எதிர்நீச்சல் சீரியலில் பேசப்பட்ட ரிதன்யா தற்கொலை விவகாரம்! திருச்செல்வம் சொன்ன மெசேஜ்!
சென்னை: அவிநாசி பெண் ரிதன்யா, வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான ஒரு மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த மெசேஜுக்கு அனைவரும் இயக்குநர் திருச்செல்வத்தை பாராட்டி வருகிறார்கள்.
வரதட்சிணை எனும் பொல்லா அரக்கன் ஒவ்வொரு வீடுகளிலும் பெண்களை கொடுமை செய்துக் கொண்டுதான் வருகிறது. எண்ணிக்கையில் மட்டுமே வித்தியாசப்படுமே தவிர வரதட்சிணை என்பது எல்லா இடங்களில் டிமான்ட் செய்யப்படுகிறது.

ஏழைகளின் வீடுகளில் சில ஆயிரங்களுக்காகவும் ஒற்றை எண்ணிக்கையிலான சவரன்களுக்காகவும், இரு சக்கர வாகனங்களுக்குகாகவும் வரதட்சிணை கொடுமை நடந்து வருகிறது.
பணக்காரர்களின் வீடு என்றால் லட்சங்கள், கோடிகளுக்காகவும் இரட்டை, மூன்று இலக்க எண்ணிக்கையிலான சவரன்களுக்காகவும், காருக்காவும் வரதட்சிணை கொடுமைகள் நடக்கின்றன.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிபுதூர் எனும் பகுதியில் 27 வயதான எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் 78 நாட்களே ஆன நிலையில் கணவரின் உடல் ரீதியிலான தொல்லை காரணமாகவும் மாமியார், மாமனாரின் வரதட்சணை கொடுமை காரணமாகவும் கடந்த மாதம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 300 சவரன் நகை, 70 லட்சம் மதிப்பிலான வால்வோ கார், 2.5 கோடி திருமண செலவு என இருந்த போதிலும் அந்த பெண்ணை மேலும் துன்புறுத்தியுள்ளனர். ரிதன்யாவின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவருடைய கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் பலர் கையெழுத்து இயக்கம் நடத்தி ரிதன்யாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 2025 ஆம் ஆண்டிலும் வரதட்சணை கொடுமையா என கேட்கும் அளவுக்கு கொடுமைகள் நடந்துள்ளன.
இது முழுக்க முழுக்க ஆணாதிக்க சர்வாதிகார போக்கில் நடந்தது. இதே போன்று எதிர்நீச்சல் சீரியலிலும் நன்கு படித்த பெண்களை ஆதி குணசேகரன் என்பவர் ஆணாதிக்க நபர் அந்த பெண்களை எப்படியெல்லாம் மட்டம் தட்டுகிறார் , கொடுமைப்படுத்துகிறார் என்பது குறித்த கதைதான்.
குணசேகரனை பார்த்தாலே பயந்த அந்த வீட்டுப் பெண்கள் தற்போது அவரை எதிர்த்து போராடி வருகிறார்கள். பார்கவியின் அப்பா இறந்ததால் அவரது இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அந்த வீட்டு பெண்கள் போராடி வருகிறார்கள்.
ஜனனி மற்றும் பெண்கள் குணசேகரனை ஜெயிலில் தள்ளி வழக்குப் பதிவு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் பார்கவிக்கு தைரியத்தை வரவழைக்க ஜீவானந்தம் போராடுகிறார். வரதட்சிணைக்காக ரிதன்யா இறந்த சோகத்தையும் பேசி பெண்கள் போராட வேண்டும் என உணர்ச்சி பொங்க சில விஷயங்களை இயக்குநர் திருச்செல்வம் பேசியுள்ளார். பெண்கள் பயந்தால் இது போல் தற்கொலைகள்தான் அதிகரிக்கும். பெண்கள் தைரியமாக போராட வேண்டும் என அவர் அறிவுறுத்தியிருப்பது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications