நினைத்ததை நிறைவேற்றும் நாமக்கல் ஆஞ்சநேயர்.. நாளை கும்பாபிஷேகம்.. தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்
நாமக்கல்: பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை நவம்பர் 1ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் கால யாக சாலை பூஜை நேற்று தொடங்கியது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் மற்றும் நரசிம்மசுவாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தினமும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.
அப்போது, 'ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு, பிறகு வந்து என்னை எடுத்துச் செல்' என்று அசரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கு அருள்பாலிக்கிறார்.

இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.
இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர் எதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார். மிக பிரமாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.
கடந்த 1996ஆம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை புதன்கிழமை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன்படி, முதல் கால யாக சாலை பூஜைகள் நேற்று மாலை நடைபெற்றன. தொடர்ந்துஇன்று காலை வருண தீர்த்தம்புனிதப்படுத்துதல், அக்னி பகவான்பூஜை, தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின வேள்வி ஆகிய பூஜைகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து 10.45 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலைபிம்ப வாஸ்து, மஹா சாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. தொடர்ந்து நாளை காலை 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதற்கும் ஒரு புராண கதை உள்ளது. முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்ச நேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடுபடுகின்றனர் என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர்.
மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் "ஸ்ரீஆஞ்சநேயா போற்றி" என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகின்றனர். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகின்றனர். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications