Gandhi Kannadi review: அந்த 9 நிமிஷம், தொண்டையை அடைக்கும்! காந்தி கண்ணாடி பார்த்து ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், தொகுப்பாளராகவும் தனித்துவமான படைப்புகளைக் கொடுக்கும் ஜேம்ஸ் வசந்தன், சமீபத்தில் கே பி ஒய் பாலா நடித்த 'காந்தி கண்ணாடி' என்ற திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். இந்தப் படம், இவரை எந்த அளவுக்கு வியக்க வைத்திருக்கிறது என்பதைப் பற்றி அவர் சமூக வலைத்தளத்தில் ஒரு பெரிய பதிவைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவு, இப்போ திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

வியந்த ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன வெளியிட்ட பதிவில், ஷரீப் என்ற இளம் இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படம், அவருடைய இரண்டாவது படமாம். ஆனால், ஒரு இளம் இயக்குநரிடமிருந்து இப்படி ஒரு முதிர்ச்சியான, தரமான படைப்பை அவர் எதிர்பார்க்கவே இல்லையாம். படத்தில் வரும் கடைசி அரை மணி நேரம், ஒரு அனுபவம் வாய்ந்த, வயதான இயக்குநர் எடுத்தது போல் இருந்ததாம். இது அவருக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.
'காந்தி கண்ணாடி' திரைப்படத்தின் கதை, ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்டதாம். இதில், பாலா மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகன் 'காதல்' படத்தின் இயக்குநரான பாலாஜி சக்திவேல் தானாம்.
சுப்ரமணியபுரம் பாணியில் ஒரு காட்சி
ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்தில் மிகவும் சிலிர்த்துப்போன ஒரு விஷயம், பிரேக் விடும் காட்சிக்கு முன் வரும் ஒரு காட்சியைப் பற்றித்தான். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள், ஒரே ஷாட்டில், அதாவது எடிட்டிங் வெட்டுக்களே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
'சுப்ரமணியபுரம்' படத்தில்கூட இயக்குநர் சசிகுமார் இப்படி ஒரு காட்சியை எடுத்தார். அந்தக் காட்சி, கேமராவும் கதாபாத்திரங்களும் கூடவே நடந்துபோய் ஒரு நேரடி அனுபவத்தைக் கொடுத்தது. ஆனால், 'காந்தி கண்ணாடி'யில், நடிகை அர்ச்சனாவின் க்ளோஸ்-அப் ஷாட்டை மட்டுமே வைத்து, அவர் முகபாவனைகளை மட்டுமே காட்டி, உணர்ச்சிபூர்வமான வசனங்களுடன் அந்தக் காட்சியை எடுத்திருப்பது, ரொம்பவே வித்தியாசமான விஷயமாக அவருக்குத் தோன்றியிருக்கிறது.
நடிகர்களின் அபாரமான நடிப்பு
அந்த ஒன்பது நிமிடக் காட்சியில் நடிகர்கள் பின்னி எடுத்திருக்கிறார்களாம். அர்ச்சனா ஒரு 60 வயது அம்மாவின் இயல்பான முகபாவனைகளை, மிக நுணுக்கமாகவும், சாந்தமாகவும் காட்டியிருப்பது வேறு யாராலுமே இவ்வளவு துல்லியமாகச் செய்ய முடியாது என்று அவர் வியந்துபோயிருக்கிறார்.
அதற்குப் பிறகு, இளம் நடிகை நமீதாவும் மூன்று நிமிடங்கள் தன் உணர்வுகளைக் கொட்டிப் பேசியிருக்கிறார். இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது, நடிகர் பாலா எந்த உணர்ச்சியையும் காட்டாமல், ஒரு குற்ற உணர்வோடு, சொல்ல முடியாத உணர்வுகளை மனதுக்குள் வைத்துக்கொண்டு, சிலைபோல ஒரு முழுநேரம் நின்று நடித்திருப்பது, ஒரு அற்புதமான நிகழ்வு என்று ஜேம்ஸ் வசந்தன் பாராட்டியிருக்கிறார்.
கேமராவும், பின்னணி இசையும் இந்தக் காட்சிகளுக்குப் பெரிய பலமா இருந்ததாம். இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் குழுவின் பின்னணி இசை கடைசி அரை மணி நேரத்துக்குச் சிறப்பாக இருந்ததாக அவர் பாராட்டியிருக்கிறார்.
மொத்தத்தில், 'காந்தி கண்ணாடி' படம் அவருக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த மாதிரியான தரமான படைப்புகள் ரசிகர்களிடம் நிச்சயம் வெற்றி பெறும் என ஜேம்ஸ் வசந்தனின் பதிவு நம்பிக்கை அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications