நடிகர் ராஜேஷ் காலமானார்.. அலைகள் முதல் கார்த்திகை தீபம் வரை, இத்தனை சீரியலில் நடித்திருக்கிறார்! மறக்க முடியாத கேரக்டர்
சென்னை : பழம்பெரும் நடிகரான ராஜேஷ் இன்று (மே 29) காலை உடல் நிலை குறைபாட்டால் அவருடைய வீட்டில் காலமானார். அவருக்கு 75 வயது. சினிமாவில் நான்கு தலைமுறைகளை பார்த்த இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அதுபோல சினிமாவில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதில் அவருடைய மறக்க முடியாத கேரக்டர் பற்றி பார்க்கலாம்.

நடிகர் ராஜேஷ் வயது
ஒரு சிலரை பார்க்கும்போது இவர்கள் மட்டும் எப்போதும் இப்படியே இருக்கிறார்களே என்று நினைக்கத் தோன்றும். அதுபோல ஒருவர்தான் நடிகர் ராஜேஷ். ராஜேஷ் ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி பிறகு நடிகராக மாறி இருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த படிப்பாளி அதனாலேயே ஒன்பது புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். நடிகர் சிவாஜியின் மிகப்பெரிய ரசிகர்.
நடிகர் ராஜேஷ் காலமானார்
அதுபோல பல ஊடகங்களுக்கு ஆரோக்கியம், ஜோதிடம் தொடர்பான பல விஷயங்களையும் மருத்துவர்களிடம் பேசி விளக்கி இருக்கிறார். 75 வயதான ராஜேஷ் சீரியல் மற்றும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். அவர் சினிமாவில் அறிமுகமாகி 49 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 150 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தார்.
ராஜேஷ் நடித்த முதல் சீரியல்
ஆனால் அவர் சீரியலில் அறிமுகமானது "அழுக்கு வேட்டி" என்ற சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியல் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. கடந்த 2000ம் ஆண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து அதே ராஜ் டிவியில் "சவுக்கடி" என்ற சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான "அலைகள்" சீரியலில் கிருஷ்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
நடிகர் ராஜேஷ் நடித்த சீரியல்கள்
அதே சன் டிவியில் 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான "கணவருக்காக" என்ற சீரியலிலும் ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் கடந்த 2005 ஆம் ஆண்டு மலையாளத்திலும் "சுவாமி ஐயப்பன்" என்ற சீரியலில் நடித்து இருந்தார். அதுபோல 2012 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான "ஆண்பாவம்" சீரியலில் கோபாலசாமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
விஜய் டிவியில் அறிமுகம்
பிறகு கலைஞர் டிவியில் "தாயம்", வேந்தர் டிவியில் "முடிவில்லா ஆரம்பம்" போன்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ராஜேஷுக்கு விஜய் டிவியில் "களத்து வீடு" என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக சன் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான "ரோஜா" சீரியலில் டைகர் மாணிக்கம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு சின்னத்திரையில் ஒரு அடையாளத்தை கொடுத்தது.
ரோஜா சீரியல்
அதுபோல ஜீ தமிழில் "சூரிய வம்சம்" சீரியலில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலிலும் "டைகர் மாணிக்கம்" என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் கலந்து கொண்டார். பிறகு 2021 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சில்லுனு ஒரு காதல்" சீரியலிலும் சிவராமன் என்ற ஜமீன்தார் வேடத்தில் நடித்திருந்தார்.
கார்த்திகை தீபம் சீரியல்
அது போல டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான "கனா காணும் காலங்கள்" சீரியலிலும் சக்திவேல் என்று கேரக்டரில் நடித்து இருந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தர்மலிங்கம் என்ற கேரக்டரில் நடித்து வந்தார். நடிகர் ராஜேஷின் மறைவு சினிமா மற்றும் சீரியல் ரசிகர்களையும் வருத்தமடைய செய்திருக்கிறது. அவருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications