சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழா..ஜன.6ல் ஆருத்ரா தரிசனம் நடராஜர் வீதி உலா
கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஜனவரி 5ஆம் தேதி தேரோட்டமும் 6ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடராஜர் ஊர்வலமும் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி பெருந்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, நேற்று மாலை கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலிலிருந்து கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சுசீந்திரம் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று காலை தாணுமாலய சுவாமி சன்னதியின் எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்கு மண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றினார். வட்டப்பள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்தார். கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தாணுமாலய சுவாமியை வழிபட்டனர்.இதனை தொடர்ந்து, திருமுறை பெட்டகம் ஊர்வலம் கோவிலில் இருந்து துவங்கி நான்கு ரத வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.
மார்கழி திருவிழா இன்று துவங்கி வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. 9ஆம் திருவிழாவான வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர் மற்றும் பிள்ளையார் தேர் என 3 தேர்கள் உலா வருகின்றன. அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியுடன் மார்கழி திருவிழா நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications