பழனி கோவில் கும்பாபிஷேகம்..லக் இருந்தால் முருகனை தரிசிக்கலாம்..குலுக்கல் மூலம் டிக்கெட் உறுதியாகும்
திண்டுக்கல்:
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கான இணையதள முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் மின்னஞ்சல் வழியாகவும், செல்போன் குறுந்தகவல் மூலமும் அனுப்பி வைக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக விளங்குவது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் இக்கோயிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடத்தப்படவில்லை.

பல்வேறு தரப்பினரும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் நடைபெற்றது. ஆனால், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதனையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் பழநி கோயிலை ஆய்வு செய்து கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. ரூ.16 கோடி செலவில் கட்டுமானம் மற்றும் அழகுபடுத்துதல் பணி நடைபெற்று முடிந்துள்ளது.

கும்பாபிஷேகத்திற்காக, கடந்த மாதம் 25ஆம் தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அர்ச்சகர்களின் புகார்களுக்கு மத்தியில் கும்பாபிஷேக பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
பழனி முருகன் கோவிலில் வரும் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள www.palanimurugan.hrce.gov.in மற்றும் www.hrce.tn.gov.in ஆகிய இணையதளத்தில் 18ஆம்தேதி இன்று முதல் 20ஆம் தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் இதற்கு ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை அளித்து முன்பதிவு செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
21ஆம் தேதி குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் மின்னஞ்சல் வழியாகவும், செல்போன் குறுந்தகவல் மூலமும் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவல் கிடைக்கப்பெற்றவர்கள் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் பதிவேற்றம் செய்ய சான்றிதழ் நகலுடன் வந்து கட்டணமில்லா சீட்டை பெற்று கொள்ளலாம்.
மேற்கண்ட 2 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கட்டணமில்லா சீட்டு பெற முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு வருவோருக்கு சீட்டு வழங்க இயலாது. இந்த சீட்டை கொண்டு படிப்பாதை வழியே மட்டுமே மலைக்கோவிலுக்கு செல்லலாம். ரோப்கார், மின்இழுவை ரயில் போன்ற சேவைகளுக்கு இது பொருந்தாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23ஆம் தேதி முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. 26ஆம் தேதி காலை 9.50 மணி முதல் 11 மணி வரை பாதவிநாயகர் முதல் இரட்டை விநாயகர் வரை உள்ள பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி முருகன் கோவிலில் நடைபெறப்போகும் கும்பாபிஷேகத்தை பார்க்க பக்தர்கள் ஆவலாக உள்ள நிலையில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கடவுள் அருள் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications