2024 புத்தாண்டில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்.. ஆன்லைனில் டிக்கெட் ரிலீஸ் எப்போது? - முழு விபரம்
திருப்பதி: 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகள், அங்கபிரதட்சணம், 300 தரிசன கட்டணம், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருகின்றனர். அலமேலுமங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து வேண்டுதல் வைத்து விட்டு கீழ் திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாளை தரிசனம் செய்து விட்டு மேலே திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு பலரும் ஊர் திரும்புகின்றனர்.

இலவச தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அதே போல கட்டணம் செலுத்தியும் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். விவிஐபிக்கள் முதல் சாமான்ய பக்தர்கள் வரை அவர்களின் சக்திக்கு ஏற்ப ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் கட்டண தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையான வழிபட தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இம் மாதம் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை,அஷ்டதல பாத பத்மாராதனை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கள் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி 20 ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தானத்தின் வெப்சைட் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குழுக்களில் பக்தர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது. தொடர்ந்து குலுக்கல் மூலம் டிக்கெட் கிடைக்கப்பெற்ற பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தங்கள் டிக்கெட்டுகளை பெற்று கொள்ள வேண்டும்.
அதேபோல் ஜனவரி மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை இம்மாதம் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் பக்தர்கள் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்யலாம்.
ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளை ஆன்லைனில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 21ஆம் தேதி 3 மணிக்கு துவங்கி டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
ஜனவரி மாதம் ஏழுமலையானை அங்க பிரதட்சணம் செய்து வழிபட விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு உரிய டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதே போல் தேவஸ்தானத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து தலா 500 ரூபாய் கட்டணத்தில் ஸ்ரீ வாணி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 23ஆம் தேதி காலை 11:00 மணி முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி மாதம் ஏழுமலையான வழிபட விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இம்மாதம் 23ஆம் தேதி மாலை 3 மணி முதல் டோக்கன்களை ஆன்லைன் மூலம் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி திருமலை ஆகிய ஊர்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் அறைகளில் ஜனவரி மாதம் தங்க விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் அவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
டிசம்பர் மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் தன்னார்வலர்களாக சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கும், டிசம்பர் மாதம் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் சேவையாற்ற விரும்பும் பக்தர்கள் மதியம் 12 மணிக்கும், உண்டியல் பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் டிசம்பர் மாதம் டிசம்பர் மாதம் சேவையாற்ற விரும்பும் பக்தர்கள் அன்று மாலை 3 மணிக்கு தங்கள் பெயர்களை தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications