இன்று நடைபெறுவதால் மாசி வீதிகள் களைகட்டியுள்ளன. அதென்ன அஷ்டமி சப்பரம், இந்த நாளில் மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் தரிசனம் செய்தால் என்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
மார்கழி அஷ்டமி: மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சொக்கநாதரும் மீனாட்சி அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம். அதிகாலை 5.30 மணிக்கு எல்லாம் மாசி வீதிகள் களை கட்டிவிடும். அதிகாலையிலேயே கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வருவதை காணவே மக்கள் குவிந்திருப்பார்கள்.

படியளக்கும் சிவபெருமான்: இன்றைய தினம் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் படியளக்க வந்த சிவபெருமானையும் மீனாட்சி அம்மனையும் தரிசனம் செய்ய நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுத்து வந்தனர்.
அள்ள அள்ள அன்னம்: தினந்தோறும் சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த அஷ்டமி சப்பர வீதி உலா நடைபெறுகிறது. இன்றைய தினம் அஷ்டமி சப்பர விழாவின் போது சிவாச்சாரியர்கள் பலரும் வீதிகளில் அரிசியை தூவிக்கொண்டே வந்தனர். நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்துக் கொண்டு சென்றனர்.
பசிப்பிணி தீரும்: திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள உணவு கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. அஷ்டமி சப்பர நிகழ்வுக்கான முக்கியமான வரலாற்றையும் படியளந்த லீலை பற்றியும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் பார்வதி தேவிக்கு கூறியுள்ளார்.

மதுரையின் சிறப்பு: ஒரு நாள் சிவபெருமானும், பார்வதி தேவியும் ஏகாந்தமாயிருக்கும் சமயம் தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், 'ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? என்று கேட்டார். பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்' என்றாள். அதற்கு சிவபெருமான்,
மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடப்பது உறுதி என்று கூறினார் சிவபெருமான்.
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் திருமங்கலம் என்னும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வேத, வேதாந்த நூல்களைக் கற்று கரை கண்டவன். மிக்க அறிவாளி. கடவுள் பக்தி மிக்கவன். பிராமண நியதிகளிலிருந்து வழுவாது வாழ்ந்தவன். எனினும் அவன் மிகக் கொடியவன். பல தீய வழிகளில் பணம் சேர்ப்பவன். அவனைக் கண்டு மக்கள் அஞ்சி ஒதுங்கினர்.
கத்தரிக்காய்: அதே ஊரில் மற்றொரு பிராமணன் இருந்தான். அவன் கத்தரித் தோட்டம் வைத்து, அதில் விளையும் கத்தரிக் காய்களை விற்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்த கத்தரிக்காய் பிராமணனை, பாவி பிராமணன் கண்டு அவனை வாயில் வந்த படியெல்லாம் பேசி, உதைத்து சுவாமி தரிசனம் செய்ய விடாது விரட்டி விட்டான். இதனால் மனம் நொந்த கத்தரிக்காய் பிராமணன் உடனே பாண்டிய மன்னனிடம் போய் முறையிட்டான்.
குழப்பத்தில் பாண்டிய மன்னன்: பாண்டிய மன்னன் உடன் அவனை அழைத்து கோபத்துடன் அவன் அப்படிச் செய்த காரணம் கேட்டான். உடன் பாபி, 'அரசே, கத்தரிக்காய் மாமிசத்திற்கு ஒப்பானது. அதை உண்பது பாவம். ஆதலால், நான் அவனை ஆலயத்திற்கு வரவிடாது உதைத்து விரட்டினேன்' என்றான். அதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசனோ இதற்கு எப்படித் தீர்வு கூறுவதென குழம்பி நின்றான்.
அகத்தியர்: அகத்திய மாமுனிவர் அந்த நேரத்தில் பாண்டிய மன்னனின் அரசவைக்கு வந்தார். அவரை வணங்கி நின்ற பாண்டிய மன்னன், "ஹே! குருதேவா! கத்தரிக்காய் பற்றிய வரலாற்றைக் கூறியருளுக" என வேண்டினான். அகத்தியரும், 'முன்னொரு காலத்தில் வார்த்தாகன் என்னும் பெயருடைய ஒருவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான்.
மகாவிஷ்ணு: அந்த நேரத்தில் வைகுண்டத்திலிருந்து கருடன் வடிவத்தில் மகாவிஷ்ணு வந்தார். வார்த்தாகனோ விஷ்ணுவை கவனிக்காது சிவபூஜையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். மகாவிஷ்ணு கோபித்து கொண்டு வார்த்தாகனை கற்ப முடிவு வரையில் ஒரு செடியாக மாறும்படியும், அச்செடியில் உண்டாகும் காயும் சாப்பிட ஏற்றதகாது என்றும் சாபமிட்டு மறைந்தார். வார்த்தாகனோ தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு பயந்து மேலும் சிவ பூஜை, அர்ச்சனை செய்தான்.

வரம் அளித்த சிவபெருமான்: சிவபெருமான் தரிசனமளித்து, "உன் பூஜையால் மகிழ்ந்தோம். ஸ்ரீ விஷ்ணுவின் சாபத்திற்கு அஞ்ச வேண்டாம். உனது நாமசம்பந்தமான வார்த்தாகச் செடியில் விளையும் காயானது பிராமணர் சாப்பிட ஏற்றது, உனது கறியின்றி எனக்குச் செய்யும் பூஜை ஏற்புடையதாகாது. என் அன்பர்களுக்கு நீ விருப்பமுடையவனாவாய்." என வரமளித்தார். எனவே வார்த்தாகக் காயெனப்படும் கத்தரிக்காய் சாப்பிடுவது தவறல்ல" என்றுரைத்து அகத்தியர் காசிக்குப் புறப்பட்டார்.
பரிசளித்த பாண்டிய மன்னன்: வார்த்தாகன் விஷ்ணுவை அவமதித்த காரணத்தாலேயே அவருக்கு உகந்த ஏகாதசி, துவாதசி நாட்களில் கத்தரிக்காய் சாப்பிடுவது பாவம் எனக் கூறப்படுகிறது. உடன் பாண்டிய ராஜன் பாவியாகிய பிராமணனைச் சிறையிலடைத்ததோடு, கத்தரிக்காய் பிராமணனுக்கு தன, தான்யங்கள் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தான். சிறையிலடைபட்ட பாவி அந்தணன் பசியால் வாடி சில நாளில் மரணமடைந்தான்.
முன்வினை பாவம்: மதுரையம்பதியில் மரணமடைந்ததால், அருகில் சிந்தாமணி எனும் கிராமத்தில் ஒரு இடையனுக்கு மகனாகப் பிறந்தான். முன்வினை காரணமாய் அவன் எப்பொழுதும் கொடிய செயல்களைச் செய்து கொண்டிருந்தான். அவன் முற்பிறவியில் சிறந்த சிவபக்தனாயிருந்த காரணம் பற்றி அவனுக்கு முக்தி அளிக்க நினைத்தார் சுந்தரேசப் பெருமான்.
சிவபெருமான் லீலை: மீனாட்சி தேவியிடம் தன்னுடைய லீலை குறித்து பேசினார் சிவபெருமான், 'ஹே தேவி! பாவியாகிய அவ்விடையன் பல நற்காரியங்கள் செய்தவனாகையால் அவனுக்கு முக்தி கொடுக்க வேண்டும். நீ பசுவடிவம் எடுத்து அவன் தோட்டத்தில் பயிரை மேய்வது போலச் சென்றால், அவன் உன்னை அடிக்க துரத்தி வருவான். நீ இவ்வாலயத்தின் எல்லா வீதிகளையும் சுற்றி, நமது சன்னதி அருகில் வந்து அவனை ரிஷபத்தின் பின் தள்ளிவிட்டு, பசுவுரு நீக்கி என்னருகில் வருவாய்' என்று அருளினார் சிவபெருமான்.
முக்தி அடைந்த இடையன்: பார்வதி தேவியும் சிவபிரான் சொன்னபடி எல்லாம் செய்து முடித்தார். கீழே விழுந்தவுடன் இடையன் ஸ்தூல சரீரத்தை விட்டு சூக்கும சரீரத்துடன் தேவலோகம் சென்றான். அங்கு அவனுக்கு பார்வதி உடனுறை பரமேசுவரனாகக் காட்சி அளித்த எம்பெருமான், "உன்னால் செய்யப்பட்ட பாவங்கள் எல்லாம் என் கருணையால் முற்றும் நீங்கி நீ சுத்தனாகி விட்டாய். இனி நீ கயிலையில் வசிப்பாய் என்று ஆசி வழங்கினார் சிவன்.
சிவ ஆலய தரிசனம்: உனக்கு முக்தி கொடுத்த இந்த அஷ்டமி திருநாளில் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நித்ய நியமங்களை நிறைவேற்றி, மனதில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரரை தியானித்து, ஸ்ரீபஞ்சாட்சர ஜபத்தை வாயினால் ஓதிக் கொண்டு, மதுரையில் ஏழு வீதிகளையும் அனைத்து வீதிகளையும், பிரகாரங்களையும் வலம் வந்து, ஆலயத்திலுள்ள எழுந்தருளியுள்ள மூர்த்திகளையும் தரிசித்து, சந்நதியில் நமஸ்கரித்து, தங்கள் வீடு சென்று, தங்கள் வசதிக்கேற்ப நெய், தேன், தயிர் இவற்றோடு சிவபக்தர்களாகிய அந்தணருக்கு அன்னதானம் அளித்து அவர்களது ஆசிகளைப் பெற்றால் அவர்களுக்கு முக்தியும், கைலாய வாசமும் கிட்டுவது உறுதி" என்றார்.
பலன் தரும் வழிபாடு: எனவே, மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் எந்த ஊரில் இருந்தாலும் அங்குள்ள சிவாலயத்தில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரட்சிணம் செய்வதால் ஓர் அடிக்கு ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். வலம் வரும்போது எறும்புப் புற்றுகளுக்கு அரிசியிட வேண்டும். அவ்வாறு செய்தால் லட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்த பலனை அடைவர். எவ்வளவு பாபம் செய்தவராயினும் அஷ்டமி பிரதட்சிணத்தால் முக்தி அடைவர் என்று எடுத்துக்கூறியுள்ளார் சிவபெருமான்.












Click it and Unblock the Notifications