சபரிமலைக்கு இருமுடி கட்டிச் சென்ற முதல் நபர் யார் தெரியுமா? மகரஜோதிக்கு கருடன் வருவது ஏன்?
பத்தினம்திட்டா: சபரிமலைக்கு முதல் முதலில் இருமுடி சுமந்துக் கொண்டு யாத்திரை சென்ற நபர் யார் தெரியுமா? ஐயப்பனின் கதைகளை கேட்க கேட்க மனம் பூரிக்குது! பக்தி பெருக்கெடுக்கிறது!
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள வனத்தில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு ஆண்டுதோறும் 5 முறை மட்டுமே நடைத் திறந்திருக்கும்.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த சன்னதியை அடைய இரு வழிகள் உள்ளன. பெரு வழி பாதை, சிறு வழி ஆகியவை ஆகும். இது 75 கி.மீ. தூரம் கொண்டதாகும்.
பம்பையில் இருந்து 7 கி.மீ. தூரம் கொண்டது சிறு வழி பாதை. இந்த பாதையை 4 அல்லது 5 மணி நேரத்தில் அடைந்துவிடலாம். தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் 4 வழிகளில் சென்றாலும், பெரும்பாலும் செங்கோட்டை-புனலூர் வழியாக பட்டனம்திட்டா சென்று அங்கிருந்து பம்பை செல்வதையே விரும்புகின்றனர்.
பெருவழிப் பாதை என்று சொல்லப்படும் எரிமேலியில் தொடங்கி, பேரூர்தோடு, காளைகட்டி, அழுதா மலை, அழுதா நதி, கல் இடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, மூக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கலிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என பாதங்களை பதம் பார்க்கும் சிறு கற்கள், உயர்ந்த மரங்களின் வேர்தடங்கள் அடங்கிய கரடு முரடான காட்டு வழிப்பாதையில் நடந்த சென்று பம்பையை அடைய வேண்டும்.
அங்கிருந்து சிறு வழிப்பாதையில் நடந்து சென்று சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை அடைய வேண்டும். அந்த பாதையின் மொத்த தூரம் சுமார் 75 கி.மீ ஆகும். மேற்கண்ட பெருவழிப்பாதை என்பது பெரும்பாலும் கரடு முரடான மலைப்பிரதேச காட்டு வழிப்பாதை என்பதால் குறைந்தபட்சம் 2 நாட்களாவது ஆகும்.
அந்த காட்டு வழிப்பாதையில் விலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். எனினும் ஆரம்ப காலந்தொட்டே, ஐயப்ப பக்தர்கள் அனைவருமே அந்த பாதையைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இதனாலேயே கடுமையான விரதமிருந்து அவர்கள் ஐயனை தரிசித்து வந்தார்கள்.
அந்த காலத்தில் சபரிமலைக்கு சென்று திரும்பி வருவது கடினமாகவே பார்க்கப்பட்டது. தற்போது பம்பை வரை வாகனத்தில் வந்து அங்கிருந்து ஐயனை காண்கிறார்கள். மேலும் பெரு வழிபாதையில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
ஐயப்பனை காண முதலில் கன்னிமூல கணபதியை வேண்டிகிட்டு மாலை அணிந்துக் கொண்டு 48 நாட்கள் விரதமிருந்து இரு முடியை ஏந்தி ஐயனை காண செல்ல வேண்டும். அந்த இருமுடியை முன்முடி பின் முடி என வகைப்படுத்துகிறார்கள். அதில் முன்முடியில் நெய் நிரப்பப்பட்ட தேங்காயும், பின்முடியில் அபிஷேகத்திற்கு பன்னீர், ஊதுவத்தி, கற்பூரம், அவல், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்டவை கொண்டு செல்கிறார்கள்.
ஆனால் அந்த காலத்தில் இந்த அபிஷேக பாக்கெட்டுகளுக்கு பதிலாக மளிகை சாமான்களை கொண்டு சென்று வழியில் சமைத்து சாப்பிடுவார்களாம். ஆனால் தற்போது ஆங்காங்கே ஹோட்டல்கள் வந்துவிட்டன. மேலும் தன்னார்வலர்களும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார்கள். இதனால் தற்போது அபிஷேக பொருட்களை பக்தர்கள் பின்முடியில் கொண்டு செல்கிறார்கள்.
எல்லா பழக்கங்களுக்கும் ஒரு முன்னோடி என இருக்கும். அந்த வகையில் சபரிமலைக்கு முதல் முதலில் இருமுடி கட்டி யாத்திரையாக சென்றவர் யார் தெரியுமா? இதுகுறித்து AV Tamil Story எனும் சேனலில் கூறயிருப்பதாவது:பந்தள மன்னனுக்கு மகனாக வளர்ந்த மணிகண்டன் என்ற திருநாம் கொண்ட சுவாமி ஐயப்பன் தனது தந்தையை பிரிந்து சபரிமலையில் தவம் செய்ய புறப்பட்டார்.
அப்போது அவருடைய தந்தை பந்தள மன்னன், வனப்பகுதிக்கு செல்லும் மகனுக்கு பசிக்குமே என்பதற்காக உடனே சாப்பிடக் கூடிய உணவுகளை ஒரு பகுதியாகவும் நீண்ட நாட்களானாலும் கெட்டு போகாத நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்கள் ஒரு பகுதியாகவும் வைத்து இரு முடிகளாக கட்டிக் கொடுத்தனுப்பினார்.
இருமுடியை சுமந்துக் கொண்டு முதல் முறையாக யாத்திரையை தொடர்ந்தவர் சுவாமி ஐயப்பனே. "எனக்கு வயதாகிவிட்டது. நான் உன்னை காண வேண்டுமானால் இந்த காட்டு பகுதிக்கு எப்படி வருவது" என மகனிடம் பந்தள மன்னன் கேட்டார்.
அதற்கு சுவாமி ஐயப்பனோ, பந்தள அரண்மனையிலிருந்து சபரிமலை வரை கருடன் வழிகாட்டுவார் என பதில் கொடுத்தார். பந்தள மன்னன் ஐயப்பனை காண வரும் போதெல்லாம் ஐயப்பனின் ஆபரணங்களை எடுத்து வந்து அவருக்கு அணிவித்து அழகு பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவர் சபரிமலைக்கு புறப்படும் போதெல்லாம் கருடனும் வழிகாட்டினார். அன்று தொடங்கி இன்று வரை ஆண்டு தொடங்கியதும் மகர ஜோதி நாளன்று பந்தளத்தில் இருந்து ஐயப்பனின் திருவாபாரண பெட்டி புறப்படும் போது கருடன் வந்து வழிகாட்டுவார். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications