Dude box office: பிரதீப் ரங்கநாதனின் சாதனை: 'டியூட்' 100கோடி கிளப்பில் இணைந்தது! 8வது நாள் வசூல்!
சென்னை: தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது தொடர்ச்சியாக மூன்று 100 கோடி ரூபாய் வசூல் படங்களைக் கொடுத்து பாக்ஸ் ஆஃபிஸில் 'மாஸ்' ஹீரோவாக உயர்ந்திருக்கிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'டியூட்' திரைப்படம் விமர்சனம், வசூல் என இரண்டு ஏரியாக்களிலும் 'கில்லியாக' ஓடி, தற்போது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த படத்தின் எட்டு நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியில் இருக்கிறது.

அதிர்ஷ்டத்தை உழைப்பால் வென்றவர்
'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். 'லவ் டுடே' படத்தின் பிரமாண்ட வெற்றி அவருக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று பலரும் விமர்சித்தார்கள். ஆனால், அந்தப் பேச்சை அடுத்து வந்த 'டிராகன்' திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கியது. இதன் மூலம், ஹீரோவாக நடித்த முதல் இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாயை வசூலித்து, பிரதீப் பாக்ஸ் ஆஃபிஸில் தனது 'கெத்'தைக் காண்பித்தார்.
சர்ச்சைகளைக் கடந்த பிரசென்டேஷன்
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த மூன்றாவது படம்தான் 'டியூட்'. இந்தப் படத்தை கீர்த்திஸ்வரன் என்பவர் இயக்குநராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தில் 'பிரேமலு' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த மமிதா பைஜு கோலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.
'டியூட்' படத்தின் கதை, சமுதாயத்தில் உள்ள சில சிக்கலான சமூகப் பிரச்சனைகளை கையில் எடுத்திருந்தது. கொஞ்சம் பிசகினாலும் ஏடாகூடமாகப் பெயர் எடுத்துவிடும் கதையைத்தான் இயக்குநர் கையில் எடுத்திருந்தார். இருப்பினும், அதனை மிக நேர்த்தியாகவும், 2K கிட்ஸ்களுக்கு ஏற்றவாறும், சமூகத்துக்குத் தேவையானதையும் சரியான கலவையில் சொல்லி, இயக்குநர் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்துவிட்டார்.
100 கோடி கிளப்பில் டியூட்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸான இந்தப் படம், தொடக்கம் முதலே அமோக வசூலை அள்ளியது. 'டியூட்' திரைப்படம் வசூலில் 100 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்' என வரிசையாக மூன்று படங்களிலும் 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் ஹீரோ என்ற பெருமையை பிரதீப் ரங்கநாதன் பெற்றிருக்கிறார். இனி அவரது மார்க்கெட் எங்கேயோ போய்விடும் என்பது உறுதி.
எட்டாவது நாள் நிலவரம்
படம் ரிலீஸாகி நேற்றோடு (அக்டோபர் 24) இரண்டாவது வாரம் ஆரம்பிக்கிறது. எட்டாவது நாளில் படம் செய்திருக்கும் வசூல் தொடர்பான தரவுகளை Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று இப்படம் 0.74 கோடி ரூபாயை வசூலித்ததாகவும்; இந்தியாவில் மொத்தம் இதுவரை 57.24 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இரண்டாவது வாரத்தில் படத்தின் மவுசு குறைந்தாலும், செய்ய வேண்டிய வசூல் 'சம்பவத்தை' முதல் வாரத்திலேயே தரமாக செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications