திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 3: வேண்டியது கிடைக்காவிட்டால் இறைவனே இல்லைனு சொல்லலாமா?
திருப்பாவை - பாடல் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: சிறுமிகளே பரந்தாமன் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியின் யாகத்திற்கு செல்கிறார். அங்கு தனக்கு 3 அடி மண் வேண்டும் என்கிறார். அதற்கு மகாபலி, வாமனின் குள்ளமான தோற்றத்தை கண்டு வெறும் 3 அடி போதுமா என கிண்டல் செய்கிறார். அதற்கு வாமனன் போதும் என்கிறார்.
அப்போது வாமனன் ஒரு அடியை வைத்த போது பூமியையும், 2ஆவது அடி வைத்த போது விண்ணையும் தனத்தாக்கிக் கொண்ட வாமனன், அடுத்த அடிக்கு எங்கே வைப்பது என கேட்க தன் தலையில் வைக்குமாறு கூறும் மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்து அவரது ஆணவத்தை ஒடுக்குவார். இப்படி விண்ணையும் மண்ணையும் தன் வசப்படுத்திய உத்தமனின் சிறப்புகளை நாம் பாடி பூக்களை வைத்து வழிபடுவதற்காக நீராட செல்லலாம்.
இந்த விரதத்தால் உலகம் முழுவதும் மாதம் மும்மாரி மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையை போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் எல்லாம் வயலுக்குள் பாய்ந்தோடும். குவளை மலர்களில் புள்ளிகளை கொண்ட வண்டுகள் தேன் குடிக்க வரும். அப்போது பசுக்கள் பாலை நிறைய தரும். அது போல் இந்த நோன்பானது வற்றாத செல்வத்தை தரும் என்கிறார்கள்.
விளக்கம்: இந்த பாடல் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாளை குறிக்கிறது. திருமாலின் பாதம் பட்டாலே மோட்சம் கிடைக்கும்.
திருவெம்பாவை பாடல் - 3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
பாடல் பொருள்: முத்து போன்ற பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த காலங்களில் நாங்கள் வந்து எழுப்பும் முன்னர் நீயே தயாராகி காத்திருப்பாய், சிவனே என் தலைவன் என்பாய், இனிக்க இனிக்க ஈசனின் புகழை பேசுவாய். ஆனால் இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழுந்து கொள்ளாமல் இருக்கிறாய்! கதவைத் திற என தோழியர்கள் அழைக்கிறார்கள். அப்போது அந்த தோழி, "ஏதோ தெரியாத்தனமாக தூங்கிவிட்டேன். அதற்காக என்னிடம் இப்படி கடுமை காட்ட வேண்டுமா என்ன, பக்திக்கு நான் புதியவள், உங்களை போல் வழிப்படும் முறைகளை தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு அனுபவம் எனக்கு இல்லை. என் தவறை பெரிதுப்படுத்தாதீர்கள் என முகத்தை உம்மென வைத்துக்கொண்டு அவள் சொல்ல, உடனே தோழியர்கள், ஏ அப்படியெல்லாம் இல்லைடி, இறைவன் மீது நீ தூய்மையான அன்பை வைத்துள்ளாய். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே சிவனை பாட முடியும். நீ சீக்கிரம் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்பதற்காக அப்படியெல்லாம் அவசர அவசரமாக உன்னை கிளப்ப நினைத்தோம் என்றனர்.
விளக்கம்: இறைவனிடம் பிரார்த்தனை செய்து வணங்குவது என்பது ஒழுக்கத்தை தரும். ஒரு வேளை பிரார்த்தனை நிறைவேறாவிட்டால் இறைவனை வேண்டுவதை நிறுத்துவது என்பது நிஜ பக்தியாக இருக்காது என இந்த பாடல் உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications