அமெரிக்காவில் நவராத்திரி.. கொலு வைத்து கொண்டாட்டம்.. ஒலித்த விஷ்ணு சகஸ்ர நாமம்.. மகிஷாசுரமர்த்தினி
கலிபோர்னியா: கந்த சஷ்டி கவசமும், விஷ்ணு சகஸ்ரநாமமும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒலித்து ஆன்மீக அலைகளை பரப்பியுள்ளது.
இந்தியாவில் பாரம்பரியமாக கொண்டாடும் நவராத்திரி பண்டிகையை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனது இல்லத்தில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டதை மகிழ்ச்சியுடன் நமது ஒன் இந்தியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராஜி கோவிந்தராஜன்.

நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியர்களை வணங்குவதற்காகவே இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம். மகிஷனை அழிக்க அன்னை மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்தார்.
அசுர வதத்திற்காக அன்னை ஒன்பது நாட்கள் கொலுவிருந்து போரிட்டு பத்தாம் நாளில் வெற்றி பெற்றார். மகிஷாசூர சம்ஹாரம் நிகழ்ந்த நாளை விஜயதசமியாக வெற்றித்திருநாளாகக் கொண்டாடுகிறோம். மகிஷாசூரனிடம் போரிட்டு வெற்றி பெற்று தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் மகிஷாசுரமர்த்தினி என்று சக்திதேவியை போற்றினார்கள்.

ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது. இந்தியாவில் பல மாநிலங்களில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டது. 10 நாட்களாக நாடு முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடினர். விஜயதசமி பண்டிகை நேற்று நடைபெற்றது. வட இந்தியாவில் ராவண சம்ஹாரம் நடைபெற்றது. வில்லில் அம்பு தொடுத்து நெருப்பு வைத்து ராவணன், கும்ப கர்ணன், இந்திரஜித் ஆகியோரை அழித்தனர். தமிழ்நாட்டில் குலசேகரபட்டினத்தில் மகிஷாசூரசம்ஹாரமாக நடைபெற்றது. பல ஆலயங்களில் குதிரை வாகனத்தில் வந்த அம்மன் அம்பு தொடுத்து அசுரனை அழித்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களும் பாரம்பரிய முறைப்படி கொலு வைத்து கொண்டாடுகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மாண்டேகாவில் வசிக்கும் ராஜி கோவிந்தராஜன் என்பவரின் வீட்டில் 7 படிகள் அமைத்து கொலு வைத்து நவராத்திரி பண்டிகையை கொண்டாடினர்.
சிறப்பாக கொலு படிகளை அலங்கரித்து கடவுள்களின் பொம்மைகளை வரிசையாக வைத்து வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரித்திருந்தனர்.

நவராத்திரி தினத்தை விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் பாடலுடன் தொடங்கினர். கந்த சஷ்டி கவசம், மகிஷாசுரமர்த்தினி பாடல்கள் பாடி அன்னையை வணங்கினர். வீணை, பியானோ இசைக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொலுவில் பங்கேற்ற பலரும் பக்தியுடன் பாடல்களை பாடியும் கேட்டும் ரசித்தனர்.

கொலுவை காண கலிபோர்னியாவில் வசிக்கும் உறவினர்களும் நண்பர்களும் கூடினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலுவை காண வந்திருந்தனர்.
செவிக்கு சுவையான பாடல்கள்.. இன்னிசை கச்சேரி என ஒரு பக்கம் நடைபெற வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள், குங்குமம் வெற்றிலை பாக்குடன் பழங்களும் சேர்த்த தாம்பூலமும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அனைவரும் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்தியாவில் பாரம்பரியமாக கொண்டாடும் நவராத்திரி பண்டிகையை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டதை மகிழ்ச்சியுடன் நமது ஒன் இந்தியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராஜி கோவிந்தராஜன்.












Click it and Unblock the Notifications