நாகாலாந்து மாநில அரசு நிர்வாகத்தில் தலையீடு... எச்சரிக்கை... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி வரும் சனிக்கிழமையன்று பொறுப்பேற்கிறார். இதுவரை இல்லாத வகையில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியின் நியனம் பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் இருந்து விடைபெற்றார்.

புதிய ஆளுநராக ஐ.பி.எஸ். அதிகாரியும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவரும் நாகாலாந்து அமைதிப் பேச்சுக்குழு தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். ஆர்.என்.ரவிக்கான அறிமுக அடையாளங்கள்தான் தமிழகத்தின் சர்ச்சையையும் உருவாக்கிவிட்டன.

Tamilnadu Governor RN Ravi what did in Nagaland?

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என்.ரவியின் நியமனத்தின் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பின. தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்க, இடையூறு செய்யத்தான் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது இந்த கட்சித் தலைவர்களின் கருத்து. இதனை பா.ஜ.க. திட்டவட்டமாக மறுத்தது. ஆளும் திமுக அரசு மரபுப்படி ஆளுநர் நியமனத்தை வரவேற்றது.

இது ஒருபுறம் இருக்க ஆர்.என்.ரவியின் நாகாலாந்து ஆளுநர் பணிகள் குறித்து பல்வேறு கருத்துகள், விவாதங்கள் நடைபெற்றும் வருகின்றன. முதலில் ஆர்.என்.ரவியின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.. பீகாரின் பாட்னாவில் பிறந்த ரவி, கேரளா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி. அதற்கு முன்னர் சிறிது காலம் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். ஐ.பி (IB) எனப்படும் மத்திய அரசின் உளவுத்துறையில் ரவி இணைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கான வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரதிநிதி என்ற முகமாக ஆர்.என்.ரவி உருவெடுத்தார். இதனால் 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியின் தூதராக நாகாலாந்து அமைதிப் பேச்சுகளை முன்னெடுத்தார். 2019-ல் நாகாலாந்து ஆளுநராகவே ரவி நியமிக்கவும்பட்டார். இதுதான் ஆர்.என்.ரவியின் பின்புலம்.

நாகாலாந்தின் களநிலவரம் என்ன? நாடு விடுதலை அடைந்த போது நாகாலாந்து என்பது ஒரு தனிநாடாக இருந்தது. மகாத்மா காந்தியுடன் நாகா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் உங்களது சுதந்திரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றே உறுதி அளித்தார். இன்றைய அஸ்ஸாம், மணிப்பூர், மியான்மர் என பல பகுதிகளில் நாகா இனக்குழுக்கள் வசித்து வருகின்றனர். இந்த நாகா இனமக்கள் தனித்துவமானவர்கள். மனித தலைகளை வேட்டையாடுவதை நிறுத்திக் கொண்ட கடைசி பழங்குடி இனமும் நாகா இனக்குழுக்களில் ஒரு பிரிவினர். இன்றளவும் இந்தியாவில் வீடும் மியான்மரில் வாசலும் என வாழ்க்கை வாழ்கின்றனர் நாகா இன மக்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பின்னர் நாகாலாந்து தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை ஐ.நா.வின் ஒப்புதலுடன் வாக்கெடுப்பு நடத்தி பெற்றது. அப்போது வடகிழக்கில் அஸ்ஸாம் மாநிலம் மட்டுமே இருந்தது. நாகாலாந்து நாட்டின் ராணுவமாக நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் National Socialist Council of Nagaland இருந்தது. ஆனால் இந்தியாவின் பிற பகுதிகளில் சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பட்ட பாணியில் நாகாலாந்தும் இந்தியாவின் கீழ் வந்தது.

இதனை அப்போது முதலே நாகா இனத்தலைவர்கள் எதிர்த்தனர். மேலும் நாகாலிம் என்கிற அன்ற நாகாலாந்து தனிநாடுதான் தங்களது இலக்கு எனவும் குரல் கொடுத்து வந்தனர். இந்த தனிநாடு கோரியது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற மாஜி ராணுவம்தான். இதற்கு சீனா ஆதரவு அளித்தது. இதுவே ஆயுத இயக்கமாகவும் உருமாறி நமது ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது. மேலும் நாகாலாந்தில் நிழல் அரசாங்கத்தையும் நடத்தி இந்த ஆயுத இயக்கம் பின்னாளில் பிளவுபட்டு பல இயக்கங்களாகின. இதில் மிக முக்கியமான இயக்கங்களாக National Socialist Council of Nagaland- ஐசக் மூய்வா, கப்லாங் பிரிவுகள்தான்.

1990களுக்குப் பின்னர் இந்த ஆயுதக் குழுக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று டெல்லியில் ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டது. நாகா இனமக்களைப் பொறுத்தவரை நாம் அங்கு சென்றால் ஓ இந்தியர்களா? என கேட்கிற தலைமுறை இருந்தது. அவர்களது நிலத்தை இந்தியா ஆக்கிரமித்திருக்கிறது என்கிற கருத்து இருந்தது. இப்போது நாகாலாந்தின் இளம் தலைமுறை இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் பணிபுரிவதால் சிந்தனை மாற்றமும் உருவாகி உள்ளது. மெல்ல மெல்ல தனிநாடு கோரிக்கை நீர்த்துப் போய், பிற மாநிலங்களில் உள்ள நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்த அகன்ற தனி நாகாலாந்து மாநிலம், தனி அரசியல் சட்டம், தனி கொடி என்கிற அளவுக்கு போனது. இந்த குழுக்களுடன்தான் ஆர்.என்.ரவி, பிரதமரின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்குள் இணைந்து வாழ்வது என்ற நிலைப்பாட்டுக்கு ஐசக்-மூய்வா பிரிவு வந்தது. அவர்களுடன் முதல் கட்ட ஒப்பந்தமும் போடப்பட்டது. இதேபோல் பல்வேறு நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. மத்திய அரசு தரப்பில் மொத்தம் 80க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆர்.என்.ரவி நடத்திய பேச்சுவார்த்தை முழுமை அடையாமல் போனதற்கு காரணம், நாகாலாந்து ஆயுத குழுக்கள், இந்தியாவின் மாநிலமாக இருக்க ரெடி... ஆனால் தனி கொடி, தனி அரசியல் சாசனம் தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதுதான்.. இந்நிலையில்தான் நாகாலாந்து ஆளுநராக 2019-ல் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

நாகாலாந்து மாநிலத்துக்கான பாதைகள் இலகுவாக செல்ல முடியாதவை. அந்த அளவுக்கு சாலை வசதிகள் மோசம். அஸ்ஸாம் எல்லையை ஒட்டிய திமாப்பூர், நாகாலாந்தின் பொருளாதார தலைநகரம். அங்கிருந்து தலைநகர் கோஹிமா செல்ல ஒரே ஒரு நெடுஞ்சாலைதான். மலைகளுக்கு இடையே உயிரை பணயம் வைத்து செல்ல வேண்டும். ஆர்.என்.ரவி ஆளுநரானவுடன் இந்த நெடுஞ்சாலையை 4 வழிசாலையாக்க படுதீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார். அதேபோல் நாகாலாந்தின் சில மாவட்டங்கள் மியான்மர் எல்லையை ஒட்டியதாக இருக்கின்றன. 250 கி.மீ.தொலைவில் உள்ள இந்த மாவட்டங்களைச் சென்றடைய 24 மணிநேரமாகும். இத்தகைய பகுதிகளுக்கான சாலை வசதிகளுக்கான முன்னெடுப்புகளையும் ஒரு ஆளுநராக இருந்து கொண்டு ஆர்.என்.ரவி மேற்கொண்டார். இவைகளாவது கட்டமைப்பு நடவடிக்கைகள். இவற்றால் பிரச்சனை எதுவும் எழவில்லை.

இதையடுத்து ஆர்.என்.ரவி கவனம் செலுத்தியது நாகாலாந்து மாநில அரசு நிர்வாகத்தில்.. முதலில் ஆயுதக் குழுக்களின் நிழல் அரசாங்கம், பொதுமக்களிடம் வரி வசூலிப்பது ஆகியற்றை மாநில அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இத்தனைக்கும் நாகாலாந்ந்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான National Democratic Progressive Party தலைமையில் ஆட்சி இருக்கிறது. அப்படி எல்லாம் செய்துவிட முடியாது என நாகாலாந்து மாநில அரசு நிராகரிக்க அப்போதுதான் ஆர்.என்.ரவி தனது அதிகார முகத்தைக் காட்டினார். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் அரசியல் சாசனத்தின் 371 (A) (1) (b)- பிரிவை செயல்படுத்தி மாநில அரசின் நிர்வாகத்தை நான் கையில் எடுத்துவிடுவேன் என்றார். ஒட்டுமொத்த நாகாலாந்தும் இந்த எச்சரிக்கையால் கிடுகிடுத்துப் போயின.

அடுத்ததாக நாகாலாந்து அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் நாகா ஆயுதக் குழுக்களின் ஆதரவாளர்களாகவே இருக்கும் பிரச்சனையை கையில் எடுத்தார். நாகாலாந்து அரசு ஊழியர்களைப் பொறுத்தவரையில் எப்படியும் நாகாலாந்துக்கு தனி கொடி, தனி அரசியல் சட்டம் வந்துவிடும் என்கிற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வந்தனர். இப்படியான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரவி வலியுறுத்தினார். அதேபோல் நாகாலாந்து அரசு நிர்வாகத்தில் கொடிகட்டிப் பறந்த ஊழல் முறைகேடுகளை களையவும் கவனம் செலுத்தினார். ஆளுநர் என்றால் கோப்பில் கையெழுத்து போட்டுவிட்டு ராஜ்பவனில் ஓய்வு எடுப்பவராக இருக்க வேண்டும் என்ற மரபை ரப்பர் ஸ்டாம்ப் மரபை மீறி மாநில அரசு நிர்வாகத்தில் பகிரங்கமாகவே ரவி தலையிட்டார். இதனால் ஆர்.என்.ரவி மீது கடுமையான விமர்சனங்களை நாகாலாந்து அரசியல் கட்சிகள் முன்வைத்தன. அதனால் அவர் மாற்றப்பட்ட போது பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் நாகாலாந்து மக்கள்.

மற்றொரு மிக முக்கியமான விஷயம். நாகாலாந்து ஆயுதக் குழுக்களிடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது அவர்களின் கோரிக்கையை ஏற்பது போல ஒரு ஒப்பந்தம் போடுவது; ஆனால் டெல்லியில் இந்திய அரசு சொன்னதை எல்லாம் ஆயுத குழுக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டது என ஒரு ஒப்பந்தம் போடுவது என்கிற பார்முலாவை ஆர்.என்.ரவி கடைபிடித்தார் என்கிற புகாரும் உண்டு. பொதுவாக தேசிய இனம், சுயநிர்ணய உரிமை போன்ற முழக்கங்களைப் பேசுவதில் நாகாலாந்துக்கும் தமிழகத்துக்கும் ஒற்றுமை உண்டு. தமிழகத்தில் ஆயுதக் குழுக்கள் இல்லை. ஆனால் இத்தகைய அரசியல் கருத்துகள் பொதுவெளியில் பகிரங்கமாக எப்போதும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாகாலாந்து ஆயுதக் குழுக்களை அதன் தேசிய இன உரிமைப் பாதையில் இருந்து நீர்த்து போகச் செய்தவர் ஆர்.என்.ரவி. தமிழகத்திலும் அப்படி நீர்த்து போகச் செய்வாரோ ஆர்.என்.ரவி என்கிற அச்சத்துடன் அவருக்கு எதிர்ப்பு குரல்கள் முன்வைக்கப்படுகின்ற்ன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+