வைகாசி விசாகம்..குழந்தை வரம் தரும் தமிழ் கடவுள் முருகன்..பகை விலக..ஆபத்துகள் அகல குமரனை வணங்குங்கள்
சென்னை: வைகாசி விசாக நாளில் முருகனை நினைத்து விரதம் இருந்து வணங்கினால் காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முருகனின் அவதாரம் பற்றியும் வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம். ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் ஆகும். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானின், ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேயம்,,சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுண்டு. அதோ முகம் என்கிற ஆறாவது முகமும் வெளிப்பட, இந்த ஆறு முகங்களின் நெற்றிக் கண்களில் இருந்து வெளிப்பட்ட அக்னிப் பிழம்பில் அவதரித்தவர் முருகப்பெருமான். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். நல்ல வைகாசி வெயியில் பிறந்த காரணம், இது முருகனின் உஷ்ணாவதாரம் எனக் கூறப்படுகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெப்பம் அனலாக தகிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
மனதாலும், எண்ணங்களினாலும் விவரிக்க முடியாத, ஏன் வேதங்களினாலும் கூட விவரிக்க இயலாத எங்கும் நிறைந்துள்ள சிவம் ஆறு குழந்தைகளாக எழுந்து ஆறு தாமரை இலைகளில் சரவணப் பொய்கையில் மலர்ந்தது என்று கூறினார். முருகனை 'ஷண்முகன்', 'கார்த்திகேயன்', 'குஹன்', 'சரவணப்பன்' மற்றும் 'ஆறுமுகன்' என்ற பெயர்களில் அழைக்கின்றனர். அவர் இயற்கையிலேயே அழகானவர் என்றும், சுப்ரமணியனாக இருப்பவர் என்றும் கூறுவார்கள்.
அவர் சுப்ரமணியனாக அதாவது 'சுப்ரமண்யா'அதாவது எதில் இருந்து அனைத்தும் வெளிவந்து முடிவில் அடங்குமோ அந்த பிரபஞ்சத்தில் வியாபித்து இருப்பவர், எங்கும் நிறைந்து இருப்பவர், மயில் மீது அமர்ந்து இருக்கும் சேனாதிபதி, கையில் ஒரு வேலினை வைத்திருந்தபடி தேவயானை மற்றும் வள்ளியுடன் தோன்றுபவர், அதர்மத்தை நிலை நிறுத்த ஷண்முகனாக வந்தார் என்று கூற வேண்டும். அவர் கார்த்திகை பெண்களினால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயனாகவும், ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகனாகவும், சரவணை பொய்கையில் இருந்து வந்ததினால் சரவணபவனாகவும், ஆறுமுகங்களைக் கொண்டவராக இருந்ததினால் ஆறுமுகனாகவும் ஆனார்.
முருகனை சிவப்பானவர் என்ற அர்த்தத்தில் சீயோன் என கூறினாலும் தத்துவ நீதியில் அவர் நீல நிறமானவர் என்றே கூறப்பட்டு உள்ளது. சில நேரங்களில் அவர் இரண்டு மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வயானை மயிலின் பக்கத்தில் நின்றிருக்க, மயில் தன் அலகில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டு இருப்பது போன்ற காட்சி சிலவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் உள்ள அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. ஆகாயம், மற்றும் பூமியைப் போல எல்லையற்ற நிலையைக் குறிப்பதே நீலநிறம்.
அனைவரின் இருதயக் குகைகளிலும் வசிப்பவன் குகன் என்ற உண்மையை பிரதிபலிக்கும் தன்மையை குறிக்கும் நிலையை காட்ட அவரவர்களின் உள்ளத்தில் உள்ள ஐம்புலன்களுடன் கூடிய ஆறுமுகமாக காட்சி தருகிறார். மயில் அழகையும் செருக்கையும் குறிக்கின்றது. பாம்பு தான் எனும் அகம்பாவத்தை குறிக்கும். ஓவ் ஒரு மனிதனும் உலகத்தில் உள்ள சிற்றின்ப ஆசைகளைத் தேடி ஓடுகின்றனர். 'தான்' என்ற அகம்பாவத்தின் காரணம் 'அறியாமை' என்கின்ற அவைத்தியா. அதை அடக்கி வெற்றி கொண்டு உண்மையைத் தேடிப் போக வேண்டும். அந்த தத்துவத்தைத்தான் பாம்பை தன் அலகில் கௌவிக் கொண்டு உள்ள மயில் உருவம் எடுத்துக் காட்டுகின்றது.
தீய எண்ணங்களையும், இயலாமையையும் அழித்து விடுவது வேல் என்பதினால் அது விவேகத்தைக் குறிக்கும். விடா முயற்சி, இச்சா சக்தி மற்றும் தூய்மையான அன்பை எடுத்துக் காட்டும் விதமாக வள்ளி காட்சி தர , இறவாமை, கிரியா சக்தி மற்றும் செயல் திறமையையும் வெளிப்படுத்துபவளாக தெய்வானை இருக்கின்றாள். ஆக அந்த மூன்று சக்திகளும் ஒண்றிணைந்து அகம்பாவத்தை அழிக்கின்றன
இன்றைய தினம் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி ,பமுதிர்சோலை,சுவாமி மலை, திருத்தணி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் விசாக விழா சிறப்பாக நடைபெற உள்ளது.சென்னை வடபழனியில் உள்ள முருகன் ஆலயம், கந்த கோட்டம் முருகன் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பவர்கள் இன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான 'ஓம் சரவணபவ', 'ஓம் முருகா' என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
இன்றைய தினம் காலையிலோ மாலையிலோ முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.












Click it and Unblock the Notifications