நண்டூறுது.. நரியூறுது! கிராமத்து சொலவாடலை வைத்தும் ஒரு பாட்டா? அவர்தான் இளையராஜா!
சென்னை: அந்த காலத்தில் தனது பாடல்கள் மூலம் இள வட்டங்களை எல்லாம் தியேட்டருக்கு கொக்கி போட்டு இழுத்தவர் இசைஞானி இளையராஜா. அவர்தான் பல்வேறு வார்த்தைகளை கொண்டு கிராமத்தின் மண் வாசனை கொண்ட பாட்டுகளை அமைத்து பட்டித் தொட்டியெங்கும் தனது இசையை சேர்த்தார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 70களின் கடைசியில் காலை நேரங்களில் கிராமங்களில் சுள்ளி வெட்டி அடுப்பெரிக்கும் தமிழ்ப்பெண்களுக்கு ஒரே ஒரு பொழுது போக்கு தான்.

ரேடியோ பெட்டியும் அதில் வரும் ராஜா பாடல்களும். எத்தனையோ படிக்காத பெண்களுக்கும், படித்த பெண்களுக்கும் புதிய புதிய வார்த்தைகளை இந்த ரேடியோ பெட்டிகள் ராஜாவின் மூலம் பாட்டாக தந்து கொண்டிருந்தன.
அன்னக்கிளி, செந்தூரப்பூ, பூவரசம்பூ, பூவிழி வாசல், கவிக்குயில் போன்ற வார்த்தைகள் சரளமாக மனதில் பதிந்தது ராஜாவில் பாடல்களால் தான். "வாங்கோன்னா...அட வாங்கோன்னா" என்கிற பாடல்களெல்லாம் அர்த்தமே தெரியாமல் சிறுவர் சிறுமிகள் மாடு மேய்த்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்ததெல்லாம் சுகமான காலம்.
பாட்டு கேட்டதுமே படம் பார்க்காதவர்களை படம் பார்க்க வைக்கும் கலை ராஜாவிடம் உண்டு. "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு...இந்தாம்மா கருவாட்டுக் கூடை முன்னாடிப்போ..." என சமூகத்தின் இரு துருவ மக்களையும் இணைக்கும் வசனங்களை பாடல்களை வைத்த போது என்ன படமென்று நினைக்காதவர் உண்டோ?.. ஓரம்போ... ஓரம்போ..ருக்குமணி வண்டி வருது பாடலில் சைக்கிளில் மோதி விழும் பாட்டி, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலில் வரும் அந்த முரண்பாடான விடுகதை வார்த்தைகள், வெத்தலை வெத்தலை வெத்தலையோவில் வரும் மொத ஆசிர்வாதம் நான் தான் பண்ணுவேன் என்கிற கிழவனும், ஏழு தோலா பாதாமும் பிஸ்தாவும், மூணு தோலாவுக்கு முந்திரி திட்சையும் வாங்கி வரச் சொல்லும் பயில்வானும், கோவில் மணி ஓசை தன்னை பாடியதும் பாஞ்சாலி பாஞ்சாலி எனச் சொல்லும் கிளி... இவையெல்லாம் படத்தை பார்க்காத இளவட்டங்களையும் தியேட்டருக்குள் இழுத்து வரும் ராஜாவின் கொக்கிககள் தானே..
அன்றைய கிராமங்களையும் அதன் அழகான நாட்களையும் காலக் கண்ணாடியாக காட்டிக் கொண்டிருந்த பாடல்களும் இவை தானே. கண்டேன் எங்கும் ஊர்வலம் பாட்டில் வரும் காற்றினிலே வரும் கீதம் பாடலில் கீதம் முடியும் முன்பே தொடங்கும் காற்றினிலே போன்ற எதிரொலியின் அமானுஷ்யத்தை ராஜாவால் பாடல்களிலேயே காட்ட முனைந்த ஆச்சர்யம்.
வாழ்வே மாயமா பெருங்கனவா என பாடும் போதே அந்தப் பெண்ணின் துயருறும் வேதனையின் வெளிப்பாடுகள். நண்டூருது... நரியூறுது என்கிற கிராம குழந்தைகளை கிச்சுகிச்சு மூட்டும் சொல்லாடலை வைத்து தங்கையின் பிரிவை உணர்த்தும் அண்ணன்.. எந்த திருவிழாவானாலும் உச்ச சப்தத்தில் வைக்கப்படும் 'பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி...மின்னுது மின்னுது பச்சைக்கல் மூக்குத்தி', 'காவேரிக்கர ஓரத்திலே. ஏலாலம்பர ஏலா.. தண்ணிக் கொண்டு வரும் நேரத்துல.. ஏலாலம்பர ஏலா...'வெல்லாம் களை கட்டி உள் மனதில் ஏற்படுத்தும் திருவிழா உற்சாகம்..
