பைசன் படத்தை இப்போதான் பார்த்தேன்! "இது ரொம்ப முக்கியம்”.. மணிரத்தினம் ரியாக்ஷன், மாரி செல்வராஜின் பதில்
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தீபாவளிக்கு வெளியான 'பைசன் - காளமாடன்' திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, தமிழ் சினிமாவின் கவனத்தை மீண்டும் மாரி செல்வராஜ் பக்கம் திருப்பியுள்ளது. படம் வெளியான நாளில் இருந்து திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்துவிட்டுப் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் தனது கருத்தைப் பதிவு செய்திருப்பது, சினிமா உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பைசன் கபடி வீரனின் கதை
'பைசன்' திரைப்படம், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. நிவாஸ் கே. பிரசன்னா இசையில் பாடல்கள் பேசப்பட்டன.
கதைக்களம்
தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலையும், குறிப்பாகக் கபடியை ஒரு சமத்துவத்தின் களமாகக் கொண்டாட்டத்துடன் காட்டிய விதமும், சாதிய ஒற்றுமையை ஆழமாகவும் காத்திரமாகவும் பேசிய விதமும், முந்தைய மாரி செல்வராஜின் படங்களைப் போலவே இந்தப் படமும் சிறப்புக்குரிய ஒன்றாகக் கொண்டாடப்படக் காரணம்.
விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜின் கோபம்
'பைசன்' திரைப்படம் பலரால் கொண்டாடப்பட்டாலும், ஹரி நாடார் போன்ற ஒருசிலர் மட்டுமே இந்தப் படத்தை எதிர்த்து, கண்டனங்களைச் சந்தித்தனர். சமீபத்தில் நடைபெற்றப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய மாரி செல்வராஜ், தனது படங்களைச் "சாதிய மோதல்களை உருவாக்கும் படங்களாக" பத்திரிகையாளர்கள் அவ்வப்போது கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் காட்டமான பதிலளித்தார். சமூகத்தின் உண்மையான பிரச்சனைகளை பேசும் தனது படைப்புகள் குறித்த இந்தக் கேள்விகளுக்கு, அவரது கோபமான பதில்கள் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
மணிரத்னம் கொடுத்த பைசன் பட்டம்
மாரி செல்வராஜின் உணர்வுபூர்வமானப் படைப்புக்குக் கிடைத்த மிகப்பெரியப் பாராட்டுதான் மணிரத்னத்தின் விமர்சனம். இயக்குநர் மணிரத்னம், 'பைசன்' படத்தைப் பார்த்த பிறகு, மாரி செல்வராஜுக்கு ஒரு நெகிழ்ச்சியானப் பாராட்டைக் கூறியிருக்கிறார். "இப்போதுதான் நான் பைசன் படத்தைப் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இப்படியான படத்தைக் கொடுத்த நீங்கள் தான் உண்மையான பைசன். உங்களது படங்களைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. தொடர்ந்து இது போல படங்களைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். உங்களுடையப் படங்களும் குரலும் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியம்"
மாரி செல்வராஜின் பதில்
மணிரத்னம் தனது முதல் படமான 'பரியேறும் பெருமாள்'லிருந்து தனதுப் படைப்புகள் அத்தனையும் பார்த்துப் பாராட்டி ஊக்கப்படுத்துவதாகக் கூறிய மாரி செல்வராஜ், "உங்களது அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்" என்று பதிவிட்டு, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
சினிமா உலகில் விமர்சனங்களைச் சந்திக்கும் மாரி செல்வராஜுக்கு, இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்தின் இந்தப் பாராட்டு, அவரது சமூக அக்கறை கொண்ட சினிமாப் பயணத்திற்கான பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications