தங்க ஆபரணத்தில் அரசனாக ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்க இன்றே கடைசி நாள்..குவியும் பக்தர்கள்
திருவனந்தபுரம்: தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்க இன்றே கடைசி நாள் என்பதால் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளனர். சபரிமலையில் மகரவிளக்கு சீசனையொட்டி நெய் அபிஷேக வழிபாடு இன்றுடன் நிறைவடைகிறது. மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்ட கோவில் நடை நாளை மறுநாள் அடைக்கப்படுகிறது.
சபரிமலையில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை முடிவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மாலையில் மகர விளக்கு பூஜை நடைபெற்றது. அதே நேரத்தில் பொன்னம்பல மேட்டில் ஒளிர்ந்த மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18ஆம் படிக்கு ஐயப்பசாமி பவனி நடைபெற்றது. நடப்பு சீசனின் கடைசி நெய்அபிஷேகம் இன்றுடன் நிறைவடைகிறது. தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்க இன்றே கடைசி நாள் என்பதால் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று முதல் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். இன்றுடன் ஐயப்பனுக்கு நெய் அபிஷேக பூஜையும் நிறைவடைகிறது.

சீசனையொட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கிய படி பூஜை நாளை வரை நடைபெறும். ஐயப்பனை தரிசனம் செய்ய நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை இரவு 10 மணிக்கு மாளிகப்புரத்தம்மன் குருதி நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அன்றையதினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
சபரிமலையில் நடப்பு சீசனில் நேற்று வரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நடப்பு சீசன் முடிய இன்னும் 2 தினங்கள் உள்ளன. இந்த நாட்களில் 2 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நடப்பு சீசனில் தரிசனம் செய்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications