For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தை அமாவாசை நாளில் அபிராமி பட்டருக்கு காட்சி அளித்த அன்னை அபிராமி தனது காதில் உள்ள கம்மலை கழற்சி வானத்தில் வீசி நிலவை உதிக்க வைத்து பவுர்ணமி தினமாக மாற்றினார். இந்த சம்பவம் திருக்கடையூரில் நிகழ்ந்துள்ளது. அமாவாசை நாளில் பவுர்ணமி வருமா? எப்படி வரும் என்று பலரும் கேட்கலாம். தன் மீது பக்தி கொண்ட பட்டருக்காக அன்னை அபிராமியே அமாவாசை தினத்தை பவுர்ணமி நாளாக மாற்றிய சம்பவம் நடந்தது ஒரு தை அமாவாசை நாளில்தான்.

 Thai Amavasai 2023: Tirukadaiyur Abirami Tiruvilaiyadal new moon day turns full moon day

"தனம் தரும் கல்வி தரும் ஒரு
நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள்
அபிராமி கடைக்கண்களே"
முதலில் கல்வி செல்வம் தருவாள், பொன், பொருள் தருவாள், எதையும் எதிர் கொள்ளும் மனம் தருவாள், தெய்வ வடிவும் தருவாள், வஞ்சகம் அற்ற நெஞ்சம் தருவாள், இன்னும் என்ன நல்லது உண்டு அனைத்தயும் நொடியில் நேரில் வந்து தினமும் தருவாள் என்கிறார் அபிராமி பட்டர்.

அபிராமிபட்டர் பாட்டர் பாடிய அபிராமி அந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே நாளில் பாடப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள பாடல்களில் முதல் பாடல் உதிக்கின்ற என்று ஆரம்பிக்கும். அதேபோல், 100ஆவது பாடலின் இறுதியில் உதிக்கின்றவே என்று முடிவடையும். அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலையும் பாடினால் நிச்சயம் பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்கடையூரில் வாழ்ந்து வந்த சுப்ரமணியன் என்ற அபிராமி பட்டரும் இந்த ரகத்தை சேர்ந்தவர் தான். இசையிலும், பாடல் இயற்றுவதிலும் புலமை பெற்றிருந்த சுப்ரமணியன், காவிரிக் கரையில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருக்கடையூர் அபிராமிவல்லி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், அம்பிகையை வழிபட்டு அனைத்தும் அன்னைதான் என்று வழிபட்டு வந்தார். எந்நேரமும், அபிராமிவல்லியின் மீது தீவிர பக்தி கொண்டு, நிலா போல் ஒளிவீசும் அம்பிகையின் முக அழகிலேயே எப்போதும் லயித்திருப்பார். சுப்ரமணியன் அபிராமிவல்லி மீது கொண்டிருந்த பக்தியையும் தெய்வீக நிலையையும் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை பித்தன் என்றும், போக்கிரி என்றும் கிறுக்கன் என்றும் வசை பாடி தூற்ற ஆரம்பித்தனர். ஆனால் சுப்ரமணியன் எதைப் பற்றியும் கண்டு கொள்ளவில்லை.

அம்பிகையை துதிப்பதும், அவளைப் பற்றிய துதிகளை இயற்றி பாடுவதுமாகவே இருந்தார். நாள்தோறும், கோவிலுக்கு வந்து அன்றைய திதியை கூறுவார். கூடவே அந்தந்த திதிகளுக்கு ஏற்றவாறு அம்பிகைக்கான வழிபாட்டு நியமங்களையும் ஏற்பாடு செய்வதுமாகவே இருந்து வந்தார். இவரின் புகழை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டாள் அம்பிகை ஸ்ரீஅபிராமிவல்லி தாயார். அதற்கான நாளும் வெகு சீக்கிரத்திலேயே வந்துவிட்டது.

அந்த சமயத்தில், தஞ்சை பகுதியை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் (கி.பி 1675-1728) இந்து மதத்தின் மீது தீவிர பற்றும் அதீத தெய்வ நம்பிக்கையும் கொண்டவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று, காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தன்னுடைய படை பரிவாரங்களுடன் பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் சென்று தன்னுடைய நேர்த்திக் கடனை நிறைவு செய்த பின்னர், அருகிலுள்ள திருக்கடையூரில் அருள்பாலித்து வரும் அபிராமிவல்லி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டார்.

சரபோஜி மன்னர் திருக்கடையூர் கோவிலுக்குள் நுழைந்து போது, அங்கிருந்து மக்கள் அனைவரும், மன்னரை போற்றி வணங்கி வழிவிட்டு நின்றனர். ஆனால், சுப்ரமணியர் அபிராமிவல்லியின் கருவறைக்கு முன்பு உட்கார்ந்து கொண்டு, யோக நிலையில் ஒளிமயமான அபிராமிவல்லியின் திருவருளை உணர்ந்து, அந்த ஆனந்தத்திலேயே திளைத்திருந்தார். மன்னர் வருவதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை அபிராமி பட்டர்.

இதைப்பார்த்து ஆச்சரியப்பட்டார் மன்னர். சுப்ரமணியரை பார்த்து ஆச்சரியப்பட்டு, அருகில் இருந்தவர்களிடம், இவர் யார் என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், சுப்ரமணியரை, இவர் ஒரு பித்தர் தம் குல ஆச்சார அனுஷ்டானங்களை எல்லாம் விட்டுவிட்டு, ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுபவர் என்று போட்டுக் கொடுத்தனர்.
சரபோஜி மன்னருக்கோ சுப்ரமணியரின் தோற்றமும், அவர் முகத்தில் தோன்றிய வசீகரம் பிடித்து விட்டது. அவரிடம் பேச்சு கொடுத்து, அவரின் உள்ளுணர்வை தெரிந்து கொள்ள விரும்பினார். அவரிடம், பட்டரே, இன்றைக்கு என்ன திதி தெரியுமா? என்று கேட்டார். சுப்ரமணியனோ, அபிராமிவல்லியின் அருள்மணம் கமலும் தெய்வீக தோற்றத்தை மனதில் நிறுத்தி, ஆனந்தமாக கண்டு பரவச நிலையில் இருந்ததால், வாய் குழறி, இன்றைக்கு பூரண பவுர்ணமி திதி என்று சொன்னார்.

சுப்ரமணிய பட்டர் சொன்ன பதிலைக் கேட்ட சரபோஜி மன்னர், ஆச்சரியப்பட்டார். அப்படியானல், இன்று இரவு வானில் முழு நிலவு உதிக்குமோ? என்று கேட்டார். காரணம், அன்று தை அமாவாசை திதியாகும். அதை நினைத்தே மன்னர் அப்படி கேட்டார். ஆனால், சுப்ரமணிய பட்டரோ, எதைப் பற்றியும் யோசிக்காமல் நிச்சயம் வரும் என்று கண் மூடிய நிலையிலேயே கூறினார். மன்னருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அப்படியானால், இன்று இரவு வானில் பூரண நிலவு உதிக்காவிட்டால், நிச்சயம் உனக்கு மரண தண்டனை, இது அரச கட்டளை என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

அரசரும் அவருடைய பரிவாரங்களும் சென்ற பின்னரே, சுப்ரமணிய பட்டருக்கு சுயநினைவு வந்தது. உடனே அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கேட்டு, கவலைப்பட்டார். ஏற்கனவே, மற்றவர்கள் தன்னை பித்தன், கோமாளி, கிறுக்கன் என்று சொல்லி எள்ளி நகையாடுகின்றனர். இப்போது, தான் அமாவாசை திதியை மாற்றி பவுர்ணமி திதி என்று சொன்னதால், அவர்கள் சொன்னது உண்மையாகிவிடுமே என்று கவலைப்பட்டார். இந்த தவறிலிருந்து தன்னை அந்த அபிராமிவல்லி தாயார் தான் காத்தருளவேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டார்.

அபிராமிவல்லித் தாயார் சன்னதி முன்பாக ஒரு ஆழமான குழியை வெட்டினார் சுப்ரமணிய பட்டர். அதில் விறகுகளை அடுக்கி தீ மூட்டினார். அந்த குழிக்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளால் ஆன உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அந்த அபிராமிவல்லி தாயார் எனக்கு காட்சி கொடுத்து, 'என்மேல் வழிந்த பழியை நீக்காவிட்டால், என் உயிரை மாய்ப்பேன்' என்று சபதம் செய்தார். பிறகு, அபிராமிவல்லியை நினைத்து,

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை

என்று ஒவ்வொரு அந்தாதியாக பாட ஆரம்பித்து, ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார். மாலை நேரம் வந்த உடன், தை அமாவாசை திதியான அன்று உலகமே இருண்டு இருளில் மூழ்கத்தொடங்கியது. ஆனால் அபிராமி அன்னையின் ஆசியால் நிச்சயம் நிலவு தோன்றும் என்று நம்பிக்யோடு தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார்.

சுப்ரமணிய பட்டர் 79ஆவது பாடலை பாடி முடித்த உடனேயே, அன்னை அபிராமிவல்லி அவருக்கு காட்சி கொடுத்தாள். தன் காதில் அணிந்திருந்த கம்மலை கழற்றி வான் வெளியில் வீசி எறிந்தாள். அந்த கம்மல் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடியது போல் ஒளியை பொழிந்தது. அன்னை அபிராமி, சுப்ரமணிய பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் உண்மையே என நிரூபித்தேன், நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அபிராமிவல்லியின் அருள் பெற்ற பட்டர் பரவசப்பட்டு, தன்னுடைய அநுபூதி நிலையை வெளிப்படுத்தும் அபிராமி அந்தாதி பாடல்களை பாடி நிறைவு செய்தார்.

சரபோஜி மன்னரும், பட்டரின் உறுதியான பக்தியைக் கண்டு மகிழ்ந்தார். பட்டரை பித்தன் என்றும் கிறுக்கன் என்றும் அதுவரை கூறியவர்கள், அவரிடம் மன்னிப்பு கேட்டனர். அன்று முதல் சுப்ரமணியர், அபிராமிபட்டர் என்று அழைக்க ஆரம்பித்தனர். சரபோஜி மன்னரும், அபிராமிபட்டரின் பக்தியைக் கண்டு மெச்சியதோடு, ஏராளமான பரிசுகளையும் மானியத்தையும் அளித்தார். மானியம் அளித்ததற்கான பட்டயம் இன்றும் அபிராமிபட்டரின் வாரிசுகளிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிசயம் நிகழ்ந்த நாள் தை அமாவாசை தினம் என்பதால் இன்றைக்கும் திருக்கடையூர் அபிராமி அன்னை ஆலயத்தில் தை அமாவாசை தினத்தில் அபிராமி அந்தாதி பாடப்படுகிறது. தை அமாவாசை தினமான இன்றைய தினம் மாலையில் அபிராமி பட்டருக்காக வானத்தில் முழு நிலவு காட்டிய ஐதீக விழா நடைபெற உள்ளது.

 தை அமாவாசை.. சென்னை முதல் குமரி வரை புனித நீர் நிலைகளில் குவிந்த மக்கள்..முன்னோர்களுக்கு தர்ப்பணம் தை அமாவாசை.. சென்னை முதல் குமரி வரை புனித நீர் நிலைகளில் குவிந்த மக்கள்..முன்னோர்களுக்கு தர்ப்பணம்

English summary
A holy play of Annai Abiramai for her devotee Abirami Bhattar Shown Full Moon on New Moon day. Thai Amavasai this year on 21st January 2023. Thai Amavasai day Tiurvilayadal on Tirukadaiyur Abirami. Abirami Pattar began singing song, and God Abrami gave dharsan. New moon day turns to Full moon day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X