கமல்ஹாசனுக்கு கூட கிடைக்காத பெயர் மம்முட்டிக்கு வைத்த கே.பாலசந்தர்! அப்படி என்னதான் இருக்கு அழகனில்?
சென்னை: அழகன் படம் நினைவிருக்கா? அன்று ஆரம்பித்த சங்கீத ஸ்வரங்கள், இன்று வரை பலரது வீடுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த படத்திற்கு அழகன் என கே பாலசந்தர் ஏன் பெயர் வைத்தார் தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: மதுபாலா 'அழகப்பன்' என எழுதியிருக்கும் நேம் போர்டில் 'ப்ப'க்கு வெள்ளை அடித்து விடுவார். இப்போது 'அழகன்'....

இதை பப்லு கையும் களவுமாக பிடித்து விட இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்ற மம்முட்டி உள்ளேயிருந்து நடந்து வருவார். நடை ஒரு மாதிரி இருந்தாலும் மம்முட்டி இந்தக் காட்சியில் அழகன் தான்.
அதனால் தான் பாலச்சந்தர் மம்முட்டியை வைத்து படமெடுக்கும் போது 'அழகன்' என டைட்டில் வைத்தார் போல. பாலச்சந்தர் கண்ணுக்கு நடிகைகளுக்கப்புறம் அழகு தெரிந்தது மம்முட்டியிடம் தான் போல. கமலுக்கு கூட(?) கிடைக்காத பெயர்.
மனைவி இல்லாத அழகப்பனின் (காரைக்குடி நாட்டுக்கோட்டை வகையறாவோ...தெளிவில்லை) வாழ்வில் மூன்று பெண்கள் வருகின்றனர். அவரே காதலிக்கும் ப்ரியா ரஞ்சன். அவரை காதலிக்கும் கண்மணி, கனவுலகில் வாழும் ஸ்வப்னா...
படத்தின் முதல் காட்சியிலேயே மனைவியின் கார் விபத்தை சந்திக்கிறது. மனைவியை ஒரு போட்டோ கூட எடுக்காத மம்முட்டி எப்போதோ எடுத்த மனைவியின் புறமுதுகை போட்டோ எடுத்து மாட்டி வைக்கிறார். பார்த்திபன் கூட ஒரு படத்தில் அம்மா போட்டோவுக்கு பதில் அம்மா என எழுதி வைத்து கும்பிடுவார். இதுவும் From பார்த்திபன் டச் காப்பி மாதிரி.
படம் தொடங்கியதுமே குலாம் காதருக்கும் (மம்முட்டி), கோகுலாஷ்டமிக்கும் (பாலச்சந்தர்) என்னய்யா சம்மந்தம்? எனப் பார்க்கத் தொடங்கிய நம்மை கே.பி சார் ஏமாற்றாமல் அழகப்பன் ஹோட்டலின் விருந்தை படைத்து விடுவார்.
மதுபாலா குறும்புகள்... ஒரு கேமிராவை வைத்துக் கொண்டு அவர் ஆடிட்டோரியம் டிக்கெட் கிழிப்பவரை அப்பாவாகவும், கல்லூரி பேராசிரியையை அம்மாவாகவும் இணைக்கும் குறும்புகள்..... அது என்னய்யா தமிழ் சினிமாவில் கல்லூரி பேராசிரியைனா இப்படித்தான் உருவமா?
ட்விஸ்ட் க்ளைமாக்ஸ் என்பது குழந்தைகள் அவர் வளர்ப்புப் பிள்ளைகள் என்பது. அதில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், விஜய் தம்பி விக்ராந்த், பேபி சுஜிதாவெல்லாம் பின்னாளில் தெரியப்படும் முகங்களானார்கள். பப்லு, யுவராணி, சுரேஷ் சக்ரவர்த்தி.... அப்படியே. பேபி சோனியா விடலைப் பருவத்தில் ஓவராகப் பேசும் பக்குவம்.
வசனம் அனந்து. மம்முட்டி பானுப்ரியாவை புகழ்ந்து பேசும் போது 'இஸடோரா டங்கன்னு ஒரு டான்சர் இருந்தாங்க'ன்னு சொல்வார். ஏதோ ஒரு குத்துமதிப்பா எழுதாம உண்மையிலேயே அமெரிக்க நடனத் தாரகை இஸடோராவைப் பற்றி எழுதுவதெல்லாம் தமிழ் சினிமா அற்புதம்... அபூர்வ அனந்து...
கௌதம் மேஜர் சுந்தர்ராஜன்.
ஆம்பளை சிலுக்கு அன்று. பிரபுதேவா வருவதற்கு முன்பு அவர் தான் மேஜர் ராஜா என்கிற பெயரிலெல்லாம் பல படங்களில் நடனமாடி இருக்கிறார்..
எனக்கென்னவோ மம்முட்டிக்கு ப்ரியா ரஞ்சனை விட கண்மணி கீதா தான் கதைப்படி பொருத்தமான ஜோடி. உணர்ச்சிப் பிரவாகமான தில்லானா மோகனாம்பாள் பத்மினி மாதிரி பானுப்ரியா.. ஆனால் வாழ்க்கையை தன் வயதைப் பற்றி நினைக்காமல் பெரிய மனதுடன் வாலிபனாக வாழும் அழகன் மம்முட்டி...
சின்ன விஷயத்துக்கே தாம்தரிகிட, தீம்தரிகிடன்னு டான்ஸ் ஆடிக் கொண்டே (கலா மாஸ்டர்) டயலாக் பேசும் பானுப்ரியா எங்கே?
படிக்க வரும் மாணவன் மம்முட்டியை கலாய்க்கும் பசங்களிடம் பக்குவமாய் மம்முட்டி பெருமையை எடுத்துரைக்கும் கீதா எங்கே?(சூர்ய வம்சம் ராதிகா போல் வாசிக்கவும்...😀).
மது பாலா குறும்புத்தனங்கள்... அப்படியே பாட்டி சௌகாரிடமிருந்து வந்தது தானாம். தில்லு முல்லு படத்தில் பாட்டியின் குறும்பு நடிப்பை பார்த்திருக்கிறோமே. சௌகார் குரல் ஏன் பேத்தி வைஷ்ணவி குரலானது..?
இளையராஜா- கே.பி ஈகோவினால் அவர் ரஹ்மான், மரகதமணி, நரசிம்மன் என மூன்று பேர் பாடல்களை ஒரே நேரத்தில் ஒலிப்பதிவு செய்தாராம்..அதனாலே நமக்கு மரகதமணியின் கோழி கூவும் நேரமாச்சு, மழையும் நீயே, சங்கீத ஸ்வரங்கள் போன்ற க்ளாசிக்குகள் கிடைத்தன... வாழ்க ராஜா-கே.பி ஈகோ...
மம்முட்டி, கீதா, பானு, மது கச்சிதம். பொருந்தும்கேரக்டர்கள். போட்டோவில் வரும் புறமுதுகு கீதாவா, ரம்யா கிருஷ்ணனா என வாக்குவாதம் ஓடிக்கொண்டிருக்கும் போது கே.பியின் கடினச்சாவு விசிறி 'அது சரிதாங்க...' எனச் சொன்னால் கே.பியின் தாக்கம் ரசிகனில் எந்தளவு எனப்புரியும்.
கே.பியின் நாஸ்டர்டாமஸ் தியரிகள்..
1.பானுவின் அப்பா மாப்பிள்ளைப் பையனின் போட்டோவை கொடுத்து 'கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சிட்டு அமெரிக்காவில் வேலையில் இருக்கிறான்'. பின்னாளில் மதுரை, தேனி வகையறாவெல்லாம் அமெரிக்க ப்ளைட் புடிச்சி அமெரிக்க மாப்பிள்ளையாக சென்னை ஏர்போர்ட்டில் இறங்குவதை தினம் இன்று பார்க்கிறோம்..
2.விடிய விடிய போன் பேசும் சங்கீத ஸ்வரங்கள்... செல்போன் என்ற ஒன்று வந்த பிறகு எல்லா வீட்டிலும் அழகப்பன்களும், ப்ரியா ரஞ்சன்களும் தூங்காமல் ஸ்வரமில்லாத சங்கீதம் இசைப்பது நடந்து கொண்டே தானே இருக்கிறது.
3.சுரேஷ் சக்ரவர்த்தி.. அதிராம்பட்டினம் சொக்குவாக வீட்டுக்குள் காலடி வைத்து எல்லோரையும் கவனிக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி. முப்பது வருஷம் கழிச்சு அதிராம்பட்டினம் சொக்கு பிக்பாஸ் வீட்டினில் ஆஸ்திரேலியா (சுரேஷ்) சக்குவாக வந்ததெல்லாம் அன்றே கே.பி எழுதிய விதி.
அழகனாக மம்முட்டி 40 வருடமாக ஓடிக்கொண்டே இருப்பது மம்முட்டியின் தனித்திறமை.. அரசியல்வாதி கோவை செழியனுக்கு கலையின் மீதும் ஆர்வம் இருப்பதால் இதை தயாரித்திருப்பார் போல.
கமல், ரஜினி, சுஹாசினி - சரிதா, பெண்ணியம் இல்லாத கே.பியின் தூரிகை ஓவியமான அழகப்பனின் வாழ்க்கை தான் இந்த அழகன்.... இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications