தனுஷ் கண் முன்னே ரசிகருக்கு நடந்த கொடுமை.. போட்டோ எடுத்தவரை தூக்கி வீசிய பவுன்சர்! அன்புக்கு எல்லை வேண்டாமா?
சென்னை: நடிகர்களை பார்க்க வேண்டும், அவர்களுடன் ஒரு போட்டோவாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்து வருகிறார்கள். சிலர் பல மணி நேரம் காத்திருப்பார்கள். தங்களுக்கு பிடித்த நடிகரை நேரில் பார்த்துவிட்டால் அதுவே வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்த அன்பு சில நேரங்களில் எல்லை மீறும்போது பிரச்சனை உருவாகிறது. அதே போல ரசிகர்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் பாதுகாவலர்கள் நடந்து கொள்ளும் விதமும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் வெளியான ஒரு வீடியோ இப்போ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு ரசிகர் தனுஷுடன் செல்பி எடுக்கிறார். அப்போது பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் அந்த ரசிகரை பிடித்து இழுத்து செல்வதும், கீழே தள்ளுவதும் போன்ற காட்சிகள் இருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் கண் முன்னே நடந்தாலும் தனுஷ் எந்த ரியாக்ஷனும் செய்யாமல் சிரித்த முகமாக அப்படியே இருக்கிறார்.
தனுஷ் ரசிகருக்கு நடந்த அவமானம்
இதை பார்த்த ரசிகர்கள் ஒருவருக்கு நடிகரை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அதற்காக இப்படி நடத்த வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த காட்சிகளை பார்க்கும்போது அனைவருக்கும் ஒரு வித பதற்றம் ஏற்படுகிறது. தனுஷ் உடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையில் அந்த ரசிகர் அருகில் சென்று இருக்கலாம், ஆனால் அடுத்த சில நொடிகளில் அவரை பாதுகாவலர்கள் பிடித்து அப்புறப்படுத்துவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஒரு நிகழ்ச்சியில் நடிகரின் பாதுகாப்பு முக்கியம் தான், அவர்களை சுற்றி கூட்டம் அதிகமாகும் போது கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால் அதற்காக ரசிகர்களை தூக்கி வீசுவது, முரட்டுத்தனமான இழுத்து செல்வது போன்ற செயல்களை நியாயப்படுத்த முடியாது. அந்த ரசிகருக்கும் ஒரு குடும்பம் இருக்கும், நண்பர்கள் இருப்பார்கள். ஆசையாக நடிகரை பார்க்க வந்த ஒருவருக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்தால் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எவ்வளவு வருத்தமாக இருக்கும்? என்பதை பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டாமா?
பொறுப்பு வேண்டும்
அதே நேரத்தில் அந்த வீடியோவில் என்ன நடந்தது என்பதன் முழுமையான பின்னணி தெரியாத நிலையில், பாதுகாவலர்கள் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனாலும் ரசிகர்களை அப்புறப்படுத்தும் விதம் குறித்து எழுதும் விமர்சனங்களை புறக்கணிக்கவும் முடியாது. இன்னொரு பக்கம் ரசிகர்களும் தங்களதுடைய செயல்களை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கிறது.
நடிகர்களை தங்களுடைய ஹீரோவாவும், சில நேரங்களில் கடவுளுக்கு இணையாகவும் நினைத்து அன்பு காட்டுகிறார்கள், அது தவறு இல்லை. ஒரு நடிகரின் படங்களை பார்த்து வளர்ந்து இருக்கலாம், அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் மோட்டிவேஷனாக இருந்திருக்கலாம். அதற்காக அவரைப் பிடித்திருப்பதும் அவர்களுடைய படங்களை கொண்டாடுவது இயல்பான விஷயம்தான். ஆனால் அன்பு என்ற பெயரில் பொது இடங்களில் அவர்களுடைய தனிப்பட்ட இடங்களுக்குள் அத்து மீறி செல்வது சரியல்ல.
கட்டுப்பாடு தேவை
நடிகர் அனுமதி கொடுக்காமல் போட்டோ எடுப்பது, திடீரென கட்டி பிடிப்பது, முத்தம் கொடுக்க முயற்சிப்பது, வழியை மறிப்பது என சில ரசிகர்கள் எல்லை மீறுகிறார்கள். நடிகர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் தனிப்பட்ட இடம், பாதுகாப்பு, குடும்பம் எல்லாமே இருக்கிறது. அதை ரசிகர்களும் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு பிடித்த நடிகரிடம் அன்பு காட்டுவதற்கு அவரை தொந்தரவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ரசிகர்கள் கூட்டம் கூடி விட்டால் அவர்களை கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு பணியாளர்களின் வேலை தான் ஆனால் அதற்காக முறையும் முக்கியம்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது வேறு, ஒருவரை அவமானப்படுத்தும் விதத்தில் நடத்துவது வேறு. தேவையான இடங்களில் போலீஸ் உதவியுடன் கூட்டத்தை பிரிக்கலாம், தடுப்புகள் அமைக்கலாம். ரசிகர்களுக்கு தெளிவான வழிமுறைகளை முதலில் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உடல் ரீதியாக தாக்குவது அல்லது ஆபத்தான முறையில் தூக்கி வீசுவது எந்த சூழ்நிலையிலும் சரியான அணுகுமுறை கிடையாது.
ரசிகர்கள் உயிரிழப்பு
பெரிய அளவில் ரசிகர் கூட்டங்கள் கட்டுப்பாட்டை விளக்கும்போது ஏற்படும் ஆபத்து எவ்வளவு பெரியது என்பதற்கு ஏற்கனவே பல சம்பவங்கள் உதாரணமாக இருக்கின்றன. கடந்த வருடம் கரூரில் நடந்த விஜய்யின் அரசியல் பேரணியில் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். அது போல புஷ்பா 2 பட ரிலீஸின் போது, அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு திடீர் விசிட் செய்ததும் அவரை பார்க்க ஏகப்பட்ட கூட்டம் வந்தது. அப்போது கூட ஒரு பெண் ரசிகை உயிரிழந்தார். இப்படி பல உயிர்கள் இந்த கூட்டத்தால் பறிபோய் இருக்கிறது. ஆனாலும் தங்களுடைய உயிரையும், மரியாதையையும் துச்சமென நினைத்து இதுபோல ரசிகர்கள் நடந்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
