நான் சாந்தனுவை விட சின்ன பையன்! என் மீது பொறாமை? வெங்கட் பிரபுவும் இப்படி செய்யலாமா? டாக்டர் திவாகர் ஆதங்கம்
சென்னை: சமூக வலைத்தளங்களில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' என தன்னை அழைத்துக்கொண்டு பிரபலமான டாக்டர் திவாகர், சமீபத்தில் நடிகர் சாந்தனு மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்டிருக்கும் வீடியோ, இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 'கருப்பு' திரைப்படத்தில் சூர்யா நடித்த ஒரு காட்சி, திவாகரின் பழைய 'கஜினி' தர்பூசணி வீடியோவை ரீ-கிரியேட் செய்தது போல் இருந்த விவாதத்தில் எழுந்த இந்த மோதல், பெரும் உணர்ச்சிப் போராட்டமாக வெடித்துள்ளது.
சூர்யா vs டாக்டர் திவாகர்
'கஜினி' திரைப்படத்தில் நடிகர் சூர்யா தர்பூசணி பழ காட்சிகளை செய்து பிரபலமான நிலையில், டாக்டர் திவாகர் அதே காட்சிகளை தனது பாணியில் செய்து சமூக வலைத்தளங்களில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்ற பட்டப்பெயருடன் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். இந்த நிலையில், சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தில், 'கஜினி' படத்தின் தர்பூசணி காட்சி ரீ-கிரியேட் செய்யப்பட்டது.
இதையடுத்து, டாக்டர் திவாகர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், "சூர்யா ரீ-கிரியேட் செய்தது என் காட்சியைத்தான்" என்று பதிவுகள் வெளியிடத் தொடங்கினார். இந்த விவாதம் சூடுபிடித்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம், "சூர்யா மற்றும் டாக்டர் திவாகர் - இருவரில் யார் ரீ-கிரியேட் செய்த காட்சி?" என்ற தலைப்பில் ஒரு சமூக வலைத்தளப் பதிவை வெளியிட்டது.

சாந்தனு மற்றும் வெங்கட் பிரபு
இந்த டிவி பதிவுக்குக் கண்டனம் தெரிவித்த நடிகர் சாந்தனு, தனது ட்விட்டர் பக்கத்தில், "தயவுசெய்து இந்த போஸ்டை நீக்குங்கள்!" என்று நேரடியாகக் கருத்து தெரிவித்தார். நடிகர் சாந்தனுவின் இந்தப் பதிவை இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
சாந்தனு மற்றும் வெங்கட் பிரபுவின் இந்தச் செயல், டாக்டர் திவாகரை ஆத்திரமூட்டியுள்ளது. உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சிவசமான வீடியோவை வெளியிட்ட டாக்டர் திவாகர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அந்த வீடியோவில், "நடிகர் சாந்தனு சார், உங்களுக்கு என்மீது ஏன் பொறாமை? நான் உங்களை விட சின்னப் பையன். நான் வளர்ந்து வரும் கலைஞன். என்னை வளரவிடாமல் எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்? உங்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்பதால் என்னை பார்த்து பொறாமையா இருக்கிறதா?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். மேலும், "உங்க அப்பா இயக்குனர் பாக்யராஜ்க்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்தே பெரிய வாய்ப்பு கிடைத்துவிட்டதா? அவரும் சின்ன சின்ன படங்களில் இருந்துதானே வெற்றிப் படங்கள் கொடுத்தாரு? ஆனால் அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டு வளர்ந்து வரும் ஒரு கலைஞரை இப்படி அசிங்கப்படுத்தலாமா? நான் ஒரு நாள் சூர்யாவை விட பெரிய நிலைமைக்கு வரலாம். அப்போது நீங்கள் எங்கே போவீங்க?" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
திவாகரின் ஆதங்கம்
இயக்குநர் வெங்கட் பிரபு குறித்தும் டாக்டர் திவாகர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார். "வெங்கட் பிரபு சாருக்கு என்மீது என்ன கோபம்னு தெரியல. எதற்காக நீங்கள் சாந்தனுவின் போஸ்ட்டை ரீஷேர் செய்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் எனக்கு வாய்ப்பு கொடுங்க. அந்தப் படம் மக்கள் மத்தியில் எவ்வளவு பாராட்டப்படுகிறது என்று பாருங்கள். அதற்குப் பிறகுதான் என்னுடைய திறமை உங்களுக்குத் தெரியும். நான் ஸ்கூல் படிக்கும்போதே நாடகங்கள் நடித்துப் பல விருதுகள் வாங்கி இருக்கிறேன். என்னை பார்த்து எதற்காக நீங்கள் எல்லோரும் பொறாமைப்படுகிறீர்கள் என்று தெரியல," என்று கூறினார்.
தனது தொழில் குறித்துப் பேசிய திவாகர், "நீங்கள் நடிகராக இருந்தாலும் என்னை மாதிரி ஒரு டாக்டராக முடியாது. நான் டாக்டராகப் படித்து பட்டம் வாங்கி இருக்கிறேன். என்னால் நடிகராகவும் இப்போது முடிகிறது. உங்களால் எந்தச் சூழ்நிலையிலும் டாக்டராக முடியுமா?"என்றும் ஒரு சவால் தொனியில் பேசியிருந்தார். இந்த வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இருப்பினும், அவரது இந்த உணர்ச்சிவசமான வீடியோ, சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் திவாகரின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்டாலும், பலரும் ஒரு மூத்த நடிகர் மற்றும் இயக்குநரை நோக்கிப் பேசும் விதத்தைப் பற்றி விமர்சித்து வருகின்றனர். வாய்ப்புகள் கிடைக்காத கலைஞர்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதை வெளிப்படுத்தும் விதம் குறித்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications