அப்பா செய்த செயல்! வடிவேலு உடன் மீண்டும் நடிப்பதை விட பிச்சை எடுத்து வாழ்வேன்! நடிகை சோனா ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலும், கவர்ச்சியான வேடங்களிலும் நடித்துக் கவனம் பெற்ற நடிகை சோனா, பிரபல நடிகர் வடிவேலு குறித்து கூறியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, "குசேலன்" படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்திருப்பது விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

சோனா குற்றச்சாட்டு
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் சோனா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் பற்றி பேசி இருந்தார். குடும்ப வாழ்க்கை சினிமா வாழ்க்கை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நடிகர் வடிவேலு பற்றி பேசி இருந்தார். அதாவது "வடிவேலு ஒரு மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவருடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மோசமாக இருந்தது. 'குசேலன்' படத்தின் போது அவர் நடந்து கொண்டது என்னை பலவிதமாக பாதித்தது," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அனுபவம் காரணமாகவே அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார். "அந்தப் படத்துக்குப் பிறகு, 16-க்கும் மேற்பட்ட படங்களில் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், என் சுயமரியாதை முக்கியம் என்பதால் அனைத்தையும் நான் வேண்டான்னு சொல்லிவிட்டேன்," என்று அவர் பேசி இருக்கிறார்.
பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை
மேலும் சோனா பேசும் போது, "ரோட்டில் நின்று பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. ஆனால், என் மரியாதையை இழந்து சம்பாதிக்கும் பணம் எனக்கு தேவையில்லை," என்று கம்பீரமாக பேசி இருக்கிறார். "வடிவேலு நடிப்பில் லெஜெண்ட் தான், ஆனால் மனிதராக அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோனாவின் திரைப்பயணம்
90களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனா, பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் கவர்ச்சியான வேடங்களிலும் நடித்துள்ளார். தனது வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்களை வெளிப்படையாக பல பேட்டிகளில் பேசி இருக்கிறார். அப்படித்தான் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, அவருடைய சொந்த அப்பாவை பற்றி கூட பேசி இருந்தார். என்னுடைய அப்பா ரொம்ப மோசமானவர், ஆண் என்ற திமிர் அவருக்கு அதிகமாக இருந்தது. பெண்கள் என்றாலே செக்ஸுக்காக மட்டும்தான் என்ற நினைப்பு அவருக்கு இருந்தது. என் கண் முன்பே எங்க அம்மாவ ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கிறது. என்னிடமும் ரொம்ப கடுமையா நடந்திருக்கிறார் என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வரும் அவர், தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தையும் இயக்கியுள்ளார்.

வடிவேலுவின் நிலை
மற்றொரு பக்கம், 'வைகைப்புயல்' என்று அழைக்கப்படும் வடிவேலு, தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். 1990களிலிருந்து தொடங்கி பல வெற்றி படங்களில் நடித்த அவர், தனது உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் முகபாவனைகளால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" மற்றும் "மாமன்னன்" போன்ற படங்கள் மூலம் மீண்டும் திரைக்கு திரும்பியுள்ளார்.
எதிர்பார்ப்பு என்ன?
சோனா முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கு வடிவேலு தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை. இதற்கு அவர் எப்படி பதிலளிக்கிறார் என்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரால் கவனிக்கப்பட்டு வருகிறது.













Click it and Unblock the Notifications