
சபரிமலையில் மண்டல பூஜை..குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் - 2023ஆம் ஆண்டில் என்னென்ன விஷேசங்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்னும் சில வாரங்களில் மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி, 2024 ம் ஆண்டு ஜனவரி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும் நாட்கள், முக்கிய விசேஷ நாட்கள் பற்றிய நாட்காட்டியை கோவில் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்தின் துவக்க நாளில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜை, படிபூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்படும். ஐந்து நாட்கள் மட்டுமே கோவில் திறக்கப்பட்டு, பிறகு நடை அடைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை திறக்கப்படும் போது மட்டுமே அதிக நாட்கள் கோவில் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்
இந்த ஆண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 65 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
இதற்கிடையே நேற்று திங்கட்கிழமை 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சன்னிதானம் மற்றும் பம்பையில் 2 எஸ்பிக்கள் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்
சபரிமலை ஐயப்பனை காண குவியும் பக்தர்கள்.. தரிசன நேரத்தில் இன்று முதல் மாற்றம் - முழு விபரம்
பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் பல பகுதிகளில் மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று சன்னிதானம், பாண்டித்தாவளம் உள்பட பகுதிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது. இதுவரை 13 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதனிடையே 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி, 2024 ம் ஆண்டு ஜனவரி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும் நாட்கள், முக்கிய விசேஷ நாட்கள் பற்றிய நாட்காட்டியை கோவில் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
2023-2024 சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கும் நாட்கள் :
ஜனவரி - தை மாதம் மகர மாதம்
2023 ஜனவரி 14 : மகரவிளக்கு தரிசனம்
ஜனவரி 20 : நடை அடைப்பு
பிப்ரவரி - மாசி மாதம் கும்ப மாதம்
பிப்ரவரி 12 - 17 : மாதாந்திர பூஜை
மார்ச் - பங்குனி மீன மாதம்
மார்ச் 14 - 19 : மாதாந்திர பூஜை
மார்ச் 26 - ஏப்ரல் 05 : சபரிமலை உற்சவம்
மார்ச் 27 : கொடியேட்டு
ஏப்ரல் 05 : பங்குனி உத்திரம், ஆராட்டு
ஏப்ரல் 11 - 19 : விஷூ திருவிழா சித்திரை விழத
ஏப்ரல் 15 : விஷூ மேஷ மாதம் பிறப்பு
மே :- வைகாசி ரிஷப மாதம்
மே 14 - 19 : மாதாந்திர பூஜை - வைகாசி
மே 29 - 30 : விக்ரஹ பிரதிஷ்டை பூஜை
ஜூன் - ஆனி மிதுன மாதம்
ஜூன் 15-20 : மாதாந்திர பூஜை - ஆனி
ஜூலை :- ஆடி - கடக மாதம்
ஜூலை 16 - 21 : மாதாந்திர பூஜை
ஆகஸ்ட் - ஆவணி சிம்ம மாதம்
ஆகஸ்ட் 16 - 21 : மாதாந்திர பூஜை
ஆகஸ்ட் 27 - 31 : ஓணம் பூஜை
ஆகஸ்ட் 29 : ஓணம் பண்டிகை
செப்டம்பர் - புரட்டாசி கன்னி மாதம்
செப்டம்பர் 17 - 22 : மாதாந்திர பூஜை
அக்டோபர் 17 - 22 : மாதாந்திர பூஜை - ஐப்பசி துலாம் மாத பூஜை
நவம்பர் 10 - 11 : ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள்
கார்த்திகை மாதம் விருச்சிக மாத பூஜை
நவம்பர் 16 - டிசம்பர் 27 : மண்டல பூஜை மகோற்சவம்
டிசம்பர் 27 : மண்டல பூஜை
டிசம்பர் 30 : திருநடை திறப்பு - மகர விளக்கு மகோற்சவம்
2024 ஜனவரி 14 : மகரவிளக்கு தரிசனம்