நல்ல மழை இரவில் வரும் 'தண்ணி கருத்திருச்சி' பாடலின் இசையோடு கூடிய கிறக்கம் எத்தனை வயாகராவுக்கு சமமான கிறக்கம். கிராமத்து ஜோடிகளின் இசைவான சிக்னல் பாட்டாக இருந்ததுவும் மழையின் மண்வாசத்தோடு கலந்ததுவும் இது தானே.. ஆழக்கடலில் தோன்றிய முத்து, அடடடட மாமரக்கிளியே, அழகியகண்ணே, ஒன்ன நம்பி நெத்தியிலேயெல்லாம் பெண்குரல்களில் வந்த சோக இழை கீதங்கள்.. கடைத்தேங்காயோ பாடலில் வரும் 'எங்கரத்னம்...தங்கரத்னம்...' வரிகளெல்லாம் வாண்டுகள் பாடிக் கொள்ளும் பாட்டுகள்..
கோவில் மணி ஒலிக்க வான் மேகங்களே..., நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாட்டில் வரும் சின்னமனூர் வாய்க்கா சேலுக்கெண்ட மீனு, ப்ரியா படத்தில் வரும் டார்லிங்..டார்லிங்..டார்லிங்..மனைவியை டார்லிங்னும் கூப்பிடலாமா..., தன்னை மறந்து மண்ணில் விழுந்த இளமை எனும் பூங்காற்று...கிராமத்து காற்றில் பஞ்சாயத்து ரேடியோவிலிருந்து ஊர் முழுக்க கேட்கும் காலை நேரம் கதிரவன் உதித்து நீராகராம் குடித்து ஆடு மாடுகளை ஓட்டிச்செல்லும் நேரம்.. நிச்சயம் மாட்டுக்காரன் பாடுவான்..பொன்னாரம்...பூவாரம்...கண்ணோரம்....சிங்காரம்...
அப்பனே...அப்பனே பிள்ளையாரப்பனே... போடவா தோப்புக்கரணம் போடவா... யானைக்கு தோப்புக்கரணம் போட்ட ரஜினியும், வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி என கோபத்தோடு 'கமான் கிளாப்' எனச் சொல்லும் கமலும் அன்று இளைஞர்களின் ஆதர்ச நாயகர்கள்...
குழந்தைகளோடு அவர்கள் பாடிய காட்டிலொருசிங்கக்குட்டியாம், ஆடுங்கள் பாடுங்கள் எல்லாம் அழகுப்பாடல்கள். குழந்தைகளெல்லாம் சேர்ந்து கூத்தடிக்கும் தோப்பிலோரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே பாடல் அழகான விளையாட்டு. மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டே செல்லும் மாடுகளின் சலங்கை சத்தத்தில் 'என்ன பாட்டு பாட என்ன தாளம் போட..நிக்காதே ஓடு...இது சர்க்காரு ரோடு..' பாட்டெல்லாம் ராஜாவின் தனி ஜாலம்.
மாட்டு வண்டிப் பயணமே மறந்து போன காலத்தில் இந்த பாடல் இப்போது கேட்டாலும் மாடுகளின் ஓட்டம் நெஞ்சில் இனிக்கிறது. சிவாஜி என்கிற பெல்பாட்டம் நாயகனின் ஃபேவரைட் லிஸ்ட்டுகள்... பூப்போலே ஒரு புன்னகையில், நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, எந்தன் பொன் வண்ணமே, தேன் மல்லிப்பூவே பாடல்களெல்லாம் சிவாஜியின் நடிப்பை கண் முன்னே நிறுத்தும் காவியங்கள்.
ஒரு கலைஞன் தன் இசையால் அவன் வாழ்ந்த காலத்தை, சூழ்நிலையை, வாழ்வியலை சொல்ல முடியும் அப்படி சொன்னான் என்று சொன்னால் அது நிச்சயம் இளையராஜா ஒருவரால் மட்டுமே முடிந்தது. இப்போது மேலே நான் சொன்ன இந்தப்பாடல்களின் மூலம் அந்த காலகட்டத்தை இசையால் உணர்த்தி இருப்பார்.
இந்த காலகட்ட இசை மாட்டு வண்டி, குலவைச் சத்தம், கோவில் மணி, உரல் இடிப்பது போன்ற அக்கால நிகழ்வெல்லாம் ஒரு கட்டத்தில் ராஜாவே மறந்து போன ஒன்று. ஆம்... அப்போது இளைய ராஜா இசைஞானியாக மாறி இருந்தார். ராஜா இசைஞானியானதும் மறந்தது இந்த காலச்சூழலை பிரதிபலிக்கும் பாடல்களைத்தான்...
கொஞ்சமாவது கலாச்சாத்தையும், வாழ்வியலையும் உணர்த்தியது ராஜா மட்டுமே... அதனாலேயே காலம் கடந்தும் நிற்கிறார். டிஸ்கோ இசை 80ல் நுழைந்ததுமே அந்த கிராமிய ராஜா காணாமல் போனது நம் துரதிர்ஷ்டமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications