
வியாழக்கிழமை இந்த பரிகாரம் செய்யுங்கள்..வராத பணம் கூட வீடு தேடி வரும்
மதுரை: மஹா விஷ்ணுவை வழிபட உகந்த நாள் வியாழக்கிழமை. பெருமாளை வழிபடுவதன் மூலம் மகாலட்சுமியின் அருளையும் பெறமுடியும். இதன் மூலம் பணநெருக்கடி விலகி அபரிதமான பணவரவு உண்டாகும் என்பது நம்பிக்கை. குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் வியாழக்கிழமை விரதம். இந்த நாளில் விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. வியாழக்கிழமை விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
சிலர் என்ன செய்தாலும் கஷ்டமாகவே இருக்கும். பண வருமானம் குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்படும். பண பிரச்சினை நீங்க வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். வியாழக்கிழமை செய்யும் பரிகாரத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
வைகாசி விஷ்ணுபதி புண்ணிய காலம் - விஷ்ணுவை வணங்க தீராத பிரச்சினை தீரும்

வியாழக்கிழமை விரதம்
குரு பகவான் பொன்னவன். குருபகவானின் அருளும் குரு பகவானின் பார்வையும் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை அமையும், குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிப்பர்கள், கடன் பிரச்சினையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்கள் குரு பகவான் அருளை வேண்டி விரதம் இருக்கலாம்.

வியாழக்கிழமை பரிகாரம்
சர்க்கரை குரு பகவானுக்கு ஏற்றது. எனவே இனிப்பினால் செய்த நைவேத்தியம் குருபகவானுக்கு படைத்து வணங்கலாம். லட்டு, பூந்தி, ஜிலேபி என எதுவாக இருந்தாலும் குரு பகவானுக்கு படைத்து வணங்கி அதை பிரசாதமாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க பொருளாதார நெருக்கடி நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சகட யோகம் நீங்கும் பரிகாரம்
குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு பொன்னும் பொருளும் சேரும். அது மறைவு ஸ்தானத்திலோ, சகட யோகம் தரும் நிலையில் இருந்தாலே வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகத்தில் குரு பகவான் சந்திரனுக்கு ஆறு, எட்டு, 12ஆம் வீடுகளில் இருந்தால் அது சகடயோகமாகும். இந்த நிலையில் இருப்பவர்கள் அருகில் உள்ள ஜீவ சமாதிக்கு சென்று லட்டு படைத்து வணங்கி அதை பக்தர்களுக்கு தானமாக வழங்கலாம்.

மஞ்சள் கிழங்கு தானம்
உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ வியாழக்கிழமை நாளில் கோவிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும் அம்மனுக்கும் மஞ்சள் கிழங்கை தானமாக வாங்கி கொடுக்கலாம். மஞ்சள் நிற வஸ்திரத்தை வியாழக்கிழமை அம்மனுக்கு படைத்து வணங்க செல்வ வளம் பெருகும்.

குரு ஹோரையில் நெய்தீபம்
உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினை நீங்கி பொருளாதார வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு குரு பகவானுக்கு குரு ஹோரையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உங்களின் வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். நிறைய வருமானத்தில் புது வேலையும் கிடைக்கும்.

செல்வ வளம் பெருகும்
குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்டம் ஏற்பட்டு சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகும்.