Joy: மாதம்பட்டி ரங்கராஜன் சொல்லி தான் நான் அப்படி செய்தேன்! ஸ்ருதி அறிக்கைக்கு பதில் வீடியோ வெளியிட்ட ஜாய்!
சென்னை: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா இடையேயான குடும்ப பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வந்த நிலையில், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா, ஜாய் கிரிஸில்டா பணம் பறிக்கும் நோக்குடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, அதற்கான ஆதாரங்களையும் (வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் கடித பகுதிகள்) வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜாய் கிரிஸில்டா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு, சுருதியின் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கமளித்துள்ளார்.

ஜாய் கிரிஸில்டாவின் வீடியோ விளக்கம்
நேற்று ஸ்ருதி பிரியா வெளியிட்ட அறிக்கையில், ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம் பணம் பறிப்பதும், குடும்பத்தை நாசமாக்குவதும் தான் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜாய் கிரிஸில்டா, தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். "அவங்க சொன்ன மாதிரி நான் சோசியல் மீடியா பிரபலம் கிடையாது. வீடியோ வெளியிட்டு எனக்கு பிரபலமும் இல்லை. சமீபத்தில் தான் இரண்டு வீடியோக்கள் வெளியிட்டேன். அதுவும் என்னை பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் கொடுப்பதற்காகத் தான்" என்று கூறினார்
பணம் கேட்டதன் மர்மம்
ரங்கராஜிடம் பணம் கேட்பது ஏன் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜாய், "மாதம்பட்டி ரங்கராஜன் என்னுடன் வாழ்ந்தபோது எல்லாரிடமும் என்னை மனைவி என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். எங்கள் இருவருக்கும் கல்யாணமும் நடந்திருக்கிறது." "அவர் சொல்லி நான் ஒருவரிடம் 8 லட்சம் பணம் கடன் வாங்கி இருக்கிறேன். அந்த கடனைக் கொடுப்பதற்காகத்தான் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு நான் ஒரு கடிதம் எழுதி இருந்தேன். எனக்கு பொதுவாக யாரிடமும் கடன் வாங்குவதுப் பிடிக்காது. ஒரு சூழ்நிலை எங்களுக்குள் வந்த போது மாதம்பட்டி ரங்கராஜ் தான், 'நீ இப்போது கடன் வாங்கிக்கொள், நான் உனக்கு இதைச் சீக்கிரமாகக் கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதனால் தான் நான் நம்பி வாங்கினேன்." என்று விளக்கமளித்துள்ளார்.
கணவர் என்ற உரிமை
"அதற்கு பிறகு, நான் என்னுடைய புருஷனிடம் இது பற்றி கேட்காமல் வேறு யாரிடமும் கேட்க முடியுமா? அதுபோல எனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது, பிரச்சனைகள் இருக்கிறது என்று எல்லாமே மாதம்பட்டி ரங்கராஜனுக்குத் தெரியும். அதனால்தான் நான் இப்போது எனக்கு 10 லட்சம் வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அது மாதம்பட்டி ரங்கராஜிடம் தர வேண்டும் என்று நான் சொல்லவில்லை," என்று பணம் கேட்பதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்.
முதல் மனைவிக்கு மெசேஜ் அனுப்பியதன் காரணம்
ஜாய் கிரிஸில்டா, ஸ்ருதி பிரியாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாக ஸ்ருதி வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்களுக்கும் பதிலளித்துள்ளார். "மாதம்பட்டி ரங்கராஜுக்கு என் மீது அதிகமானப் பொசஸிவ்னஸ் உண்டு. அவர் என்னைக் யாரிடமும் பேச விட மாட்டார். அவருக்கு அது பிடிக்காது என்பதால் நானும் என்னுடைய நட்புறவை குறைத்துக் கொண்டேன்."
"அதே நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பல பொய்களை சொல்லி மாட்டி இருக்கிறார். அப்படி அவர் பொய்களை சொல்லி மாட்டும்போது தான், அது பற்றிய தகவலை தெரிந்து கொள்வதற்காக நான் ஸ்ருதி பிரியாவிற்கு மெசேஜ் செய்திருந்தேன். அதற்கு முன்பு நான் பலமுறை அவருக்கு கால் செய்தேன், அவர் ஒரு முறை கூட எடுக்கவில்லை." "அவருக்கு வாட்ஸ்அப் அனுப்பும்போதும் கூட, ரங்கராஜ் சொல்லிய விஷயங்களை தான் நான் டைப் பண்ணி அனுப்பினேன். அந்த மெசேஜ் அனுப்பும் போது ரங்கராஜ் என் பக்கத்தில் தான் இருந்தார்" என்று அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
மாறிய வாக்குமூலங்கள்
மகளிர் ஆணையத்தில் ரங்கராஜ் ஒரு மாதிரியும், வெளியே ஒரு மாதிரியும் பேசுவதாகவும் ஜாய் குற்றம் சாட்டினார். தனது குழந்தை குறித்தும் அவர்கள் பேசுவது தனக்கு வருத்தமளிப்பதாகவும் ஜாய் இந்தப் பேட்டியில் மனம் உருகிப் பேசியிருக்கிறார்.
தான் மிரட்டலின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும், இது பணம் பறிக்கும் நோக்குடன் நடந்தது என்றும் ரங்கராஜ் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார். தனது கணவருக்கு ஆதரவாக வந்த ஸ்ருதி பிரியா, ஜாய் அனுப்பியக் கடிதத்தில் பணம், வீடு, விவாகரத்து போன்ற கோரிக்கைகள் இருந்ததை ஆதாரமாகக் காட்டி, ஜாயின் நோக்கம் பணம் பறிப்பது தான் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications