அருணாசலம் படத்தில் மாத்தாடு மாத்தாடு மல்லிகே பாடல் உருவான சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?
சென்னை: "அருணாசலம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "மாத்தாடு மாத்தாடு மல்லிகே" எனும் பாடல் உருவான விதம் குறித்து அதை எழுதிய பாடலாசிரியர் பழனி பாரதி விளக்கியுள்ளார். இதை கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது.
பத்திரிகைத் துறையிலிருந்து வந்த முக்கிய கலைஞர்களில் ஒருவர் பழனி பாரதி. இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். சென்னையில் படிப்பை முடித்த இவருக்குச் சினிமாவின் மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது.

"நெருப்புப் பார்வைகள்" என்ற கவிதைத் தொகுப்பை எழுதி, இலக்கிய உலகில் பாராட்டுப் பெற்றார் பழனி பாரதி. உவமைக் கவிஞர் சுரதா, "இதோ ஒரு மகாகவி புறப்பட்டுவிட்டான்" எனப் பாராட்டியிருந்தார்.
1991 ஆம் ஆண்டு வெளியான விக்ரமனின் "பெரும்புள்ளி" படத்தில் முதல் பாடலை எழுதினார். அதன் பிறகு "புதிய மன்னர்கள்", "முறைமாமன்", "மேட்டுக்குடி" உள்ளிட்ட படங்களுக்கும் பாடல்களை எழுதியிருந்தார்.
விஜய்யின் "பூவே உனக்காக" என்ற படத்தில் பழனி பாரதி அத்தனை நேர்த்தியாகப் பாடலை எழுதியிருந்தார். கார்த்திக்கின் "உள்ளத்தை அள்ளித்தா", சரத்குமாரின் "சூர்யவம்சம்", அஜித்தின் "உல்லாசம்", ரஜினியின் "அருணாசலம்" உள்ளிட்ட படங்களுக்குப் பழனி பாரதி பாடல்களை எழுதியிருந்தார்.
இளையராஜா இசையில் உருவான "காதலுக்கு மரியாதை" எனும் திரைப்படத்தில் அன்றாடம் முணுமுணுக்கும் அளவுக்குப் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார்.
"இளங்காத்து வீசுதே", "என்னவளே என்னவளே", "ஒளியிலே தெரிவது தேவதையா", "பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி", "முன் பனியா முதல் மழையா", "ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்", "ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்", "சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும்" எனப் பல முன்னணி நடிகர்களின் பாடல்களுக்குத் தனது வரிகளை வழங்கியுள்ளார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பழனி பாரதி எழுதியுள்ளார். இவர் "அருணாசலம்" படத்தில் எழுதிய "மாத்தாடு மாத்தாடு மல்லிகே" பாடல் மிகவும் வித்தியாசமானது.
ரஜினிகாந்தின் தங்கைக்குத் திருமணம் நடக்கும். இதனால் திருமணத்திற்கு முந்தைய சடங்குகளுக்கு ஏராளமான உறவினர்கள் வந்திருப்பார்கள். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் பாடும் பாடல்தான் இந்த "மாத்தாடு மாத்தாடு மல்லிகே" ஆகும்.
பழனி பாரதியிடம் இந்தப் பாடலுக்கான சூழலை (situation) சுந்தர்.சி தெரிவித்தார். அதாவது, ஒரு கல்யாண வீட்டில் சந்தோஷமாகப் பாடும் பாட்டு. அதில் மங்களப் பொருட்களை விடுகதையாகக் கேட்பது போலவும், அதை வைத்துப் போட்டி நடத்துவது போலவும் பாடல் இருக்க வேண்டும் எனக் கேட்டாராம்.
வேண்டுமானால் விடுகதைப் புத்தகங்களை தரவா எனக் சுந்தர்.சி கேட்டபோது, தன்னிடம் இருப்பதாகப் பழனி பாரதி தெரிவித்தாராம். அப்படி எழுதப்பட்டதுதான் இந்தப் பாடல்!
விடுகதை 1
அப்பாவி ஆனாலும்...
அடிமேல் அடி வாங்கும்...
அடிச்சாலும் ஊர் கூடி...
ஆஹான்னு சொல்லுது... என்னது...
பதில் 1
அடி மேல் அடி வாங்கி...
அனைவரையும் சொக்க வைக்கும்...
மேளக்காரன் கொண்டு வந்த...
மிருதங்கம்தான் நீ சொன்னது...
விடுகதை 2
ஒல்லி ஒல்லி சுப்பன்தா...
ஒத்தக் காலு கருப்பன்தா...
ஒரு காலு இருந்தாலும்...
ஊன்றது மேடையில்தான்... யாரது...
பதில் 2
ஒல்லி ஒல்லி சுப்பையா...
ஒத்தக் காலு கருப்பையா...
நீ சொன்ன ஜாடையெல்லாம்...
ஊது பத்திதான் அது சொன்னது...
விடுகதை 3
தாளமில்லா ஆட்டம் அது...
தப்பான ஆட்டம் அது...
பொம்பளைக்குப் பிடிக்காத ஆட்டம் அது...
என்னது... என்னது...
பதில் 3
சுத்தி சுத்தி ஆடுறது...
துட்டு கட்டி ஆடுறது...
பொம்பளைக்குப் பிடிக்காத...
சூதாட்டம்தான் அது சொன்னது...
விடுகதை 4
மூணு கிளி மூணு நிறம்...
மூணுக்குமே வேற குணம்...
கூண்டுக்குள்ளே போட்டதுமே...
அத்தனையும் சிவப்பு நிறம்... என்னது...
பதில் 4
வெத்தலையும் சுண்ணாம்பும்...
வெட்டி வச்சா கருப்பாகும்...
ஒன்னாக சேரும்போது...
சிவக்கிற தாம்பூலம்தான் அது...
விடுகதை 5
ஒருத்தனுக்கு கைக்கொடுத்தா...
ஒருத்தனுக்குக் கால் கொடுத்தா...
ஒருத்தரதான் மாரோட கட்டிக்கிட்டா...
பொம்பள யாரது...
பதில் 5
வளையலுக்குக் கைக்கொடுத்தா...
கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா...
முந்தானைச் சேலையைத்தான்...
மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை...
விடுகதை 6
ஒருத்தனத்தான் கழட்டிப்புட்டா...
ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா...
ஒருத்தனத்தான் கையோட வச்சுக்கிட்டா...
பொம்பள யாரது...
பதில் 6
இளங்கன்றைக் கழட்டிப்புட்டு...
பசுமாட்டைக் கட்டிப் போட்டு...
கையோட வச்சிருந்தா...
பால் சொம்புதான் அது வேறெது...
இவ்வாறு இந்தப் பாடலில் 6 விடுகதைகள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications