திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வேதனை.. இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் அன்ன பிரசாதம் தரம்குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் வேதஸ்தான நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இதுவரை இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை என்று தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் எந்நாளுமே திருப்பதி திருமலை மலையப்ப சாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பால், மோர் போன்றவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நேரத்தில் கூட்டத்திற்கு ஏற்ப அன்னதானத்தின் அளவும் அதிகரிக்கப்படும். உற்சவ நாட்களில் பக்தர்கள் இருக்கும் இடத்திலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத நன்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தினமும் திருமலையில் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் இலவசமாக உணவு உண்டு வருகின்றனர்.
மேலும் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள், பஸ் நிலையம், மாதவம், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதிகள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் என பல்வேறு இடங்களில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நன்கொடை வழங்குவோர் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.33 லட்சம் வழங்கி வந்தனர். இந்நிலையில், விலைவாசி உயர்வால் அன்னதான நன்கொடை ரூ.38 லட்சமாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் சிற்றுண்டிக்காக ரூ.8 லட்சம் மற்றும் மதிய மற்றும் இரவு உணவுக்காக தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.38 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அன்னப் பிரசாத திட்டத்துக்கு தினமும் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 முதல் 7.5 டன் காய்கறிகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறைவாக உள்ளதாக கூறி பக்தர்கள் பாதியிலேயே எழுந்து சென்றனர். தரமும் இல்லை, சுவையும் இல்லை என பக்தர்கள் சாப்பாட்டுடன் இலையை மூடி விட்டு சென்றனர்.
திருமலையில் நித்யான்ன பிரசாதத்தின் தரம் குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமங்கா அன்னதான பிரசாத் கேந்திராவில் அரிசி பிரசாதம் தரம் சரியில்லை என்று திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரிசி வேகவில்லை என்றும் அப்படியே இருப்பதாகவும் தெரிவித்தனர். கோடி கணக்கில் காணிக்கை செலுத்தியும் நல்ல சாப்பாடு போட முடியாதா என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து பக்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய தேவஸ்தான ஊழியர்கள், பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்று கூறி தவறுக்கு மன்னிப்பு கோரினர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர ரெட்டி இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, அன்னபிரசாதம் சரியில்லை என பக்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அரிசியின் தரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அன்னபிரசாதம் தொடங்கப்பட்டதில் இருந்து இது வரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. திருமலை அன்னதானம் குறித்து இதுவரை இப்படி எந்த புகாரும் வந்ததில்லை. அதே நேரத்தில் மேலும் 700 பக்தர்கள் அன்னபிரசாதத்தை பெற்றுக்கொண்டனர். அந்த பக்தர்கள் சொல்லாத குறையை மற்ற பக்தர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அது சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications