நடிகை சரண்யாவின் மறக்க முடியாத வடு.. பஸ் ஸ்டாண்டில் பெண்கள் நின்னாலே தப்பா பார்ப்பதா? எது சுதந்திரம்
சென்னை: பெண்களால் இரவு 9 மணிக்கு ரோட்டில் தனியாக நடந்து போக முடியவில்லை.. அந்த காலத்திலிருந்தே இப்படித்தான் இங்கு நிலைமை உள்ளது.. எந்த காலமாக இருந்தாலும்சரி, இது மட்டும் மாறாமலேயே உள்ளது" என்று காதல் பட நடிகை சரண்யா வருத்தத்தையும், கவலையையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
King Voice யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள காதல் பட சரண்யா, "பாலியல் சீண்டல்கள் ஜீரணிக்க முடியாத ஒன்று.. எல்லா பெண்களுமே அதை கடந்துதான் வர வேண்டியிருக்கிறது..

மாறாத வடு: பெண்கள் எவ்வளவுதான் பலசாலியாக இருந்தாலும், எவ்வளவுதான் தைரியசாலியாக இருந்தாலும், எவ்வளவுதான் முன்னோக்கி சென்றாலும், எங்கோ ஓரிடத்தில் ஒரு சின்ன இருட்டை பார்க்கும்போது, ஒருவித பதட்டம் இருக்கத்தான் செய்யுது. இதுபோன்ற கசப்பான நிகழ்வுகளை கடந்து வந்தாலும்கூட, வாழ்நாள் முழுவதும் அந்த வடு இருக்கதான் செய்யுது.
குறிப்பாக பெண் குழந்தைகளை நினைத்தாலே பதட்டமா இருக்கு.. ஆறறிவு மனுஷன், பாலியல் வன்கொடுமை செய்யும்போது, அந்த மனிதனின் மனநிலை எவ்வளவு குரோதமாக இருக்கிறது என்பதை நினைச்சாலே பயங்கரமாக இருக்கு.. இதுபோன்ற கொடூரங்களுக்கு இந்த சமூகமும் ஒரு முக்கிய காரணம்.. இந்த சமூகம் கட்டமைத்துள்ள நடைமுறைகளிலும் சில சறுக்கல்கள் இருக்கின்றன.. இந்த சறுக்கல்கள்தான், இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு எளிதாக வழி விடுகின்றன.
வக்கிரங்கள்: பெண்களுக்கு பாலியல் கொடூரம் நடப்பதை ஏற்க முடியவில்லை என்றாலும், பெரியவர்களைவிட சின்ன குழந்தைகள் மீது பாலியல் வக்கிரங்கள் திணிக்கப்படுவது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாகும்.. ஒன்னுமே அறியாத அந்த குழந்தையிடம், இப்படி நடந்து கொண்டால், அந்த குழந்தை இந்த சமூகத்தை நாளை எப்படி எதிர்கொள்ளும்?
சமீப காலமாகவே இந்த வன்கொடுமை அதிகமாகி கொண்டிருக்கிறது.. கட்டுக்குள் வரவில்லை.. இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுப்பது என்றே தெரியவில்லை.. அடுத்து என்ன சொல்லித்தருவது?
முற்போக்கு சிந்தனை: ஆண்கள், பெண்களுக்கு எவ்வளவுதான் சொல்லிதந்தாலும், அதை முற்போக்கான சிந்தனையில் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.. சொல்லித்தருவதையும் முற்போக்காக நினைப்பதில்லை, அதற்கான புரிதலும் அவர்களிடம் இருப்பதில்லை. எனவே, குழந்தைகளுக்கு, அந்த குழந்தை பருவத்திலிருந்தே, சொல்லித்தந்து வளர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பெண்களால் இரவு 9 மணிக்கு ரோட்டில் தனியாக நடந்து போக முடியவில்லை.. அந்த காலத்திலிருந்தே இப்படித்தான் இங்கு நிலைமை உள்ளது.. எந்த காலமாக இருந்தாலும்சரி, இது மட்டும் மாறாமலேயே உள்ளது..
பஸ் ஸ்டாண்டு: நைட் 11 மணிக்கு டூவீலரில் ஒரு பெண் சென்றாலோ அல்லது யதேச்சையாக பஸ் ஸ்டாண்டில் நின்றாலோ, பெண்களை பார்க்கும் பார்வையே தப்பா இருக்கு.. நேர்மையான பார்வையாக அது எப்போதுமே இருப்பதில்லை.. அது நேர்பார்வையாக என்றைக்கு முழுமையாகிறதோ, அன்றைக்குதான், முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்" என்றெல்லாம் அந்த பேட்டியில் சரண்யா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications